மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனமக்களிடையேயான வன்முறைகள் 3 மாதங்களாக தொடருகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்களது மீதான மைத்தேயி மக்களின் வன்முறைகளைத் தடுக்கவில்லை என்பது குக்கி இன மக்களின் அதிருப்தி. குக்கி இன மக்கள், மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்களுடன் நெருங்கிய தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். குக்கி இனமக்கள், இனி மைத்தேயி இனக்குழுவுடன் இணைந்து வாழ முடியாது என்பது வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது போல குக்கி இனக் குழுவினருகு தனி தன்னாட்சி கவுன்சில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஆனால் குக்கி மக்களுக்கு தனி தன்னாட்சி கவுன்சில் வழங்கினால் மிசோரம் மாநிலத்துடன் அப்பகுதிகளுடன் இணைந்துவிடும் என்கின்றனர் எதிர்பார்ப்பாளர்கள். மணிப்பூர் மாநில அரசியலில் இந்த பிரச்சனை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தி, கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இம்மாநில சட்டசபை கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது இது 37 ஆக குறைந்துள்ளது. மேலும் மணிப்பூரில் முதலமைச்சர் பைரேன் சிங் அரசுக்கான ஆதரவையும் இக்கூட்டணி வாபஸ் பெற்றுள்ளது. குக்கி எம்.எல்.ஏக்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். ஆனால் மைத்தேயி கட்சிகள் அமைப்பானது, குக்கி மக்கள் தன்னாட்சி கவுன்சில் கோரிக்கையைவிட வேண்டும்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவோம் என்கிறது. இதேபோல மணிப்பூர் மாநிலத்தின் நாகா இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு செல்ல மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநில அரசானது நாகா மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனிடையே மணிப்பூரில் வன்முறைகள் தொடர்பாக 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் கொள்ளையடித்து சென்ற 1,195 ஆயுதங்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்துக்கு 10 கம்பெனி மத்திய ஆயுதப் படை காவல்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.