‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது..!

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த கோஷம் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால், ஹரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் கோஷத்தை அங்கீகரித்து பேசினார். ஹரியானாவில் இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் இக்கோஷம், பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டதாக கருதப்படுகிறது. இது தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவின் அதிகாரபூர்வக் கோஷம் என்றானது. இதை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்திலும் தொடரும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்ப்பவர்களில் ஒருவரான பாஜக MLA பங்கஜா முண்டே பேசுகையில், உத்திரபிரதேச மாநிலம் போன்ற மாநிலங்களில் எடுபடும் இந்த கோஷம் மகாராஷ்டிராவில் தேவையில்லை. ஏனெனில் இங்கு வட மாநிலங்கள் போன்ற அரசியல் சூழல் இல்லை. எனவே எங்கள் கட்சியை சேர்ந்தவர் எழுப்புகிறார் என்பதற்காக அதை நாங்களும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.