ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள தொகுதிகளுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. இந்நிலையில் பாஜக நேற்று 44 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே பாஜக தமது 44 வேட்பாளர்களைக் கொண்ட முதலாவது பட்டியலை திரும்பப் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது.
இதன் பின்னர் வெறும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே பாஜக அறிவித்தது. இந்நிலையில் பாஜக அறிவித்த 15 வேட்பாளர்களில் பலருக்கும் உள்ளூர் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டங்களை நடத்தினர். ஜம்மு வடக்கு தொகுதியில் ஓமி கஜூராதான் வேட்பாளர் என அவரது வேட்பாளர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஷியாம் லால் ஷர்மாவுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் ஓமி கஜுரா ஆதரவாளர்கள் நேற்று ஶ்ரீநகரில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் ஓம் கஜூராவுக்கு சீட் தராவிட்டால் கூண்டோடு கட்சியை விட்டே ஓடிப் போவோம் எனவும் பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஓம் கஜூரா ஆதரவாளர்கள் கூறுகையில், ஓட்டுப் போட தொடங்கியது முதலே பாஜகவில்தான் இருக்கிறோம்.
44 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான போதே தொண்டர்கள் கொந்தளித்தனர். ஆனால் அதை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் அதே தவறை பாஜக மேலிடம் செய்து 15 வேட்பாளர்களை அறிவித்திருப்பதை எப்படி ஏற்பது என்கின்றனர். மேலும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங், முன்னாள் அமைச்சர்கள் சத் பால் ஷர்மா, பிரியா சேதி, ஷாம் லால் சவுத்ரி ஆகியோரது ஆதரவாளர்களும் டெல்லி தலைமைக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். 18 ஆண்டுகளாக உழைத்தும் நிராகரிப்பா?: இதேபோல தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் ஜகதீஷ் பகத், 18 ஆண்டுகளாக பாஜகவுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
எஸ்.சி. மோர்ச்சாவின் தலைவராகவும் பணியாற்றினேன். ஆனால் 2 நாட்களுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோகன் லால் பகத்துக்கு சீட் கொடுத்துவிட்டு என்னை நிராகரித்துவிட்டது டெல்லி மேலிடம் என ஆவேசப்படுகிறார். அத்துடன் பாஜகவால் நிராகரிக்கப்பட்ட மூத்த தலைவர்கள் பலரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து இன்று சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் பாஜகவில் மிகப் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.