பத்லாபூர் விவகாரத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைக்கும் சரத் பவார்..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உடல்நலன் குன்றியதால் விவரமறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை அறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், பத்லாபூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசினார். அப்போது, “ஒரு பள்ளியில் இதுபோன்ற குற்றங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அனைவரும் அதையேதான் வேண்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். உள்துறை அமைச்சகமும் தேவைப்படும் இடங்களில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்லாபூர் மழலையர் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பின்பு, மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. துரதிருஷ்டவசமாக மாநிலத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுக்கின்றனர். தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர். சனிக்கிழமை ஒருநாள்‘பந்த்’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று சரத் பவார் தெரிவித்தார்.