புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் முதலமைச்சராக ரங்கசாமி ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
அரசியல் ரீதியாக என்.ஆர்.காங்கிரஸ் பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. அலங்கோலமான ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார்.எது நடந்தாலும் பரவாயில்லை தனது முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளார்.
இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைப்படி பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் நடைபெற வேண்டும். அதனை அதிகாரிகள் திறம்பட நடத்த வேண்டும் என அந்த வீடியோவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.