நாஞ்சில் சம்பத்: அண்ணாமலை சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது..!

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.