திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி: “பாஜகவுடன் கூட்டணியா..!? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்..!”

தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு,சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இன்று காலை 10.30 மணி அளவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் நடைபெற்ற சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “திண்டுக்கல்லில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு திண்டுக்கல்லே சாட்சி. காட்சி மாறுவதற்கு ஆட்சி மாறவேண்டும்.

அண்ணா தொடங்கிய கட்சியை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் தனது மகனை துணை முதலமைச்சர் ஆக்கியுள்ளார். அடுத்து இன்பநிதி துணை முதலமைச்சராக ஆக்கப்படுவார் என நினைக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா நடக்காதா என்பதை ஆளுங்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தேவையில்லாமல் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறோம். மாநாட்டைத் தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனி தான் பார்க்க வேண்டும். தற்போது எந்த விமர்சனமும் விஜய்க்கு எதிராக கிடையாது.

2026 தேர்தலை சந்திக்க இன்னும் 16 அமாவாசைகள் இருக்கின்றன. 10 அமாவாசை முடிந்தவுடன் திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் எடப்பாடியுடன் சேர்ந்து கொள்வார்கள். மக்களும் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கு தயாராக உள்ளனர். கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க நாங்கள் தயார். ஆனால், கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயக கடமை.

அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும். பாஜக உடனான கூட்டணி குறித்து இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. சூழ்நிலையை பொறுத்துத்தான், தேர்தல் வரும்பொழுது தான் அதுகுறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. இப்போது நாங்கள் பாஜகவுக்கு எதிரி. ஆனால், இன்னும் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார்.