வங்கி மற்றும் ஏடிஎம்களில் கொள்ளையடிக்க வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ‘கிரிமினல் டூர்’போல வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
கேரள திருச்சூர் மாவட்டத்தில் 3 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து, அவற்றிலிருந்த ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிடிபட்டது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜூமாத்தின் என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்தக கும்பல் தமிழகத்தில் ‘கிரிமினல் டூர்’போல வந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், குமாரபாளையம் வழியாக கன்டெய்னர் லாரியில் தப்பமுயன்ற வடமாநில கொள்ளையர்களைப் பிடிப்பதில் நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம். எனினும், பொதுமக்கள் மற்றும் காவல் துறை வாகனங்களை மோதிவிட்டு, அக்கும்பல் தப்ப முயன்றது.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஹரியானா மாநிலத்தில் இருந்து கார், கன்டெய்னர் லாரியில் தனித் தனியாகச் சுற்றுலா வருவதுபோல தமிழகத்துக்குள் வருவார்கள். இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வருவதில்லை.
இவர்கள் வெளியில் எங்கும் தங்குவதில்லை. லாரியில் இரவில் தங்கிக்கொண்டு, அங்கேயே உணவு தயார் செய்து சாப்பிடுவார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கன்டெய்னர் லாரியில் காரை ஏற்றிக் கொண்டு தப்பிவிடுவர்.
இவர்கள் ‘கிரிமினல் டூர்’ குற்றவாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 2017-ல் நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேடு பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் கார் மற்றும் லாரியில் வடமாநிலத்தில் இருந்துவந்தவர்கள்தான் என தெரிவித்தார்.