காண்போரை பதைபதைக்க வைத்த அருந்ததியர் வீட்டை உடைத்து சூறையாடிய கும்பல்..!

வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடி கொடூர தாக்குதலில் 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 15 பேர் கொண்ட கும்பலை காவல்துறை தேடி வருகின்றனர். சேலத்தை அடுத்துள்ள இரும்பாலை பெருமாம்பட்டி பூசநாயக்கனூர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த போட்டோகிராபர் சதீஷ்குமார். இவரது அண்ணன் மகன் விஜய், நேற்று மதியம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றுள்ளார்.

அங்குள்ள காலி நிலத்தில் நாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுவர்கள் மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற விஜய், பெண்கள் செல்லும் வழியில் ஏன் அமர்ந்து மது அருந்திக் கொண்டுள்ளீர்கள் என கேள்வி கேட்டதில் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, நாயக்கன்பட்டிக்கு சென்றனர். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் அருந்ததியர் தெருவில் உள்ள சதீஷ்குமார் வீட்டிற்கு நாயக்கன்பட்டியை சேர்ந்த கலையரசன், பூவரசன், அவரது நண்பர்களான நந்தகுமார், பொட்டுகண்ணன், பசுபதி, மணி, சொக்கன், சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் கும்பலாக வந்துள்ளனர்.

அவர்கள், சதீஷ்குமாரிடம் உனது அண்ணன் மகன் விஜய்யை எங்கே எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். உடனே சதீஷ்குமார், அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாது எனக்கூறியபடி தனது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அப்போது ஆத்திரமடைந்த கும்பல், வீட்டு கதவை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தனர். அதே நேரத்தில் 4 பேர் வீட்டின் மேற்கூரையில் ஏறி, ஆஸ்பெட்டாஷ் ஷீட்டை உடைத்து, உள்ளே குதித்தனர்.

வீட்டிற்குள் இருந்த டிவி, கம்ப்யூட்டர், சுவிட்ச் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி, வீட்டை சூறையாடினர். மேலும் வீட்டின் உள்ளே இருந்த சதீஷ்குமாரையும் கொடூரமாக தாக்கி சக்கிலி நாயே உங்களுக்கு இவ்வளவு ஆயிடுச்சா என பேசிக்கொண்டே தாக்கியுள்ளனர் என தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அந்த தெருவில் நின்றிருந்த அக்கம் பக்கத்தினர் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிலர் தடுக்க வந்தனர். அவர்களையும் அக்கும்பல் விட்டு வைக்காமல் கற்கலால் தாக்கினர். அவ்வழியே காரில் வந்த ஜெயக்குமார் என்பவர், தனது காரை நிறுத்தி விட்டு, ஏன் இப்படி தாக்குகிறீர்கள் எனக்கேட்டார்.

உடனே அக்கும்பல், அவரது கார் கண்ணாடியை உடைத்துவிட்டு, ஜெயக்குமாரையும் தலை, கை, காலில் தாக்கினர். அவர், ஓட்டம் பிடித்தார். துரத்திச் சென்று தாக்கியபோது, அங்கிருந்த செல்வராஜ், வெங்கடாசலம் ஆகியோர் தடுத்தனர். அப்போது அவர்களையும் தலையில் செங்கல், ஓடுகளால் கொடூரமாக தாக்கினர். பின்னர், 15 பேர் கும்பலும் அங்கிருந்த தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் போட்டோகிராபர் சதீஷ்குமார், ஜெயக்குமார், செல்வராஜ், வெங்கடாசலம் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

இதனிடையே வீட்டை உடைத்து, உள்ளே புகுந்து கும்பல் தாக்குதலில் ஈடுபடும் வீடியோ, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதலங்களில் வைராக பரவியது. எத்தனை தொடர்ந்து, இரும்பாலை காவல்துறை வழக்கு பதிவு செய்து வீட்டை சூறையாடி கொடூரமாக தாக்கிய கும்பல் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் கலையரசன், பசுபதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை உடைத்து, உள்ளே புகுந்து கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.