சீனாவில் உருவாகிப் பரவி வரும் புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். வுஹான் மாகாணத்திலிருந்து பரவி வரும் இந்த வைரஸினால் சீனாவின் 13 நகரங்களில் சுமார் 41 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் அச்சுறுத்தலினால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளாதால் வுஹானில் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
அறிகுறிகள்
கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றி பரவுவதாகும். இதன் நோய் அறிகுறிகளாக சாதாரண ஜலதோஷம் முதல் தீவிர மூச்சுக்குழல் சிக்கல்கள், உடனடி நுரையீரல் பாதிப்பினால் மூச்சுத் திணறல் ஆகியவை மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்துள்ளது.
பரவும் முறை
மற்ற தொற்று வைரஸ்கள் பரவுவது போல்தான் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, இந்த வைரஸ் பாதித்த மனிதர்களின் உமிழ்நீர், தும்மல் மூலமாகவும் இவர்களுடன் கைகொடுத்தல் போன்ற உடல் ரீதியான தொடர்புகளினாலும் மற்றவர்களுக்குப் பரவுகிறது. அல்லது இந்த வைரஸ் ஏதோ இடத்தில் இருக்க அந்த இடத்துடன் உடல் ரீதியாகத் தொடர்பு ஏற்பட்டு நாம் நம் வாய், கை, கண் போன்றவற்றில் கையை வைக்கும் போதும் பரவுகிறது.
தலைவலி, சளி, இருமல், தொண்டைக் கட்டு, காய்ச்சல், கடும் தும்மல், களைப்பு இதோடு கடும் ஆஸ்துமா, நிமோனியா, பிராங்கைட்டிஸ் எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றை நோய் அறிகுறிகளாக தெரிவித்துள்ளன.