கானா பாடகி இசைவாணி “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருந்தார். அந்த “ஐ ஆம் சாரி ஐயப்பா” பாடல் ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்க தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அந்த புகார் மனுவில், இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் மார்கழியில் மக்கள் இசை என்கிற இசை நிகழ்ச்சியில் இசைவாணி “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற பாடலை பாடி இருக்கிறார்.