ஆர்.பி.உதயகுமார்: சீமான் ஏன் தேவையில்லாமல் கருத்துக் கூறுகிறார் என தெரியவில்லை..!

மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான். இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான்.

இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை. பூரண மது விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகளும், பழனிசாமி முதல்வராக இருந்தபோது 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது அதிமுகவுக்கு திருமாவளனன் விடுத்துள்ள அழைப்பு தமிழக அளவில் பெரும் அதிர்வலையை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒருவர் மாநாடு நடத்தினால் தேவையில்லாத கேள்விகள் கேட்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.