திருப்பத்தூர் மாவட்டம் புலியனேரி பகுதியை சேர்ந்த சரவணன் ஒரு ஆட்டு வியாபாரி. இவர் வடமாநிலங்களில் ஆடுகளை மொத்தமாக வாங்கி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வாரச்சந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளில் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் ஆடுகளை விற்பனை செய்த வகையில் 13 பேரிடம் ரூ.25 லட்சத்தை வசூல் செய்தார்.
பின்னர், அங்கிருந்து பேருந்து மூலம் ஓசூர் அருகே பத்தலப்பள்ளிக்கு வந்து, அங்கு ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் சரவணனிடம் காவல்துறை எனக்கூறி கஞ்சா விற்பனை செய்கிறாயா? உன்னை விசாரிக்க வேண்டும்? என மிரட்டி கடத்தி சென்றனர். பின்னர் அந்த நபர்கள் சரவணன் பையில் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை பறித்து கொண்டு உத்தனப்பள்ளி அருகேயுள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
அப்போதுதான், தன்னை காவல்துறை அழைத்து செல்லவில்லை, மர்ம நபர்கள் பணத்தை பறிக்க கடத்தி சென்றுள்ளனர் என தெரிய வந்தது. இந்த பணம் பறிப்பு சம்பவம் குறித்து அவர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் காவல் துறை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.