திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக. சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பாமக. இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். மேலும் மது ஒழிப்பு எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை ஆகும்.
மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்கேஜி வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமக-வை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.
பாமக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும், இந்திய அளவில் 90,000 மது கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்காக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கும் அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? இந்த இரண்டு திமுக எம்.பி-களும் தமிழக அரசின் மதுக்கடைகளுக்கு 40 சதவிகிதம் மது சப்ளை செய்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.