உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்பாதாஸ் தன்வே, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லமான ‘மாதோஸ்ரீ’யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஸ்கர் ஜாதவ் சட்டப் பேரவைத் தலைவராகவும், சுனில் பிரபு தலைமை கொரடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இரு அவைகளின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என அம்பாதாஸ் தன்வே தெரிவித்தார்.