உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள ரங்கம்மாள் அறக்கட்டளையானது, 1969 -ஆம் ஆண்டில் திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை துவக்கப்பட்டு நடத்தி வருகிறது.

இந்த ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்தனர். இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியும், அவர்கள் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் செந்தாமரைக்கு சாதகமாக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் அவர்களை காலி செய்ய முற்பட்டுள்ளனர்.

அப்போது தங்களை காலி செய்யும்படி நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகக் கூறி அதன் நகலை முருகானந்தம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவு போலியானது எனக்கூறி செந்தாமரை நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலியாக உயர் நீதிமன்ற உத்தரவு தயாரித்தது குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பது. அதன்படி இதுதொடர்பாக CBCID விசாரிக்க காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு அனுமதி கொடுத்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், 2 பேர் இறந்து விட்ட நிலையி்ல், மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதிகள் விடுவித்தனர். பின்னர் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, அவர்களை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் சிலரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசனை குமாரபாளையம் காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு வி.மேட்டூரை சேர்ந்த பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 பால்குட ஊர்வலம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத கடைசி  நேற்று வெள்ளியையொட்டி தமிழகமெங்கும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், விநாயகர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து 1,008 பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

இதையடுத்து மூலவர் செல்லாண்டியம்மனுக்கு 1,008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சீசன் முடிந்தும் தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அரப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து தற்போது மழை ஓய்ந்து சீசன் முடிந்தபோதும், மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண நிதி வழங்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்களில் பணியாற்றிவரும் மொத்தம் 56 அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண தொகை ரூ. 4000 மற்றும் 10 கிலோ அரிசி, 15வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார்.