உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியிலுள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றவர்களின் நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. NICU-வில் மீட்புப் பணிகள் நள்ளிரவு 1 மணியளவில் முடிந்துவிட்டன என தகவல்கள் வெளிவந்துள்ளன.
1968 -ல் தனது சேவைகளைத் தொடங்கி உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியிலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார், மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Neonatal Intensive Care Unit (NICU)-ன் வெளிப் பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.
NICU-ன் வெளிப்புறப் பிரிவில் குறைவான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மிகவும் முக்கியமான நோயாளிகள் உள் பகுதியில் வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இருப்பினும், இந்த தீ விபத்திற்கு காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 10 குழந்தைகள் இறந்தபோதும், மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். NICU-ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.