துணைக்கு துணையாகும் M. ஆர்த்தி IAS..! முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்..!

தமிழ்நாடு அரசு முக்கிய IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலராக சத்யபிரதா சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்த்தி IAS, துணை முதலமைச்சரின் துணைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறு, குறு தொழில் துறை செயலராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். திட்ட இயக்குநர் ஆர்த்தி IAS, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலக துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

M. ஆர்த்தி IAS உத்தரவு: அனைத்து பள்ளிகளிலும் 7-ஆம் தேதி முதல் பள்ளிகளில் கலை திருவிழா..!

அனைத்து பள்ளிகளிலும் 7-ஆம் தேதி கலைத் திருவிழாவை முதற்கட்டமாக வட்டார அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் M. ஆர்த்தி IAS வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான குறுவள மற்றும் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வட்டார அளவில் 7-ஆம் தேதி போட்டிகள் நடத்தி 8-ஆம் தேதிக்குள் வெற்றிபெற்ற மாணவர்கள் தொடர்பான விவரங்களை 8-ஆம் தேதிக்குள் EMIS(Educational Management Information System)-ல் உள்ளீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மாவட்ட அளிவிலான போட்டிகள் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்கள் 21-ஆம் தேதி உள்ளீடு செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்துவதற்கு 10 அமைப்புக் குழுக்களை தனித் தனியே அமைத்தல் வேண்டும். போட்டி நடக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதன்மை அமைப்பாளராக செயல்படுவார். உதவி அமைப்பாளராக மேலும் ஒரு தலைமை ஆசிரியர் செயல்படுவார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி 1, பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி 2, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர் 2 பேர் இந்த குழுவில் இடம் பெற வேண்டும். மாவட்ட அளவிலான ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளர் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான வெற்றியாளர்களின் தகவல்கள் EMIS-ல் உள்ளீடு செய்ய வேண்டும்.

வட்டார அளவில் நடந்த போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இந்த நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்த வேண்டும் என ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.