மு.க.ஸ்டாலின்: பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள்..!

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கப்பலோட்டிய தமிழரின் 153-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!

நாட்டுத் தொண்டும் – மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்! என மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் உரை: இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வரும் உலக மூதலிட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20% தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்.

மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும். சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், சென்னையடுத்த சிறுச்சேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.450 கோடி நோக்கிய நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவர் கமல்ஹாசன்

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்; “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்; ” தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதிமய்யம் தலைவர் ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்: வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகன்

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்; “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு 3 ஆண்டுகள் சொந்த ஊரில் பணி..!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை மந்திரி பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 7 காவலர்களுக்கும், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 14 பேர் மற்றும் சிறைத்துறையைச் சேர்ந்த 8 பேருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்கள் வழங்கினார். மொத்தமாக 158 மத்திய அரசு பதக்கங்களும், 301 முதலமைச்சர் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு பெண் காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். மக்களை காப்பாற்றுதல் உங்கள் கடமை, மக்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. அதை எந்த குறையுமின்றி நிறைவேற்றி தரவேண்டும் என்பது எனது வேண்டுகோள். பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில்தான் வளமும்,வளர்ச்சியும் இருக்கும். இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ காவல்துறையின்திகழ காவல்துறையின் பங்கு முக்கியமானது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது.

மேலும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், பெற்றோர் அல்லது கணவர் வசிக்கும் ஊரிலேயே பணியாற்றும் சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிய சலுகைகளை அறிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் குற்றங்கள் நிகழாமல் ஒவ்வொரு காவலரும் தடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை இன்று மாலை 6.50 மணியளவில் வெளியிடவுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெற்று கொள்ளவுள்ளார்.

இந்த நாணயத்தினை வெளியிட தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இதனை அடுத்து கலைஞர் நினைவிடம் அருகே உள்ள கலைஞர் உலகம் எனப்படும் அருங்கட்சியத்தை பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பிறகு, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற உறுதிபூண்டு, ரூ.1,916.41கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.அதன் தொடர்ச்சியாக திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை வினாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1,065 கிமீ நீளத்துக்கு கொண்டு செல்ல முடியும். நிலத்தடியில் குழாய் பதிந்து கொண்டு செல்லப்படும் இந்த தண்ணீர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகளில் நிரப்பப்படும்.

திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் செயலாளர் க.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோட்டில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கே.இ.பிரகாஷ் எம்.பி.,எம்எல்ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம், சி.சரஸ்வதி, ஈரோடு மேயர் எஸ்.நாகரத்தினம், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில், 1972-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைபட்டிருந்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள்கடந்த 2016-ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன்.

இந்த திட்டத்துக்கான பணிகள் 2019-ல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ரூ.1,916.41 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் தமிழ்நாடு 2030 -ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி நிலையை எட்டும்..!

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும். பகலில், சூரிய மின் உற்பத்தி நேரங்களில் நீரை உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்றம் செய்து மின்சார ஆற்றலை சேமிக்கின்றன. இரவு நேரங்களில், மின்சார தேவை அதிகமாக இருக்கும் போது, சேமித்து வைக்கப்பட்ட நீரானது டர்பைன்கள் வழியாக விடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கையின் வாயிலாக, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நீரேற்று புனல் மின் திட்டங்களை செயல்படுத்த ஊக்கு விக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் வரும் 2030-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாக உள்ள அதிகப்படியான பசுமை எரிசக்தியை சமப்படுத்தி மின் கட்டமைப்பில் மின்சாரமாக மாற்றி பயன்படுத்த நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை வழிவகுக்கும்.

மேலும், சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்களாகும். இந்த கொள்கையின் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இந்த சிறிய நீர்மின் திட்டங்கள் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற தூய்மையான மின்சார வளத்தை உருவாக்க இயலும். நிலையான எரிசக்தி இருப்பை உறுதி செய்ய குறைந்துவரும் மரபுசார் எரிபொருளான நிலக்கரி, எரிவாயு போன்ற இருப்புகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.

சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு புனல் திட்டங்களால் கிடைக்கும் நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பின் திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும். சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 1984ம் ஆண்டு முதல் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட காற்றாலைகள் குறைந்த திறன் கொண்ட பழைய காற்றாலைகளாகும். இந்த காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய மூன்று வழிகள் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி மேலும் 25 சதவீதம் அதிகரிக்க இந்த கொள்கை வழிவகுக்கும்.

இந்த மூன்று கொள்கைகள் வாயிலாக, நமது மாநிலத்தின் மாசற்ற, பசுமை எரிசக்தி அதிகரிக்கப்படுவதுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயம் செய்துள்ள 2030 -ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடைவதற்கும் இக்கொள்கைகள் வழிவகை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.