ஓ.பன்னீர்செல்வம் ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஞானராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், “தேனி மாவட்டத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது என தாக்கல் செய்துள்ளார். இதற்காக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான புகார்களை அரசுக்கு கொடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டு ஜூலை 21-ந்தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் மீது விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “இந்த குற்றச்செயலில் வருவாய் துறை, புவியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தேனி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிவிட்டார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி இன்னும் வழங்கவில்லை. அனுமதி கிடைத்ததும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிலுவையில் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, புலன் விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி கேட்டு காவல்துறை அனுப்பியுள்ள ஆவணங்களை தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவை வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அல்லது அதற்கு முன்பு பிறப்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை பிப்ரவரி 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அ.தி.மு.க. எம்.பி. க்கு தர்மஅடி

அ.தி.மு.க.முன்னாள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான குன்னூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.தற்போது குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததால்,அவரிடம், கோபாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர காவல் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மற்றொரு புறம் தன்னை தாக்கியதாக கோபி மீது அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி …! ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம்….!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வி. மருதராஜ் முன்னிலை வகிக்க, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது போல் நிரூபணமாகியுள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார்கள், தரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செய்யவில்லை. கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். தள்ளுபடி செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யத் தயாராகி உள்ளனர். நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆளும்கட்சியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என தெரிவித்தார்

வி.கே. சசிகலா கேம் ஆன்: அ.தி.மு.க கொடி கட்டிய காரில் புறப்பட்டார் …!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வி.கே. சசிகலா விடுதலை ஆனார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதாவது கொங்கு மண்டல கோஷ்டி வி.கே. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

அதனால் வி.கே. சசிகலா அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். வி.கே. சசிகலா நீ யார்? எனக்கு கட்டளை இடுவதற்கு என்ற பாணியில் பெங்களூரு சிறையில் இருந்து வரும்போதும் அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்தார். அதன்பிறகு வி.கே. சசிகலா எங்கு வெளியில் சென்றாலும் அவரது காரில் அ.தி.மு.க. கொடி தவறாமல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் வி.கே. சசிகலாவும் அ.தி.மு.க.வின் பொன்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் வி.கே. சசிகலா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய அவர், அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்று வி.கே. சசிகலா கூறினார்.

மேலும் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்ற வி.கே. சசிகலா அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா என்ற பெயரில் கல்வெட்யும் திறந்து வைத்தார். வி.கே. சசிகலா இந்த செயல்பாடுகள் அ.தி.மு.க.வில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி கட்சிக்குள் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அ.தி.மு.க. உறுப்பினராக கூட இல்லாத வி.கே. சசிகலாவின் செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வி.கே. சசிகலா பொதுச்செயலாளர் என்று கூறுவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 419, 153ஏ, 505(பி) ஆகிய 3 சட்டப்பிரிவுகளில் வி.கே. சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில் எதையும் கண்டுகொள்ளாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு , தொண்டர்களை சந்திக்க வி.கே. சசிகலா அ.தி.மு.க கொடி கட்டிய காரில் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார். தி.நகர் இளவரசி வீட்டில் இருந்து இஇளவரசியும் உடன் புறப்பட்ட சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை தஞ்சாவூரில் நடைபெறுவதில் வி.கே. சசிகலா பங்கேற்கிறார். அதன்பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் வி.கே. சசிகலா தொடர்ச்சியாக பங்கேற்க திட்டமிட்டு உள்ளார். வி.கே. சசிகலாவின் அரசியல் ரீதியான சுற்றுப்பயணத்தையும், தொண்டர்களை சந்திப்பையும் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க. தலைமை செயலாளர் பி. தங்கமணி நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார், அதையொட்டி ஒன்றியக்குழு தலைவர் பதவி காலியானது. காலியான ஒன்றிய தலைவர் பதவி புதிய தலைவர் நியமனம் செய்ய மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தி.மு.க.வினரின் மிரட்டலுக்கு பயந்து கோவிலுக்கு சென்று விட்டனர். ஆனால் அவர்களை நான் கடத்தி சென்று விட்டதாக பொதுமக்கள் போர்வையில் கொடுக்கப்பட்ட மனுவில் என் மீது வழக்கு போட்டு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டேன். அவர், மனுவை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.

நான் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நாமக்கல்லுக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்களை கடத்தி இருக்க முடியும். எப்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். என் மீது புகார் அளித்தவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்தார்.

ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய எடப்பாடி  பழனிசாமி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது.

தி.மு.க அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களவை தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது. ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

வி.கே. சசிகலா: எல்லா தொண்டர்களுக்கும் கட்சியில் உரிமை உண்டு

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார்.

அதில் தொண்டர்கள் கவலைப்படவே வேண்டாம். நிச்சயம் நான் வருவேன். கட்சியை நல்லபடியாக வழிநடத்துவேன். ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து பகுதிகளிலும் உள்ள தொண்டர்களைச் சந்திப்பேன்.

தொண்டர்கள் மனசுபடி நான் நிச்சயம் செய்வேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இது தொண்டர்களின் கட்சி. இப்போது ஒரு சிலர் தவறான போக்கை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறு. எல்லா தொண்டர்களுக்கும் கட்சியில் உரிமை உண்டு.

யாரும் மனதை விட்டவிட வேண்டாம். கட்சியில் பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை என்று எல்லாருமே சொல்கிறார்கள். எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம். எல்லாவற்றையும் சரி பண்ணிடலாம். நான் இருக்கேன் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான அவரைத் தொடர்ந்து தேடிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு காவல்துறையினர் சென்னை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அவரது வீடு மற்றும் விடுதியில் வைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இன்று காலை அவரை காவல் வேனில் மதுரைக்கு அழைத்து வந்தனர். 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பால்வளத்துறை அமைச்சர் நாசர்: தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது

சேலம் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டன.

அதற்கு ஒரு தொகையும் இதுவரை வரவில்லை. ஆதாரத்துடன் எங்களிடம் உள்ளது. அதன்மேல் நடவடிக்கை எடுப்போம், விடமாட்டோம்.இங்கிருந்து போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை.

வெளியே போனதற்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் இந்த ஆட்சியில் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.

அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் ஒரு நாடகத்தை வி.கே.சசிகலா அரங்கேற்றி வருகிறார்

கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோயம்புத்தூரில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சட்டப்பேரவை தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் வி.கே.சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.


ஆனால், அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன்பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றி வருகிறார்.சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இக்கூட்டம் அவருக்குகடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் என வஞ்சக வலை விரிக்கின்றனர். அவர்களுக்கு அதிமுக ஒருபோதும் அடிபணியாது என்பதுஉள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், எம்எல்ஏக்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல் கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.