பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்கியது செல்லுமா, செல்லாதா..?- நாளை தீர்ப்பு…!

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இடைக்காலப் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் கடந்த 2017-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் வி.கே. சசிகலா மற்றும் தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், புதிதாக பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தும் வி.கே. சசிகலா சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமியும் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம் வி.கே. சசிகலா தொடர்ந்திருந்த வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்தது. அப்போது வி.கே. சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், கடந்த 2017-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சி விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் பொதுச் செயலாளராக பதவி வகித்த வி.கே. சசிகலாவை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் தன்னிச்சையான முடிவு. மேலும் வி.கே. சசிகலா தற்போது வரை அதிமுகவின் உறுப்பினர்தான் என வாதிட்டிருந்தார்.

பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆகியோர், கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளன.

உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுக் கூட்டத்தில்தான் வி.கே. சிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, என வாதிட்டனர். இதேபோல ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜரானார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் வி.கே.சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதிகள் நாளை தீர்ப்பளிக்க உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

2 நாள் டைம்.. உன் குடும்பத்தையும் கல்லை கட்டி கடலிலேயே இறக்கி விடுவேன்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயபால் மிரட்டினாரா..!?

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருவான்மியூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் என்பவர், நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளிததார். அதன் மனுவில், சென்னை அண்ணாநகரில் ஏசிடிசி ஸ்டூடியோ பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கு கடந்த ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரதீஷ் ஜெயபால் அறிமுகமானார்.

அவர் என்னிடம் பெருமளவு பணம் உள்ளது. அதை நான் எதிலாவது முதலீடு செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். நான் கேட்டுக்கொண்டதும் எங்களது ஈஷா கிருபா இன்ஜினியரிங் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ. 7.50 கோடி முதலீடு செய்தார். பல நாட்கள் கழித்து நிரப்பப்படாத ரூ.100 மற்றும் ரூ. 50 ஸ்டாம்ப் பேப்பர்களில் பல கையெழுத்துக்களை என்னிடம் கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டார்.

பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ரிதீஷ் ஜெயபால், தான் முதலீடு செய்த ரூ. 13 கோடியை திரும்ப கொடுக்கும்படி கேட்டார். அதற்கு நான் நீங்கள் முதலீடு செய்தது ரூ. 7.50 கோடி தான் என்று சொன்னேன். எனக்கு அதெல்லாம் தெரியாது நீ எனக்கு ரூ. 13 கோடி கொடுத்தால் உன்னை சும்மா விடுவேன். இல்லை என்றால் நீயும் இருக்க மாட்ட, உன் குடும்பமும் இருக்காது என்று மிரட்டினார். அவர்கள் என்னிடம் பெற்ற கையெழுத்தை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பகல் 12 மணிக்கு என் வீட்டிற்கு ரிதீஷ் ஜெயபால் தூண்டுதலின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் 10 அடியாட்கள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது ஜெயபால் என் மகன் கேட்ட ரூ. 13 கோடியை எடுத்து வை என மிரட்டினார். உனக்கு 2 நாள் டைம், அதற்குள் பணத்தை கொடுக்கவில்லை என்றால், உன்னையும், உன் குடும்பத்தையும் கல்லை கட்டி கடலிலேயே இறக்கி விடுவேன். உனக்கு பணமா அல்லது உன் குடும்பமா என்று நீயே முடிவு செய் என்று மிரட்டிவிட்டு சென்றார்.

எனவே ரிதீஷ் ஜெயபால் தூண்டுதலின் பேரில் என்னையும் எனது குடும்பத்தினரையும் அடியாட்களோடு வந்து மிரட்டி சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் அவருடன் வந்த 10 அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெவிரித்துள்ளார்.

பொதுப்பாதையை பயன்படுத்திய பட்டியலின தாய், மகன் மீது அதிமுக கவுன்சிலர் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சி கொளத்துப்பாளையம் பட்டியலினத்தை சேர்ந்த முத்துசாமி. இவர் வீட்டின் முன் உள்ள பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முத்துச்சாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பொது வழிப்பாதையை பயன்படுத்த கூடாது என மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கயம் ஒன்றிய அதிமுக அவை தலைவரும், யூனியன் கவுன்சிலருமான பழனிசாமி தலைமையில் கட்ட பஞ்சாயத்து நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் ஆதிக்க ஜாதியினர், முத்துச்சாமியை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். முத்துசாமி தாக்கப்படுவதை கண்ட அவரது தாய் அருக்காணி தடுக்க முயன்ற போது அக்கும்பல் தாயையும் தாக்கியது. இதில் காயமடைந்த முத்துசாமி காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி காங்கயம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அதிமுக கவுன்சிலர் பழனிசாமி, நாகரத்தினம், தனசேகரன் ஆகிய 3 பேர் மீது எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளில் காங்கயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பூத் கமிட்டியில் பொறுப்பு வழங்கப்படாததால் எம்ஜிஆர் சிலையை அதிமுக பிரமுகர் உடைத்தாரா…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 -ந்தேதி அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த மாதம் 22 -ந்தேதி சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது சாணியை பூசி விட்டு சென்றனர். இச்சம்பவத்தை அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எம்ஜிஆர் திருவுருவ சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ரெட்டி மாங்குடி கடைவீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அன்றைய தினம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சிறுகனூர் காவல் நிலையத்தில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்திய எம்ஜிஆர் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் எம்ஜிஆரின் திருவுருவ சிலையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனை அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட காவல்துறை அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சிலையை உடைத்த நபரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதியளித்தனர்.

இந்நிலையில் சிலையை உடைத்த நபர் குறித்து சிறுகனூர் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரெட்டிமாங்குடி நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிந்து செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர். இதுபற்றி காவல்துறை கூறுகையில், ‘அதிமுகவில் உட்கட்சி பூசலால் உறுப்பினராக இருந்து வரும் செந்தில்குமாருக்கு பூத் கமிட்டியில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால், கட்சி மீது கடும் அதிருப்தியில் மதுபோதையில் சிலையை உடைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது’ என தெரிவித்தனர்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு..!

சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.

முதலில் ஆலோசனை கூட்டம்.. அடுத்து பாதயாத்திரை..! அண்ணாமலைக்கு ஆப்பா..!?

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.

இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார்.  இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது…! பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!

ஒரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100-க்கு 100 வாங்கிவிடுவேன் என கூறுவான், கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால் தான் தெரியும் அந்தப் பையன் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கியிருப்பது என்று கூறிய எஸ்.வி.சேகர், அண்ணாமலை கதையும் இப்படித்தான் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரிய வரும் என்றார்.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது என்று பேசிய எஸ்.வி.சேகர், அதிமுக -பாஜக கூட்டணி ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கமாட்டார் என மிக ஆணித்தரமாக கூறினார். மேலும் அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பின்னடைவை தரும் என்று கூறிய அவர் தனக்கென்று ஒரு மறைமுக அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அண்ணாமலை இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் எல்லாமே சுயநலத்துடன் தன்னுடைய பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்து கொண்டிருக்கிறார் எனவும் எஸ்.வி.சேகர் விமர்சித்தார்.

தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே” என போஸ்டர்கள்

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் தேசியக் கழகம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே” என எடப்பாடி பழனிசாமியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மற்றொரு அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி என விமர்சிக்கப்பட்டுள்ளன.அதிமுக மாநாடுக்கு இன்னும் முழுமையாக 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருநாவுக்கரசர்: ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர் ..!

புதுக்கோட்டையில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 1989-ல் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்தும், திருநாவுக்கரசர் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வதாக பேசியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஜெயக்குமார் எந்த காலத்தில், அதிமுகவில் சேர்ந்தார்? எந்த காலத்தில் அதிமுகவில் இருந்தார்? என்று எனக்கு தெரியவில்லை. எம்ஜிஆரை எல்லாம் அவர் பார்த்திருக்கிறாரா? என்றும் எனக்கு நியாபகம் இல்லை. அவர் ஜெயலலிதாவிடம் எப்போது வந்து சேர்ந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, ஜெயலலிதாதான் எனக்கு நன்றிக்கடன் பட்டவரே தவிர, நான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவன் கிடையாது.

நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். நான் காப்பாற்றியதால் தானே மீண்டும் அவர் முதல்வரானார். நான் காப்பாற்றியதால் தானே, இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி சாப்பிட்டு சவுகரியமாக இருக்கின்றனர். அப்போது ஜெயலலிதா எனக்கு நன்றியாக இருக்கவேண்டுமா? நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்கவேண்டுமா?. ஜெயலலிதாவுக்கு நான் நிறைய செய்திருக்கிறேன்.

ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல்தான் செய்துள்ளார். அதுமுடிந்துபோன விஷயம். அவர் பாவம் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எனக்கும், ஜெயக்குமாருக்குமா பிரச்சினை? எனவே, அதிமுகவினர் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதாதான் என்னிடம் உண்டு உள்ளார். நான் அதிமுகவில் உண்ணவே இல்லை. உண்ணாமல் எப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும்?” என தெரிவித்தார்.

அதிமுக மதுரை மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டம்…! எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு…!

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், எழுச்சி மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் 500 பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். ஜோதி தீபத்தை ஏற்றி, மாவட்ட செயலாளர் அசோக்கிடம் பழனிசாமி வழங்கினார். இந்த ஓட்டம், அடையாறு, பள்ளிக்கரணை, செங்கல்பட்டு வழியாக மதுரை நோக்கி செல்கிறது. இந்த ஜோதி, மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும்.