துட்டுவாங்கி தானே ஓட்டு போட்ட…! அதிமுக கவுன்சிலர் அடாவடி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 7-வது வார்டின் கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சுரேஷ் பதவி வகித்து வருகிறார். இந்த வார்டுக்குட்பட்ட பகுதி பிலால் நகர் உள்ளது. அப்பகுதியில் சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அப்பகுதியினர் நேற்று அங்கு வந்த கவுன்சிலர் சுரேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அதிமுக கவுன்சிலர் சுரேஷ், அப்பகுதியினருக்கு உரிய பதில் தராமல் பொதுமக்களிடம் துட்டுவாங்கினு தானே ஓட்டு போட்ட என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுபகுதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா ஆரம்பித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் , மோடி ஜி அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார்..!

நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு 2020-ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்ட ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் புகார் கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையே உரசல் அதிகரித்தது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். பதிலுக்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார். அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தன்னை குறி வைத்து சமூக வலைதளத்தில் அட்டாக் செய்வதாக கூறினார்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார்.  இந்தச் சூழ்நிலையில் காயத்ரி ரகுராம் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சியாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில், புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா தேசிய ஜனநாயக கூட்டணி ஆரம்பித்தால், மோடி ஜி அதை அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு அவர்கள் அதை திரும்ப கொடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடியார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும், பாஜக அல்ல. பாஜக தனது கூட்டணியை தேசிய சர்வாதிகாரி கை முறுக்கு கூட்டணி என்று பெயர் மாற்ற வேண்டும் என பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

என்எல்சி நடத்தும் எழுத்து தேர்வை ஒத்திவைக்க அருண்மொழிதேவன் வலியுறுத்தல்..!

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த , ஐடிஐ படிப்பு படித்தவர்களை, தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு 262 பேர் தேர்வு செய்ய, என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அன்று எழுத்து தேர்வுக்கான கடிதம் என்எல்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் என்எல்சி நிறுவனம் மூலம் பயிற்சி முடித்து, NCVT சான்றிதழ் வைத்திருக்கும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எழுத்து தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை. இந்த செயல் என்எல்சி நிறுவனம், தானே பயிற்சி அளித்து, ஐடிஐ சான்றிதழ் கொடுத்த நிலம் கொடுத்தவர்களை, எழுத்து தேர்வுக்கு அனுமதிக்காதது என்எல்சி நிறுவனம் தன்னைத்தானே நம்பாதது போல் உள்ளது.

மேலும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தில், என்எல்சியில் பயிற்சி முடித்து, 13 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில், எழுத்து தேர்வு எழுத அனுமதிக்காதது சட்டப்படியும், நியாயப்படியும் தவறான செயல் என்பதால் மிகவும் கண்டனத்திற்குரியது எனவும், இடம் கொடுத்த விவசாயிகள் மீது என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு அக்கறை இல்லை என்பதை இச்செயல் மீண்டும் நிரூபித்துள்ளது.

எனவே என்எல்சி இந்தியா நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி நடத்த உள்ள எழுத்து தேர்வை ஒத்திவைத்து, என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கும் எழுத்து தேர்வுக்கான அழைப்பை அனுப்பி, மற்றொரு தேதியில், எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாங்க ஒண்ணு சேர்ந்தா..! திமுக ஒரு சீட் கூட ஜெயிக்காது..! வி.கே.சசிகலா ஆவேசம்..!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எம். ஜி.ஆரின் வளர்ச்சி திமுகவில் இருக்கும் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதனால் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அவர் வெளியேறினார். எம்ஜிஆர், மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்.

இப்போது தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். முதலமைச்சர் என்றால் 10 வாகனங்களுக்கு மத்தியில் செல்வது அல்ல, அதற்கு பெயர் முதலமைச்சர் அல்ல, மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அம்மா உணவகம் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். திமுகவை வீழ்த்த அதிமுக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இரண்டாகப் பிரிந்து கிடந்த அதிமுக முன்பு எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதே போல் தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவை விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன். நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று போட்டி போட்டுக்கொண்டு கட்சியையும், தொண்டர்களையும் மறந்துவிட்டதாக அதிமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள்.

கட்சி பிளவுபட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். நான் என்றைக்கும் தொண்டர்களின் பக்கம் தான் இருப்பேன். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்திய பெரிய நன்றிக்கடன். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் திமுக ஒரு சீட் வர முடியாது என்று அத்தனை தொண்டர்களும் சொல்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதை செய்து காட்டுவேன்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு 12 கிராம் தங்க நாணயம் வழங்கல்

முன்னாள் தமிழக முதலமைச்சர் அதிமுக கழக தொண்டர்கள் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த தினம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன பொது மருத்துவமனையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஊழியர் சங்க மருத்துவமனை பகுதி செயலாளர் சோமையா அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிறந்த பந்தகானி மிதுன் குமார் -காக்கனுரி பார்வதி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு 1/2கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு அதிமுக தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் தலைவர் வெற்றிவேல், செயலாளர் கோவிந்தராஜ், தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

96 மாசமா..? அதாவது 8 வருஷம் … யாரோட ஆட்சி… வார்த்தையை விட்டு.. மாட்டிக்கிட்டோமே..!?

தமிழ்நாடு முழுக்க பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை செய்கின்றன. அதே சமயம் தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்” என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் தற்போது அவருக்கே எதிராகவே திரும்பி உள்ளது.

அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில்.. அவர் வைத்த விமர்சனம் அவருக்கு எதிராக மாறி இருக்கிறது. அதன்படி 96 மாசம், அதாவது 8 வருஷம், இதுல கிட்டத்தட்ட 6 வருஷம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான்.. அவர்கள் ஆட்சியில கொடுக்கப்படாத டிஏ மற்றும் வருமான பாக்கிக்கு அவர்களே நியாயம் கேப்பது கொடுமையிலும் கொடுமை என்று நெட்டிசன்கள், திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

ஒ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி: “இரகசியத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்”

கிருஷ்ணகிரி, சேலம் சாலை ஆவின் மேம்பாலம் அருகில் மீனாட்சி மஹாலில் பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புகுழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டு காலத்தில், கட்சியை மெருகூட்டிய ஜெயலலிதாவை முதலமைச்சராக ஆகுவதற்கு அச்சாரம் போட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் சட்டப்பேரவை தொகுதி. அதற்காக அதிமுக தொண்டர்கள் ஒவ்வொரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா, 16 ஆண்டுகள் ஆட்சி செய்து, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அவை பொதுமக்களிடம் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. திமுகவின் பல்வேறு சதிகளை முறியடித்து, அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி கொடுத்தவர் ஜெயலலிதா. கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் உருவாக்கிய சட்டவிதிகளை தகர்த்து, தனக்கு தானே மகுடம் சூட்டி கொண்டவர் இபிஎஸ், ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை மாற்றி விதிகளை திருத்தி சதி செய்துள்ளனர்.

ஜமீன்தார், பணம் படைத்தவர்கள் மட்டும் கட்சி பொதுச்செயலாளர் ஆகும் வகையில் விதிகளை மாற்றி தொண்டர்களை அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்தவன் நான். ஆனால் தொண்டர்களின் உரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. 50 ஆண்டுகாலம் வளர்த்த கட்சியை இன்று இபிஎஸ், மூலம் நசுக்கப்பட்டுள்ளது. இதை தொண்டர்களுடன் இணைந்து விரைவில் மீட்டெடுப்போம் என தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய போது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளர் ஆகும் வகையில் பல்வேறு சட்டவிதிகளை வகுத்தார். அவற்றை தகர்த்து, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து இபிஎஸ், அதிமுக பொதுசெயலாளராகி உள்ளார். இதனை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் அதிமுக மீட்புகுழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம்.

இரு அணிகளாக செயல்பட்டு வாக்குகளை உடைப்பதால்தான் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. இபிஎஸ்., முதலமைச்சராகி, பொதுச்செயலாளர் ஆன பின் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். ஆனால் அதைப்பற்றி கவலையில்லாமல் தனக்கு தானே பொதுச்செயலாளர் பதவியை சூட்டி மோசமான சூழலை இபிஎஸ், ஏற்படுத்திவிட்டார்.

இணைந்தால் தான் வெற்றி..அதிமுகவின் பல பிரிவுகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும். ஏற்கனவே டிடிவி தினகரனுடன் இணைந்து விட்டோம். கொள்கை ரீதியாக அவர்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். வி.கே. சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்படவுள்ளார். அதை அவரே விரைவில் அறிவிப்பார்.

தர்மயுத்தம் நடத்தியபோது என்னுடன் இணைந்து செயல்பட்டு, எங்களால் வளர்க்கப்பட்டவர் முனுசாமி. அதன்பின் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து, ரகசிய கூட்டணி வைத்து எங்களையே முதுகில் குத்தினார். அவரை விமர்சிக்க அவசியமில்லை. நம்பிக்கை துரோகிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் கட்சியின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை ஆஜராக வேண்டும் எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக்கூறியதையும் வரவேற்கிறோம். அ.தி.மு.க., மீட்பு சட்ட போராட்டத்திலும் நாங்கள் எந்த சூழலிலும் நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறோம். இறுதியில் வெற்றி பெறுவோம்.

மக்களவைத் தேர்தல் குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இதுகுறித்து முதலில் பத்திரிக்கையாளர்களுக்கு தான் சொல்வோம். எடப்பாடி பழனிசாமி விரைவில் திகார் ஜெயிலுக்கு செல்வார் என பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம், நான் சொல்லும் நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன் என தெரிவித்தார்.

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த சட்டப்போராட்டங்கள் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று, அதிமுகவை தற்போது தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட சில மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், வருகிற மே மாதம் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவை கழட்டி விட்டுவிட்டு, அதிமுக தனியாக நிற்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனால் டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்துள்ளாார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. கடந்த முறை தமிழகம் வந்த நரேந்திர மோடி ஓபிஎஸ்சை சந்திக்க நேரம் ஒதுக்காத இன்று பிற்பகல் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கிய சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உடுமலை ராதாகிருஷ்ணன் ஸ்மார்ட் போர்டு திட்டம் துவக்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் இந்த பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டார்.

இந்தநிகழ்ச்சியில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய இணைசெயலாளர் விருகல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அகல்யாபிரகாஷ், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராமநாதன் கூட்டுறவு சங்க தலைவர் பிரகாஷ் மாவட்ட பிரநிதி முருகன், கிளை கழக செயலாளர்கள் மாரிமுத்து கர்ணன் ராதாகிருஷ்ணன் ராஜேந்திரன் பொன்ராஜ் தியாகராஜன் ராம்ராஜ் ராமசந்திரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பூபதி முகுந்தன் சரவணகுமார் மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டை கையில் எடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கடந்த ஜூலை 18-ம் தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் அதனை மறுத்து தடை விதித்து விட்டது.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது அவரது கட்டுப்பாட்டில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை இருந்தது. அதனால் தனக்கு சாதகமான அதிகாரிகளை பயன்படுத்தி வழக்கை திசை திருப்பி முடித்து வைத்து விட்டார். மேலும் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அவர் தடையாக இருந்துள்ளார். குறிப்பாக வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசு அனுமதி வழங்கிய பின்னர், உயர்நீதிமன்றம் அதனை ஏன் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் என்பது மிகவும் தீவிரமானது.

உன்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விசாரணை என்பது அரசின் கொள்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி செய்தது கிரிமினல் குற்றம். அதனால் விசாரணை கோருகிறோம். மேலும் இது லஞ்ச ஒழிப்புத்துறையின் கடமை ஆகும். குறிப்பாக சட்டம் என்பது அதன் போக்கில் இருக்க வேண்டும். அதில் எந்த தலையீடும் இருக்க கூடாது. மாநிலத்தில் அரசு அதிகாரம் மாறினாலும், மறு விசாரணை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அதைத் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.எம்.திரிவேதி,‘‘சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் தாராளமாக விசாரணை செய்யலாம். அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் தாராளமாக விசாரிக்கலாம் சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலாமே. இருப்பினும் இந்த வழக்கில் கடந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எந்த பிரச்னையும் இல்லை என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வேறு விதமாக கூறுகிறீர்கள்’’ என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு வழக்கறிஞர், ‘‘அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையை தவறாக கையாண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின் அது உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் தான் விசாரணை நடத்த அனுமதி கேட்கிறோம்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘‘இந்த வழக்கில் மனுதாரராக இருந்தவர் தற்பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவராக உள்ளவர். அவர் தொடர்ந்து வழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை முடிந்துவிட்ட ஒரு வழக்கில் மீண்டும் அனுமதி வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள். இதை அரசியல் என்று கூறாமல் என்னவென்று கூறுவது’’ என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அப்படி இருக்க நாங்கள் இதில் ஏன் தலையிட வேண்டும்.

அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசின் பரிந்துரையுடன் கூடிய உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை தாராளமாக விசாரணை செய்யலாம். அதற்கு எந்தவித நிபந்தனையோ அல்லது மறுப்போ உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.