சென்னை அண்ணா சாலையிலுள்ள தலப்பாகட்டி பிரியாணி உணவகத்தில் பிரியாணியில் பூரான் கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். சென்னை அண்ணா சாலையில் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் இயங்கி வருகிறது. இந்த தலப்பாகட்டு கடையில் மதுரையை சேர்ந்த இளையராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் பிரியாணி சாப்பிட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் இறந்த நிலையில் பூரான் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, இளையராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். வந்த இடத்தில் சென்னை அண்ணா சாலையிலுள்ள கடையில் சாப்பிட்டோம். முதலில் ஸ்டார்ட்டர்ஸை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பிறகு வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தோம். அதை சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது அந்த உணவில் பூரான் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து கடைக்காரர்களிடம் கேட்ட போது, “சார் தெரியாமல் நடந்துவிட்டது. நீங்கள் சாப்பிட்ட பணத்திற்கு டிஸ்கவுன்ட் கொடுக்கிறோம். இதை கண்டும் காணாதது போல் சென்றுவிடுங்கள்” என கூறிவிட்டார்.
இதனால் நாங்கள் மேலும் அதிர்ச்சி அடைந்து கூகுளில் தேடி இந்த ஏரியாவுக்குரிய உணவு பாதுகாப்பு அதிகாரி யார் என கண்டறிந்து அவருக்கு போன் செய்தோம். அந்த போன் எண்ணில் பேசிய அதிகாரி, சரியான பதிலை வழங்கவில்லை என தெரிய வருகிறது. இதனால் 100-க்கு போன் செய்து காவல்துறையை வரவழைத்தோம் பிரச்சனையை சொன்னேன் என இளையராஜா வேதனையுடன் தெரிவித்தார்.