சீமான்: கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்..!

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “கூட்டணி என்பது எனக்கு சரிப்பட்டு வராது. நான் பெரிய கனவு கொண்டுள்ளேன். ஒரு நேர்மையற்றவன் நாட்டு மக்களையும் நேர்மையற்றவன் ஆக்குகிறான். ஒரு தலைவன் தான்தான் இதை செய்வேன் என இருக்க கூடாது. எனக்கு பின்னால் வரும் தலைமுறை இதை செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். எங்கள் காலத்தில் வென்றால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் இன்னொரு தலைமுறைக்கு கையளித்து செல்வோம்.

நல்லாட்சி நடத்துவதற்கு எதற்கு விளம்பரம் தேவை. தாய்மார்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. நல்ல ஆட்சி கொடுப்பதாக நாடும், மக்களும் சொல்லவில்லை. ஆட்சியில் இருக்கும் அவர்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இங்கு சேவை அரசியலோ, செயல் அரசியலோ இல்லை. வெறும் செய்தி அரசியல், விளம்பர அரசியல் மட்டும்தான் உள்ளது.

நல்ல ஆட்சி கொடுத்தால் மக்கள் அந்த தலைவனை சந்திக்க ஓடி வர வேண்டும். ஆனால் 200 ரூபாய் கொடுத்து மக்களை திரட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள். நல்லாட்சி கொடுப்பவர் ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது? மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக சொன்னார்கள். எத்தனை முறை திமுக ஆட்சியில் இருந்துள்ளது. ஏன் மழைநீர் வடிகால் வசதிக்கு நிரந்தர திட்டம் செயல்படுத்தப்படவில்லை?. 4 ஆயிரம் கோடி செலவழித்த பின்னர் ஏன் 1,500 படகுகள், ஆயிரக்கணக்கான நீர் இறைப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன?.

காமராஜரே தான் நல்லாட்சி கொடுத்ததாக சொல்லவில்லை. நல்லாட்சி கொடுப்பவன் அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மக்களுக்கே தெரியும். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதிகாரத்துக்கு தனித்து நின்று வர முடியாது என்று யார் சொன்னது?. என்னால் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும் என்னை தொடர்ந்து வரும் என் தம்பி, தங்கைகள் ஆட்சி அமைப்பார்கள்.

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே கூட்டணி எனக்கு சரியாக வராது. கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து தனது கொள்கைகளை அறிவித்துள்ளார் . ஆனால் அவரின் கொள்கைகளுக்கும் எங்களது கொள்கைகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது முதலில் அவர் தனது கொள்கைகளை திருத்திக் கொள்ளட்டும் என சீமான் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் தவெகவில் இணைந்தனர்..!

நாகப்பட்டினம் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். நாகப்பட்டினத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு தமிழக வெற்றிக் கழக நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாகப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் செல்லூரைச் சேர்ந்த திமுக-வை சேர்ந்தவர்கள் பலரும் அக்கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார். கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றச்சாட்டி யுள்ளார்.

நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சீமானால் முடியாது..!

நாம் தமிழர் கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் முடியாது என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்..!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தலைமையில் நிர்வாகியுமான பிரபாகரன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினார்.

இவர்கள் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான், இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும். திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்.

2016 இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019 ல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் 2021 விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆகவும் 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். இதல் உள்ளாட்சி தேர்தலைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டமோ எங்கள் தொகுதியோ சார்ந்தவர் கிடையாது.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75% வேட்பாளரை நிரப்பினோம், கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம், மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

பலமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் மேலும் 2026 தேர்தலுக்கு இப்பொழுதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டியதேவை என்ன? அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை.

எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சண்டாளன் என்ற சாதி பெயரை பயன்படுத்துவோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைத்து. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்லில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘சண்டாளன்’ எனக் குறிப்பிட்டு அவதூறு பாடல் பாடியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

மேலும் அவர் மீது எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாட்டைக்கு நீதிபதி கேள்வி: சமூக வலைத்தளங்களில் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்புவது ஏன்?

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் காவல்துறை என்னை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். என்னை கைது செய்ததற்கு காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் காவல்துறை என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘காவல்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்து தனது கடமையை செய்தார் என்பதற்காக திருச்சி காவல் கண்காணிப்பாளர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது அதிகாரிகளை அச்சுறுத்துவதாகும்.

எனவே முன் ஜாமீன் மனுவை அனுமதிக்க கூடாது’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பற்றி மனுதாரர் எந்த இடத்திலும், எந்த சமூக வலைத்தளங்களிலும் தவறாக பதிவிடவில்லை. சிலர் அவதூறாக பதிவிட்டுள்ளனர். இதற்கு மனுதாரர் பொறுப்பில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சமூக வலைத்தளங்களை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். அப்படி இருக்கும் போது முன்னாள் முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள் குறித்து ஏன் அவதூறு பரப்ப வேண்டும்’’ என நீதிபதி கேள்வி கேள்வி எழுப்பினார்.

வேலை ரிசைன் செய்துவிட்டு வாங்க நேருக்கு நேர மோதுவோம்..! வருண்குமாருக்கு சீமான் சவால்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை வேலை ரிசைன் செய்துவிட்டு வாங்க நேருக்கு நேர மோதுவோம் என வீரலட்சுமியின் கணவர் கணேஷ் அவர்களுக்கு விடுத்தைப்போல சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

சீமான்: “வருண்குமார் திமுக ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது…!”

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கு தொடுப்பதாக கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது.

நான் பார்க்காத வழக்கா? அவர் அதிகாரத்தின் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். அகில உலகத்தை எதிர்த்து சண்டை செய்தவரின் மகன் நான். நீ எம்மாத்திரம். ஃஎப்ஐஆர் போடு, என்னத்தையாவது போடு, என் வீட்டில் ஐந்தாறு குப்பைக் கூடைகள் இருக்கிறது, நான் கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்,” என சீமான் தெரிவித்தார்.

வருண் குமார் எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகல்.. !

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று தனது எக்ஸ் தளத்தில் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “ஒரு சாமானிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முனைப்புடன் செயலாற்றி வருகிறேன்.

2021-ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த யூடியூபரை கைது செய்து, பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.

சமீபத்தில், அதே யூடியூபர் பதிவு செய்த அவதூறுகளால் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் சாடினார்.

அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நோட்டீஸை என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்துக்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிடப்பட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விஷயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நானும், எனது மனைவி வந்திதா பாண்டேவும் தமிழகத்தில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. இருப்பினும் இது எங்கள் குடும்பத்தினரை பாதித்துள்ளது.

நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும், நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை.

ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவுக்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்னவெல்லாம் செய்வார்கள்?.

இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவுமில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும்.

ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன்.

இதுபோக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். சமூக வலைதளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில், நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். ஆபாச பதிவுகளை நீக்காத, மன்னிப்புக் கேட்காத கூட்டத்துக்கு சட்டப்படி தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.” என திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பதிவிட்டுள்ளார்.