யாரோ பத்து பேர அடிச்சி கிங் ஆனவன் இல்லடா….! நான் அடிச்ச 10 பேருமே கிங் தான்…!
இந்தியாவின் ரன் மெஷின் துருப்பிடித்து போய்விட்டது, இனி சுப்மன் கில்தான் புதிய ரன் மெஷின் என விமர்சனங்கள் செய்தவர்களுக்கு தனது வழக்கமான கவர் ட்ரைவில் பவுண்டரி தொடங்கி, 47 ரன்கள் இருக்கும்போது பவுண்டரியுடன் அரை சதம், இந்திய அணி வெற்றிக்கு 2 ரன்கள் என்ற நிலையில் 96 ரன்களில் இருந்த விராட் கோலி பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்ததுடன் தனது 82-வது சதத்தையும் நிறைவு செய்து ரன் மெஷினுக்கு ஆயில் போட்டாச்சு என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
ICC தொடரில் இந்திய அணி எப்போதெல்லாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறதோ அப்போதெல்லாம் விராட் கோலி தனது உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே விராட் கோலி விளாசி இருந்தார்.
பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து விராட் கோலி வெளியேறினார். இதனால் இந்தியாவின் ரன் மெஷின் துருப்பிடித்து போய்விட்டதாக விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்திய இளம் வீரர் சுப்மன் கில்தான் புதிய ரன் மெஷினாக உருவாகிவிட்டதாக பாராட்டுகள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்திய அணி களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்து விராட் கோலி நிதானமாக ரன்களை சேர்த்தார். முதல் 15 ரன்களை நிதானமாக சேர்த்த விராட் கோலி, அதன்பின் தனது ஸ்டைலில் கவர் ட்ரைவ் ஒன்றை விளாசி அட்டாக்கை ஆரம்பித்தார்.
வழக்கமாகவே ICC தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதற்கேற்ப ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்த போதும் விராட் கோலி கொஞ்சம் கூட அசரவில்லை. எளிதாக பிரஷர் இல்லாமல் சிங்கிள் ரன்களை எடுத்த விராட் கோலி, கொஞ்சம் கொஞ்சமாக அரைசதத்தை நெருங்கினார். தொடர்ந்து நசீம் ஷா பவுலிங்கில் கவர் திசையில் தூக்கி பவுண்டரியை விளாசி 62 பந்துகளில் தனது 74-வது அரைசதத்தை விராட் கோலி எட்டினார். இதன் மூலமாக விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது 82-வது சதத்தையும் பூர்த்தி செய்தார். கடைசியில் பவுண்டரி அடித்து சதம் விளாசியதோடு, இந்திய அணியையும் வெற்றிபெற வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் நிரந்தர ரன் மெஷின் விராட் கோலிதான் என்றும், துருப்பிடித்த ரன் மெஷினுக்கு ஆயில் போடப்பட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஒருபக்கம் அப்ரார் அஹ்மத், மறுபக்கம் குஷ்தில் ஆகியோரை வைத்து அட்டாக் செய்த போதும், கொஞ்சம் கூட பதறாத விராட் கோலி சேஸிங்கில் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு யாரோ பத்து பேர அடிச்சி அடிச்சு டான் ஆனவன் இல்லடா….நான் அடிச்ச 10 பேருமே டான் தான்… பதிலடி கொடுத்தார்.