ICC சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேட்ச் பிடிப்பதில் இரண்டு மாபெரும் சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.
ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்லிஸ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரது கேட்சுகளை பிடித்தார். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 161 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் வடிவங்களிலும் ஒட்டுமொத்தமாக 336 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் மட்டும் சர்வதேச அளவில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.