தமிழகத்தில் சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை 70 ஆக உயர்வு மேலும் 3 இடங்களில் சுங்கச் சாவடிகள்..!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணங்கள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படும். அந்தவகையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரலில் உயர்த்தப்பட வேண்டிய கட்டணம் ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது.இந்தச் சூழலில், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின்

எண்ணிக்கையை 67-ல் இருந்து 70 ஆக இந்திய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பும், கட்டண விவரமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டண விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது .

புதிதாக திறக்கப்பட உள்ள நங்கிலி கொண்டான் சுங்கச்சாவடியில், ஒருமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை செல்வதற்கு ரூ.55 முதல் ரூ.370 வரையும், ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், நாகம்பட்டி சுங்கச்சாவடியில் ஒருமுறை செல்ல ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.90 முதல் ரூ.600 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வணிக உபயோகமில்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.340 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்தும் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை திறக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாப்பிட்டதிற்கு பணம் கேட்ட ஷூவை கழட்டி கொடுக்க சென்ற காவலர்..!

தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் உள்ளே புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்து விட்டு, மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவாராம். நேற்று முன்தினம் எஸ்எஸ்ஐ காவேரி சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்கவில்லை. மேலும், பணத்தை அடுத்த நாள் சாப்பிட வரும் போது தருவதாக கூறியுள்ளார். அதேபோல் நேற்று மாலை உணவு சாப்பிட வந்த எஸ்எஸ்ஐ காவேரி சாப்பிட்டுள்ளார்.

அப்போது கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர், முதல் நாள் அந்த எஸ்எஸ்ஐ சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ, முத்தமிழை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். சாப்பிட்ட உணவிற்கான பணத்தை தூக்கி வீசி எறிந்து மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ, தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி முத்தமிழை அடிக்க முயன்றார். அதை ஓட்டலில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் தடுத்தனர்.  இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஃபார்முலா 4 நடைபெற்ற பகுதி மீண்டும் வாகன பயன்பாட்டுக்கு திறப்பு..! மின் விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல், இரவு நேர கார் பந்தயம் சென்னை தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது. அன்றைய தினங்களிலும் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை போட்டிக்கான ஒத்திகைக்காகவும் என மொத்தம் 3 நாட்கள் அப்பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு வீரர்கள், பிற மாநில வீரர்கள், தமிழக வீரர்கள் என கார் பந்தய வீரர்கள் உற்சாகமாக போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் கார் பந்தயத்தை நேரில் ரசித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

முன்னதாக, கார் பந்தயம் நடத்த ஏதுவாக சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் உள்ள சாலைகள் மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால், பழையபடி சாலையை பழைய நிலைக்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பழையபடி வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார் பந்தய போடிக்காக அமைக்கப்பட்ட மின் விளக்குகள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை அகற்றும் பணியும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

சிறுமி உயிரிழப்பு எதிரொலி 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பறிமுதல்..!

தமிழ்நாட்டில் நூடுல்ஸ் விற்பனை, தயாரிப்பு கிடங்குகள் மற்றும் இதர இடங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் மற்றும் பேட்ச் மற்றும் ஆகியவை இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜான் ஜூடி மெயில்ஸ் மகள் ஸ்டெஃபி ஜாக்லின். திருச்சியில் செயல்படும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கிறார். இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும், சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். காலை பெற்றோர்கள் சிறுமியை எழுப்பிய பொழுது மாணவி உயிரிழந்துள்ளார். சிறுமி திடீரென உயிரிழந்தது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார்.

இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. அரியமங்கலம் காவல்துறைக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு அளித்துள்ளது.

ரவிக்குமார் கேள்வி: ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எக்ஸ் பக்கத்தில், EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கான உச்சநீதி மன்றத்தின் முதல் தாக்குதல். தற்போது உள் ஒதுக்கீடு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இட ஒதுக்கீட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தாக்குதல்.

அசோக் குமார் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘ ரிசர்வ் தொகுதிகளை நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 334 க்கு உகந்ததுதானா? ‘ என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்கப்போகும் தீர்ப்பு இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் இறுதித் தாக்குதலாக இருக்கப் போகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான பாஜகவின் திட்டத்தை முறியடிக்க புரட்சியாளர் வகுத்துத் தந்த பாதையில், தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.

EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு நடத்தியது. இப்போது உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்தும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. விசிகவின் போராட்டம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானது. இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயற்சிப்பவர்களின் தூண்டுதலில் விசிகவை எதிரியாகக் கட்டமைத்து அவதூறு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: விசிகவின் போராட்டம் உங்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானதும் தான் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Formula 4: ஃபார்முலா 4 கார் பந்தயத்தை காண சென்னை வந்த சவுரவ் கங்குலி

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை காண சவுரவ் கங்குலி சென்னை வந்தார்.. !

Sharad Pawar: சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம்..!

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26-ம் தேதி பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

 

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” என்று பெயரிடப்பட்டிருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய சரத் பவார், “சிந்துதுர்க்-ல் இருந்த சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம். இது அனைத்து சிவ பக்தர்களுக்கான அவமதிப்பு” என சரத் பவார் பேசினார்.

சாட்டைக்கு நீதிபதி கேள்வி: சமூக வலைத்தளங்களில் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்புவது ஏன்?

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் காவல்துறை என்னை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். என்னை கைது செய்ததற்கு காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் காவல்துறை என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘காவல்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்து தனது கடமையை செய்தார் என்பதற்காக திருச்சி காவல் கண்காணிப்பாளர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது அதிகாரிகளை அச்சுறுத்துவதாகும்.

எனவே முன் ஜாமீன் மனுவை அனுமதிக்க கூடாது’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பற்றி மனுதாரர் எந்த இடத்திலும், எந்த சமூக வலைத்தளங்களிலும் தவறாக பதிவிடவில்லை. சிலர் அவதூறாக பதிவிட்டுள்ளனர். இதற்கு மனுதாரர் பொறுப்பில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சமூக வலைத்தளங்களை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். அப்படி இருக்கும் போது முன்னாள் முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள் குறித்து ஏன் அவதூறு பரப்ப வேண்டும்’’ என நீதிபதி கேள்வி கேள்வி எழுப்பினார்.

Formula 4: தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்..!

தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய ஓட்டுனர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். தகுதி சுற்றின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான பந்தயத்தில் ஓட்டுனர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதி சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நாளை பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டை கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும். பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.

அதேவேளையில் இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கும், 2-வது போட்டி இரவு 10.05 மணிக்கும் தொடங்கும். இந்த 2 பந்தயங்களும் தலா 30 நிமிடங்களைக் கொண்டது. இரவு 10.35 மணியுடன் போட்டிகள் முடிவடையும். இது தவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டியும் நடத்தப்படுகிறது. பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. பார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.

சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

போட்டியில் பங்கேற்கும் கார்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பந்தயத்தையொட்டி தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியா்பாலம் என போட்டி நடைபெறவுள்ளசாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பார்வையாளர்கள் போட்டிகளை பாா்த்து ரசிக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் உரை: இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வரும் உலக மூதலிட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20% தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்.

மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும். சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், சென்னையடுத்த சிறுச்சேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.450 கோடி நோக்கிய நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.