சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலை..! பிணை உத்தரவாதங்களை ஏற்றது சென்னை முதன்மை அமர்வு..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. எப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து காத்துக் கிடக்கின்றனர்.

செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை சற்று நேரம் முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்.

பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை” என நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு, “விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பி தெரிவித்தது. இதனால், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது. இரு நபர் பிணை ஏற்கப்பட்டதால் சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார். சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

தமிழிசை சௌந்திரராஜன்: முதலமைச்சரின் மாற்றம்..! துரைமுருகன் ஏமாற்றம்..! உதயநிதிக்கு ஏற்றம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Pawan Kalyan vs Prakash Raj: சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசிச்சு பேசணும்..!

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பை கலந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன்கொழுப்பு சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையில் தெரிவித்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல்லில் நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசும், ஆந்திரா அரசிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. இதுதவிர நேற்று பரிகாரமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தப்பட்டது. லட்டு சர்ச்சை தொடங்கியதில் இருந்தே ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக பவன் கல்யாண் எக்ஸ் பக்கத்தில், ‛‛திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆகியுள்ளேன். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோவில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என பவன் கல்யாண் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ்க்கு மீண்டும் பவன் கல்யாண் பதிலடி கொடுத்தார். லட்டு விவகாரத்தில் 11 நாள் விரதம் கடைப்பிடித்து வரும் பவன் கல்யாண் இன்று விஜயவாடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது, லட்டு விவகாரம் பற்றி நான் ஏன் பேசக்கூடாது? என் வீடு மீது தாக்குதல் நடத்தப்படும் போது நான் பேச வேண்டும். பிரகாஷ் ராஜ் நீங்கள் பாடம் கற்க வேண்டும். நான் உங்களை மதிக்கிறேன்.

இது பிரகாஷ் ராஜ்க்கு மட்டுமில்லை மதசார்பின்மை என்ற பெயரில் குறிப்பிட்ட வழியில் செல்லும் ஒவ்வொருக்கும் தான். நான் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களின் உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம். இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாத. இது ஆழமான வலியை தந்துள்ளது. சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசுங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

L. முருகன் வேண்டுகோள்: சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்..!

குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் L. முருகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு அதன் அளவை உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்பு ஆற்றை தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என L. முருகன் தெரிவித்தார் .

எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்…! இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை..!

அதிமுக சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இந்த விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, அதிமுக ஆட்சியில் இருந்தபோது காவேரி நதி நீர் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பை பாஜக அமல்படுத்த காலம் தாழ்த்தியது. கூட்டணியில் இருந்த அதிமுக 37 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர். காவிரி பிரச்னை குறித்து அம்மா உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தார். அதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆனாலும் ஜெயலலிதாவின் அரசு காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் மூலம் வெற்றி பெற்றது.

நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீட் தேர்வு விலக்கு என்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழு, செயற்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள். நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதிமுக தொண்டர்கள்தான் கட்சி. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது என பேசினார். பிறகு அவருக்கு‌ மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின் வெள்ளி வீர வாள் மற்றும் நினைவு கேடயம் பரிசாக வழங்கினார்.

india vs bangladesh: சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் ஆட்ட நாயகன் விருது..!

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகிர் 33, ஷத்மான் இஸ்லாம் 35 மற்றும் ஷகிப் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஜடேஜா 3 மற்றும் பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Tamilisai Soundararajan: அன்னபூர்ணா விவகாரம்..! அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே..!’’

அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.

தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

விடிய விடிய விநாயகர் சிலை ஊர்வலம்..! விநாயகர் கையில் இருந்த லட்டு 1.87 கோடிக்கு ஏலம்..!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை முதலே விநாயகர் சிலைகளை கைரதாபாத், பாலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த மிக உயரமான விநாயகர் சிலைகள் உட்பட சுமார் ஒரு அடிஉயரம் உள்ள சிலைகள் வரை பொதுமக்கள் உற்சாகமாக அவரவர் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள ஹுசைன் சாகர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் கரைக்கப்பட்டன.

இதில் கைரதாபாத் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கணபதி பப்பா மோரியா’ என கோஷமிட்டபடி சாலைகளில் திரண்டனர். பின்னர், ஹுசைன் சாகரில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை விடிய, விடிய சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்பட்டன. 25 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் பண்ட்ல கூடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு பிரசாதம் நேற்று ஏலம் விடப்பட்டது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிரேட்டர் கம்யூனிட்டியினர் ஒன்று சேர்ந்து ரூ.1.87 கோடிக்கு லட்டு பிரசா தத்தை ஏலத்தில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாஸ்: “மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும்”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன்.

சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு மதுவுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஆனால் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி கட்சியையும், மத கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவையும் அழைத்து இருக்க வேண்டும்.

திருமாவளவன் உள்நோக்கத்துடன் மாநாட்டை நடத்துகிறார். அப்படி பார்த்தால் விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்தார்.

குடிநீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி ரூ. 1 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு..!

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுதர்சனன் கடலூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் வாங்கியுள்ளார். மினரல் வாட்டர் பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.20 என்று குறிப்பிட்டிருந்தும், அதற்கு ஜிஎஸ்டி ரூ.1 சேர்த்து ரூ.21 பெற்றுள்ளனர். இதுகுறித்து சுதர்சனன், ஜிஎஸ்டி தொகையை சேர்த்துதான் எம்ஆர்பி விலை எனவும், மேற்கொண்டு ஜிஎஸ்டி ஏன் வாங்குகிறீர்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு நிர்வாகம் சரிவர பதில் சொல்லாமலும், அந்த தவறை சரிசெய்யாமலும் இருந்ததால் அவர், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் ஓட்டலில் முறையற்ற வர்த்தகம் செய்வதாகவும், அது மாதிரியான முறையற்ற வர்த்தகம் செய்வதை தடை செய்யவும், நஷ்டஈடு கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று, விசாரணையின் முடிவில், ஓட்டல் ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் சட்ட அளவியல் வழிகாட்டுதல்களை மீறி, அனைத்து வரிகள் உட்பட அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருள் மீது, மேலும் ஜிஎஸ்டி பெற்றது முறையற்ற வர்த்தகம் என்று முடிவு செய்தது.

அதனால் மனுதாரர் வாங்கிய ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி ஆக பெற்ற ரூ.1யை திரும்பி அளிக்கவும், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2,500 ம் முறையீட்டாளருக்கு வழங்க மேற்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.