40 பயணிகளை காப்பாற்றி இறந்த பேருந்து ஓட்டுநர்..!

ஆந்திராவில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் பேருந்தை ஒரு வயலில் இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றி, அரசு பேருந்து ஓட்டுநர் மரண மடைந்தார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாம்பசிவ ராவ். இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு சுமார் 40 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டது.

இந்நிலையில் வழியில் சாம்பசிவ ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பேருந்தை நிதானமாக சாலை ஓரத்தில் நிறுத்த முயன்றார். ஆனால் பேருந்து அருகில் உள்ள வயலில் இறங்கி நின்றது. இதையடுத்து பேருந்தின் ஸ்டீரிங் மீது கவிழ்ந்து சாம்பசிவ ராவ் உயிரிழந்தார். இதற்கிடையில் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் காயமின்றி தப்பினர். தங்கள் உயிரை காப்பாற்றிய சாம்பசிவ ராவுக்கு அவர்கள் நன்றிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தினர்.

கஸ்தூரி வீட்டு முன்பு திரண்ட திமுக..! முட்டி நிக்குது முட்டி வரை சாக்கடை தண்ணி..!

சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரசாரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையானஒன்றாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய விமர்சனங்களுடன் கஸ்தூரி வந்திருக்கிறார்.

கடந்த வருடம் பெய்த மழை அளவுக்கு, சென்னை பாதிக்கப்பட்டு விடுமோ? என்ற கலக்கம் சென்னைவாசிகளை கவ்வி வந்தது. ஆனால், 20 செ.மீ. அளவுக்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பில்லை, சென்னை ஆபத்திலிருந்து தப்பிவிட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகளை சொல்லி வருகிறார்கள்.

இது ஒருவகையில் சென்னை மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்றாலும், சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் எப்போது வடியும் என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 3 நாளைக்கு சென்னைக்கு ரெட் அலர்ட் என்றதுமே, அரசு இயந்திரம் மும்முரமாக களமிறங்கியது.. எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு 2 தினங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது சம்பந்தமாக தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரடியாகவே சென்று பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகளை தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழக அரசு முன்னெடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன.

அந்தவகையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். அதில், “மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி டென்ஷன் ஆகிவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார். கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டில், “ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்” என்று கிண்டலடித்துள்ளார்.

இதைக்கண்ட திமுக தொண்டர்களோ, பதிலுக்கு ஓடிப்போய் கஸ்தூரி வீட்டு வாசலில் நின்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோவில் சாலைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.. மழை பெய்தற்கான அறிகுறியே அதில் தென்படவில்லை.. முட்டிவரைக்கும் சாக்கடை தண்ணீர் இருப்பதாக கஸ்தூரி சொன்ன நிலையில், திமுகவினர் இப்படியொரு வீடியோவை எடுத்து கஸ்தூரிக்கு பதிலடி தந்துள்ளனர்.

NLC தொழிலாளர்களுக்கு NOC வழங்கியதில் முறைகேடு ஏட்டு உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

NLC தொழிலாளர்களுக்கு NOC வழங்கியதில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு பயந்து ஏட்டு எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏட்டு உள்பட 3 காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், ஊமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சுதாகர். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். NLC யில் பணிபுரியும் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளரும் ஆண்டுதோறும் அவர்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று எந்த வழக்கும் இல்லை என்று NOC பெற்று பணி இடத்தில் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் NLC ஒப்பந்த தொழிலாளர்கள் சிலருக்கு சான்றிதழ் வழங்கியதில் ஊமங்கலம் தலைமை காவலர் சுதாகர், எழுத்தர் ஜோசப், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன் ஆகியோர் ஆவணங்களை திருத்தி முறைகேடு செய்து சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏட்டு சுதாகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது.

விசாரணைக்காக ஏட்டு சுதாகர் கடந்த 11-ஆம் தேதி நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லாவை சந்திக்க துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் காவல் துணை கண்காணிப்பாளரை சந்திக்கும் போது, தான் எலிபேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறி உள்ளார்.

இதைதொடர்ந்து அங்குள்ள காவல்துறையினர் அவரை நெய்வேலி பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே ஆவணங்கள் முறைகேடு புகாரில் உயர் அதிகாரியின் விசாரணைக்கு பயந்து ஏட்டு சுதாகர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சுதாகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன், காவல்நிலைய எழுத்தர் ஜோசப் ஆகிய 3 பேரையும் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா பரிந்துரையின் பேரில், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ரா.முத்தரசன்: தோல்விக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக அரசு..!

“தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பளிக்கவில்லை.

தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜக கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விடுவிப்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் குறைந்த நிதி ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒன்றிய அரசு என்பது, அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் பெருந்தன்மை வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற கொடிய நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்து ஒரு கட்சி ஆட்சி எனும் சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்திற்கு ரூ.7268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டுமாய், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என ரா.முத்தரசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக குறறம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் நடமாட்டம், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஸ்டாலினின் திமுக அரசைக்கண்டித்து அக்.8-ஆம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி அதிமுக 92-பி வட்டச் செயலாளர் என். ராஜா அவரது வட்டத்திலிருந்து திரளான பொதுமக்களை அழைத்துச் சென்று பங்கேற்றுள்ளார்.

பின்னர் அன்று மாலை சுமார் 5.30 மணியளவில் ராஜா, தனது இருசக்கர வாகனத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பி.கே.புதூர், இந்திரா நகர் ரேஷன் கடை அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜாவின் வாகனத்தை மறித்து சர்வ சாதாரணமாக, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ள காரணமாகவும், அரசியல் காரணமாகவும் ராஜாவுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், அதிமுக வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயலாளர் போகர் சி.ரவி மனித சங்கிலி போராட்டத்தின்போது, பேரூராட்சியின் அவலங்களை எடுத்துரைத்துள்ளார். இதன் காரணமாக நேற்று,பேரூராட்சி செயல் அலுவலரை வேலை நிமித்தமாக பார்க்க சென்ற ரவிவை, திமுக பேருராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் சிலர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

இத்தாக்குதலில் காயமடைந்த ரவி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. திமுக அரசில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இந்த ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. தாக்குதலுக்குள்ளான நிர்வாகிகள் அளித்த புகாரை பதிவு செய்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒமர் அப்துல்லா: முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாநில அந்தஸ்து வழங்கும் அதிரடியான தீர்மானம்

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தபடி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் 370 – வது பிரிவு ரத்து, மாநில அந்தஸ்து உள்ளிட்டவை அதிகம் பேசப்பட்டன. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக நியாயப்படுத்தியது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணியோ மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

ஆனால் மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. பாஜகவோ முதலில் தேர்தல் முடிந்து ஆட்சி அமையட்டும்; மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றது. இந்தியா கூட்டணி கட்சிகளோ மாநில அந்தஸ்து வழங்க மறுத்தால் போராடுவோம் என்றது. தற்போது தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த கூட்டணியின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பொறுப்பேற்க உள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அடுத்தடுது கூட்டப்பட்டு சட்டசபை குழு தலைவர் தேர்வு செய்யப்படுவர். பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர். இந்நிலையில் ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, அரசாங்கத்தை அமைத்த உடன் கூடுகிற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானத்துடனேயே பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திப்பேன் என்றார்.

மேலும் ஒமர் அப்துல்லா பேசுகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தையும் ஜம்மு காஷ்மீரையும் ஒப்பீடு செய்யக் கூடாது. டெல்லி எப்போதும் ஒரு மாநிலமாக இருந்ததே இல்லை. டெல்லிக்கு யாரும் மாநில அந்தஸ்து தருவோம் என வாக்குறுதியும் தரவும் இல்லை. ஆனால் 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களித்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் முடிவடைந்த உடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதுதான் மத்திய அரசின் வாக்குறுதி. அதனை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மத்திய பாஜக அரசுடன் நல்லுறவுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காத முதலமைச்சராகவே இருக்க வேண்டும். அதற்காக பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பது அர்த்தம் இல்லை. எப்போதும் நாங்கள் பாஜகவை எதிர்ப்போம். ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மைக்காக மத்திய பாஜக அரசுடன் நல்லுறவை விரும்புகிறோம்.

மத்திய அரசுடன் மோதுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களுக்கு தேவை வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மாநில அந்தஸ்து தகுதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்தான். எங்கள் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சூழ்நிலை உருவானால் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னையில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர்வாரும் பணி தீவிரம் ..!

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது, 156 பேட்டரி ஸ்ப்ரேகள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், ஓட்டேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைந்து நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்சார துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை துறை பல்வேறு துறை அதிகாரிகளையும் வைத்து முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார். 1156 இடங்களில் 792 கிமீ தொலைவில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 6 நாட்களில் எல்லா பணிகளும் விரைவாக முடியும். 13 செ.மீ மழை பெய்த இடத்தில் கூட, எவ்வளவு நேரம் அங்கு மழைநீர் தேங்கியது என மணி நேரத்தை கணக்கில் வைத்து அங்கு என்ன செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செய்துள்ளோம்.

கொசஸ்த்தலை ஆற்று வடிகால் பணிகள், 24.08.2024-க்குள் முடித்திருக்க வேண்டும். அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை கொசஸ்தலை ஆற்றை நீர்வளத்துறையினர் தான் சீர் செய்து வருகிறார்கள். எங்கள் துறை பணி என்னவென்றால் மழைநீர் கால்வாய் குழாய்களை அதில் சேர்க்க வேண்டியது தான். நாங்கள் குழாய் இணைப்பு சரியாக வைத்துள்ளோம். அவர்கள் வேலை முடிந்தவுடன் இணைத்து விடுவோம்.

இரண்டு மூன்று மாதங்களில் நிரந்தரமாகவே அது முடிந்துவிடும். வானிலை ஆய்வு மையம் கூறும் சராசரி மழையின் அளவுக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திடீரென்று ஒரே நாளில் 30 செ.மீ, 45 செ.மீ மழை பெய்தால் என்ன செய்வது.? இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ஆனாலும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்தார்.

அட்டை கம்பெனியை பார்த்துக் கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி..!

ஆவடி, காவல்சேரி கிராமத்தில் அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது.

கோயம்புத்தூர் விளாங்குறிச்சி சேரன் மாநகர பகுதியை சேர்ந்த தனிஷ் சேவியர் ஆனந்தன், ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் கடந்த 26-ஆம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ஆவடி, காவல்சேரி கிராமத்தில் சொந்தமாக அட்டை கம்பெனி ஒன்றை மனைவி பெயரில் நடத்தினேன்.

அப்போது சென்னை நொளம்பூரைச் சேர்ந்த நண்பர் முத்துராஜ் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாக கூறியதால் கம்பெனியை பார்த்துக் கொள்ளுமாறு 2021 அக்டோபர் மாதம் அவரிடம் கூறினேன். முத்துராஜ் கம்பெனியை பார்த்துக்கொண்டு, மின்சார கட்டணம் மற்றும் சம்பளம் போக லாபத்தில் பாதி தருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் மீதான நம்பிக்கையில் அக்ரிமெண்ட் பத்திரம் போடாமல் சம்மதம் தெரிவித்தேன்.

அதன்படி முத்துராஜ் 2022 முதல் மாதந்தோறும் ₹25,000 கொடுத்து வந்தார். ஆனால், நான் வாங்கி வைத்திருந்த இயந்திரங்களை பயன்படுத்தி முத்துராஜ் அவரது மனைவி முத்துலட்சுமி பெயரில் அதே இடத்தில் புதிதாக கம்பெனியை ஆரம்பித்து நடத்தினார். பிறகு முத்துலட்சுமியின் நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து கம்பெனிக்கு போலியாக வாடகை ஒப்பந்த பத்திரம், வாடகை ரசீது, தடையில்லா சான்று மற்றும் இயந்திரம் வாங்கியதாக போலி பில் போன்ற ஆவணங்களை உருவாக்கி, எனது கையெழுத்தையும் போலியாக போட்டு ஆவணம் தயார் செய்துள்ளனர்.

நவம்பர் 2021-ல் பூந்தமல்லி சரகத்தில் முத்துலட்சுமி பெயரில் ஜிஎஸ்டி பில் பெற்று, கோயம்பேடு ஸ்டேட் பேங்க் வங்கி கிளையில் மார்ச் 2022-ல் லோன் வாங்கியுள்ளனர். எனக்கு சொந்தமான இயந்திரங்களை வைத்து திருவள்ளூரில் மாவட்ட அலுவலகத்தில் அரசு மானியம் பெற்றுள்ளனர். நான் 2023-ம் ஆண்டு வரவு செலவு கணக்கை பார்க்கச் சென்ற சமயம் எனக்கு தரவேண்டிய கம்பெனி வருமானத்தை தராமல் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. என்னிடம் மொத்தம் ₹4 கோடி மோசடி செய்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த சென்னை நொளம்பூர் ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட்டை சேர்ந்த முத்துராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மதுரவாயல் ரெசிடென்சி அபார்ட்மெண்ட்டை சேர்ந்த கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

india vs bangladesh: கான்பூர் டெஸ்ட் இந்திய அணி சாதனை மேல் சாதனை ..! அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள்..!

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட. 35 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வீச நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடக்க டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்தனர். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 150 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது.

ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன்விளைவாக இந்திய அணி 200 ரன்களை கடக்க மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 250 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு 9 விக்கெட் இழக்க 52 ரன்கள் முன்னிலையில் டிக்ளர் செய்து.

சீமான் விமர்சனம்: மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகமா..!?

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.” என சீமான் பரபரப்பாக பேசினார்.

அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து முதல்வர் ஸ்டாலின், தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக, வ.உ.சி போல சிறையில் செக்கிழுத்தவர்கள், 9-10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து, தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது.

வீரதீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவையெல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுக. அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே, அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது, வருக வருக, வீரதீர தியாக செயல் என்று கூறுவதும் திமுகதான்.

திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் நல்ல அமைச்சர், அவ்வளவுதான்.” என சீமான் கடுமையான விமர்ச்சித்தார்.