உதயநிதி ஸ்டாலின்: நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..!

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: “திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை..!”

‘திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சி’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் காந்தி சாலையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது, எல்லா மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் தான் இருப்பார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். ஸ்டாலின் மட்டும் முதலமைச்சராக இல்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பலர் முதலமைச்சர் போல் செயல்படுகின்றனர். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த நான் பொதுச் செயலராக உள்ளேன். இதுபோல் வேறு எந்தக் கட்சியிலும் சாதாரண தொண்டன் உயர் பதவிக்கு வர முடியாது.

திமுகவில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உயர் பொறுப்புக்கு வர முடியும். கடந்த அதிமுக ஆட்சியை மோசமான ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆனால் எங்கள் ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. விலைவாசி உயராமல், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில்தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாய பங்களிப்போடு இந்தத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத் தினோம். இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயன்படுத்திக் கொண்டனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துகொண்டு இருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே மு.க.ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். தனக்கு பிறகு தனது மகன் அதிகாரத்துக்கு வர வேண்டும் என நினைக்கிறார். தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை.

அதிமுக இருக்கும் வரை கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் அரசு உயர் பொறுப்புக்கு வர முடியாது. மிசாவின் போது பாதிக்கப்பட்ட பலர் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பதவியில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்ஆகியுள்ளார். உதயநிதி மட்டும் அல்ல, அவரது மகன் இன்ப நிதி வந்தாலும் ஏற்போம் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார் திமுக ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்டு விட்டது. இதனைக் கூறுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா?

இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை திமுக நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறவில்லை. சிறப்பாக ஊழல்தான் நடக்கிறது. போதைப்பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு திமுக ஆட்சியில் மோசமான நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நல்ல கூட்டணி அமைத்து போட்டியிடும். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுகவின் பக்கம் உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி பேசினார்

“திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீடு..!

வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது..!

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள அறிக்கையில், உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அந்த வகையில், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் பிரிவில் 10 விருதுகளும், ஹெலன் கெல்லர் விருது பிரிவில் 2 விருதுகளும், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப்பணியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு விருதும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 2 விருதுகள் என மொத்தம் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகர்களை வட சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க சென்னை மாவட்ட ஆசியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

லாரன்ஸ் பிஷ்னோய் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியா..!?

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அம்மாநில அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை லாரன்ஸ் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20 -ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ஆம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கெனவே அறிவித்த விவகாரம் புயலை கிளம்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் உள்ள நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுமாறு லாரன்ஸ் பிஷ்னோயை அம்மாநில புதிய அரசியல் கட்சியான உத்தர் பாரதிய விகாஸ் சேனா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோயுக்கு, உத்தர் பாரதிய விகாஸ் சேனா தலைவர் சுனில் சுக்லா எழுதியுள்ள கடிதத்தில் தனது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரது வெற்றிக்காக தங்கள் கட்சி தீவிரமாகப் பாடுபடும் என உறுதி அளித்துள்ளார்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க..! வயதான தம்பதிகள் வீடியோ வைரல்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காயலான் கடை நடத்திவரும் வயதான தம்பதியிடம் மாமூல் கேட்டு மறைமலைநகர் காவல்துறை தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் அருகாமையில் வயதான தம்பதி கடந்த சில ஆண்டுகளாக காயலான் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து காவல்துறை ரூ.100 முதல் ரூ.200 கட்டாயப்படுத்தி மாமூல் வாங்குவதாகவும், ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உயர் அதிகாரிக்கும் ஓட்டுனருக்கும் என இருவருக்குமே ரூ.200 கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குகிறார்கள் என காயிலாங் கடை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காவல் நிலையத்திற்கு மாதம், மாமூல் கொடுத்தாலும் ஒரு சில காவலர்கள் பெட்ரோல் போட காசு இல்லை என்று இந்த வழியாக வரும்போது எல்லாம் மாமூல் கேட்கிறார்கள். மீறி தர மறுத்தால் திருட்டு பொருள் வாங்குறீங்க என உங்கள் மீது வழக்கு போட்டு ரீமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் காவல்துறையினர் வரும் போதெல்லாம் ரூ.100, ரூ.200 என மாமூல் கொடுத்து அனுப்புகிறோம். மேலும், எங்கள் கடையை ஒட்டி உள்ள அனைத்து கடைகளுக்கும் இதே நிலைமைதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க என மன குமறலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வயதான தம்பதிகள் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இரா. முத்தரசன்: முதல்ல சீமான் ஆட்சிக்கு வரட்டும்..! மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்..!

ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை சீமான் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியர் பயிலரங்க கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இரா. முத்தரசன் பதிலளித்தார். அப்போது, 1925 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது. கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் இரா. முத்தரசன் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை சீமான் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம். தற்போது தமிழ் தாயை மதிக்க வேண்டுமா ? வேண்டாமா ? தமிழ் தாய் வாழ்த்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? வேண்டாமா ? இது தான் தற்போதைய பிரச்சனை, இதற்கு தான் சீமான் பதில் கூற வேண்டும் என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

சீமான் கேள்வி: இது எங்கள் நாடு..! எங்கே இருக்கிறது திராவிடம்..!?

எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? என சீமான் பேசினார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் தெரிவித்தார்.

சீனர்கள் அதிகமாக உள்ள செல்போன் செயலி நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்பு விகாரத்தில் சிக்கல்

HPZ டோக்கன் என்ற செல்போன் மோசடி நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறையினர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள்.

நிதி நிறுவன விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், நகை அடகுகடை விளம்பரங்கள், சீட்டு கடை விளம்பரங்கள், நகைக்கடை விளம்பரங்களில் தங்களுக்கு பிரியமான நடிகர், நடிகைகளே வந்து விளம்பரம் செய்வதால், உண்மையில் அந்த நிறுவனம் பெரிய நிறுவனமாகவும், நம்பிக்கையான நிறுவனமாகவும் இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.

நடிகர், நடிகைகளும், பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அவர்களின் பின்புலம் பற்றி அறியாமல் நடித்துக் கொடுக்கின்றனர். சில நாட்கள் நபிக்கையாக இருப்பது போல காட்டி பின்னர் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடிக்க தொடங்கி விடுகின்றனர். கடைசியில் அப்பாவி மக்கள்குருவி போல சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலை வாயில் போட்டது போல போட்டு விட்டு விழிபிதுங்கி நடுத்தெருவில் நிற்கின்றனர்.

இந்நிலையில், ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் 3 மாதங்களுக்கு தினந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதியின் மூலம் HPZ டோக்கன் என்ற செல்போன் ஆப் மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அப்படி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. பின்னர் புதிதாக முதலீடு செய்ய அவர்கள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர். இதில் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தார்கள்.

அதில் சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 79 நிறுவனங்கள் உள்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளிகள் அனைவரும் எச்.பி.இசட் டோக்கன் என்ற ஆப் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.” சீனர்கள் அதிகமாக உள்ள இந்த செல்போன் செயலி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றுள்ளார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

இதைத் தொடர்ந்து தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தமன்னாவிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சல்மான் கானை கொலை செய்ய ரூ. 25 லட்சம்..! சல்மான் கானின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 – 70 பேர் களமிறக்கம்..!

நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டதாக நவிமும்பை காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சுகா என்ற நபரை நவி மும்பை காவல்துறை நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது என்று நவிமும்பை காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார் என்றும் சல்மானை கொலை செய்ய குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரை நியமித்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

சல்மான் கானை கொலை செய்த பின்பு கொலைகாரர்கள் கன்னியாகுமரியில் ஒன்றுகூடி இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 – 70 பேரை களமிறக்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.