ராகுல் காந்தி டுவிட்டரில் கோவிட் -19 மரணங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசு தயாராக இல்லை

மத்திய, மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் கோவிட் -19 னால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘உயிரை மதிப்பிடுவது சாத்தியமில்லை என்றாலும், அரசு வழங்கும் இழப்பீடு ஒரு சிறிய உதவி மட்டுமே. ஆனால் அதைக்கூட செய்ய மோடி அரசு தயாராக இல்லை’ என்று கூறியுள்ளார். கோவிட் -19 தொற்று காலத்தில் முதலில் சிகிச்சை பற்றாக்குறை, பின்னர் தவறான புள்ளிவிவரங்கள், அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

4-ம் வகுப்பு மாணவன் உண்டியல் சேமிப்பை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெ. கிஷோர் குமார் அவர்களின் மகன் அஹோபிளம் மஹரிஷி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் கி.விபுல் கல்யாண் உண்டியல் சேமிப்பை 4000 கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 360 பேர், பயிற்சி மருத்துவர்கள் 150 பேர் உள்ளனர். தங்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, மருத்துவமனை வளாகத்தில், கருப்பு பேட்ஜ் அணிந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கூறுகையில், ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை குறைவாக வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., முடித்து பணியில் சேரும் டாக்டர்களுக்கு, ரூ.80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், எம்.பி.பி.எஸ்., முடித்து மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, குறைவான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கவேண்டும் என கோரிக்கை வைதது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் வாயிலாக எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

கோவிட் -19 தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு விலை நிர்ணயம் தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கோவிட் -19 பரவல் நீடித்து வரும் நிலையில், மக்களுக்கு தினமும் கோவிட் -19 பரவல் தடுப்புக்கான முககவசம், சானிடைசர் போன்ற பொருட்கள் கட்டாயம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஊரடங்கு உத்தரவினால் ஏற்கனவே குடும்ப வருமானம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், கோவிட் -19 தடுப்பு பொருட்களை சாதாரண மக்களும் வாங்கியாக வேண்டும்.

எனவே கோவிட் -19 பரவல் கட்டுப்பாடு தொடர்பான சில பொருட்களை, தமிழ்நாடு அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடு மற்றும் வேண்டுகோள் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் என்று அறிவித்து, அந்தப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி லயன்ஸ் கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கல்


கோவிட் -19 யை வீழ்த்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் தமிழ்நாடு அரசுடன் கைகோர்க்கும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை அதன் நிர்வாகிகள் அமைச்சர் கே.என் . நேரு அவர்களிடம் வழங்கினர்.

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்ட போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு இந்த கடமையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர் மாணவர் பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் கலந்துரையாடல்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த 1-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறிய மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ வாரியம் இணைந்து காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தன.


இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திடீரென பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடி னார்.12-ம் வகுப்பு தேர்வு குறித்து அவர் எடுத்த முடிவு பற்றி மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். நேரலையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 38 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவராக கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர் சித்ராகர் தேப்ரக் பங்கேற்று மோடியுடன் கலந்துரை யாடினார்.

காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் மரியாதை

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்! அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்! என தெரிவித்தார்.