K. பிச்சம்பட்டி ஊராட்சி‌ மன்ற‌த் தலைவர் அபிராமி வேலுசாமி திமுகவில் இணைந்தார்


கரூர் மாவட்டம், தாந்தோணி கிழக்கு ஒன்றியம் K. பிச்சம்பட்டி ஊராட்சி‌ மன்ற‌த் தலைவர் அபிராமி வேலுசாமி மற்றும் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் P. மாரியப்பன் அதிமுகவிலிருந்து விலகி இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சோதனைச்சாவடியில் காவல்துறையினரை தாக்கும் இளைஞர்கள்…

மதுரை மாவட்டம். உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேரும் உசிலம்பட்டி அருகே உள்ள விருவீடு காவல் நிலைஅய சோதனைச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களின் இருசக்கர வாகனம் காவல்துறை அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.

இந்நிலையில், அங்கிருந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக காவல்துறையினருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

உடனடியாக, அங்கிருந்த காவலர் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் இருந்து உருட்டுக்கட்டை எடுத்து வந்தார். அதேநேரத்தில் இளைஞர் ஒருவர் அருகில் இருந்த தென்னம் மட்டை, மற்றும் கற்களை எடுத்து காவல்துறையினரை தாக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து, காவல்துறையினரும் அந்த இளைஞர்களை தடுத்துள்ளனர். இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினரை மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்தனர்.

98 வயதான எஸ்.காமேஸ்வரன் அவர்களின் திருவுடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி அஞ்சலி

டாக்டர் எஸ்.காமேஸ்வரன் சென்னை மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை துறை இயக்குநராக பொறுப்பு வகித்தவர். காது, மூக்கு, தொண்டை துறையில் இந்தியாவில் முதன் முதலாக ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

தேசிய மருத்துவ அறிவியல் அகாதெமி சார்பில் வாழ் நாள் சாதனையாளர் விருது வாங்கியவர். 98 வயதான எஸ்.காமேஸ்வரன் இன்று இயற்கையெய்திய அவர்களின் திருவுடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் சங்கம் சார்பாக பொது நிவாரண நிதி

சென்னை வடப்பெரும்பாக்கம் 17-வது வார்டு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் சங்கம் சார்பாக கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1,19,500-க்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு சங்க தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று உதயநிதி ஸ்டாலின் வழங்கினர்.

ஆன்லைனில் வந்த உணவில் கரப்பான் பூச்சி

தமிழில் ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “நான் செயலி மூலம் ஓ.எம்.ஆர். சாலை கந்தன்சாவடியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

அந்த சாப்பாடு பார்சல் வந்ததும் சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான் பூச்சி இருந்தது. ஓட்டல்கள் என்ன தரத்தை பின்பற்றுகின்றன என்று தெரியவில்லை. இதுவரை இரண்டு தடவை எனது உணவில் இருந்து கரப்பான் பூச்சியை எடுத்துள்ளேன். இதுபோன்ற உணவகங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி தரமில்லாமல் இருப்பின் அதிக அபராதம் விதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனம் மீது மேலும் ஒரு மோசடி புகார்

திருச்சிராப்பள்ளி மாநகரம் மன்னார்புரத்தில் எல்ஃபின் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திருச்சிராப்பள்ளி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ் என்பவர், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், ‘எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதத்திற்குள் 3 மடங்கு திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ரூ. 72.82 லட்சம் முதலீடு செய்தேன்.

நண்பர்கள், உறவினர்கள் மூலம் மொத்தம் ரூ. 2 கோடியே 18 லட்ச முதலீடு செய்துள்ளோம். இதை இரண்டு, மும்மடங்காக, 4 கோடியே 68 லட்ச ரூபாயை தருவேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதற்குரிய காசோலைகள் வழங்கினார்கள்.

ஆனால் அதை வங்கியில் செலுத்த சென்ற போது, அந்த அக்கவுண்ட்டில் பணம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். பணத்தை நேரடியாக சென்று கேட்டபோது, பலமுறை அலைகழித்து, திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்ட போது, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னை – நந்தனத்தில், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணியினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்துகொண்டார்.

 

ஆட்சியர் அலுவலகத்தில் மனு: கைத்தறி ராட்டையை சேதப்படுத்திய காவல்துறை துணை ஆய்வாளர்

ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.


இந்நிலையில் பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த நெசவு தொழிலாளியான எல்லத்துரை என்பவர் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவர்களின் கைகளில் தறி மற்றும் ராட்டை இருந்தது. இதையடுத்து அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது ஆண்டிப்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற போது அந்த பகுதியில் இருந்தவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த தறி, ராட்டையை சேதப்படுத்திவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.

விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம், வேடப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மடத்துக்குளம் தாசில்தாரிடம் கொடுத்துள்ள அந்த மனுவில், வேடபட்டியிலுள்ள கல் குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுகிறது. இவ்வாறு உடைத்த கற்களை கனரக வாகனங்களில் ஏற்றி இரவு பகல் இடைவெளியின்றி வெளியே கொண்டு செல்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. மேலும் இந்த கல் குவாரி அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்க செய்வதால் அதிர்வு ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுவதுடன் ஓடுகள் உடைந்து சேதமடைகிறது. எனவே தினம் தினம் பயந்து பயந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை உள்ளது. இதனால் இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

இங்கு அதிக ஆழத்தில் வெடிகள் வெடிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப் பயன்படும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வறண்டு விடுகிறது. இதனால் தண்ணீர் தேவைக்கு அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்துடன் கல் குவாரியிலிருந்து வெளியேறும் வெடிபொருட்களின் நச்சுக்களும், பாறைக் கழிவுகளும் விவசாயப் பயிர்களில் படிந்து மலட்டுத் தன்மை ஏற்படுவதால் மகசூல் இழப்பை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே அரசு சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யவும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என தெவிரித்துள்ளனர்.