K. Balakrishnan: துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எங்களது கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரிப்பன் மாளிகை அருகே எனது தலைமையில் போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள விக்டோரியா கட்டிட நுழைவுவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்துக்காக கட்சியினர் கூடினர். காலை சுமார் 11 மணி அளவில் அப்பகுதிக்கு நானும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சென்றோம்.

அப்போது கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தெரிவித்தார். துணை ஆணையர் ரகுபதி கூறியபடி, கட்சியினர் 50 மீட்டர் தள்ளிச் சென்றனர். ஆனால், துணை ஆணையர் மேலும் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறையினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் உள்ளிட்டவர்களை பிடித்துத் தள்ளிவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, எங்களை ஒருமையில் பேசியும், கையால் தள்ளியும், அடாவடித்தனமாகச் செய்தனர்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது `கைது செய்ய வேண்டிவரும்’ என மிரட்டும் வகையில் சத்தமிட்டார். கடைசி வரையில் காவல் துறையினரை வைத்து சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் சரியாக நடத்துவதற்கே அவர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு கிளம்பிய என்னைக் கைது செய்வதாகக் கூறி, வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது. எனவே, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் தெரிவிக்கப்படுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர் எம்பி சீட் தருவதாக கூறி ரூ.1.60 கோடி சுருடியதாக வழக்கறிஞர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன். இவர் மனைவி மற்றும் நண்பர்களுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், அதிமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறேன்.

அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது போடப்பட்ட 9 வழக்குகள் மற்றும் 2022-ல் உளுந்தூர்பேட்டையில் அமையவுள்ள திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் கட்டப்பட்டு வரும் வெங்கடேசபெருமாள் கோயில் வழக்குவரை அனைத்து வழக்கிலும் ஆஜராகி பணம் வாங்காமல் வழக்கை முடித்து கொடுத்தேன்.

இந்நிலையில், கடந்த 22.1.2024-ஆம் தேதி மாவட்ட செயலாளர் குமரகுரு 2024 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தனி தொகுதிக்கு உன்னை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு பரிந்துரைத்து சீட் வாங்கி தருகிறேன் என்றும், அதற்கு ரூ.2 கோடி தயார் செய்யும் படியும் தெரிவித்தார். அதன்படி 3 தவணையாக மொத்தம் ரூ.1.60 கோடி கொடுத்தேன். விழுப்புரம் எம்பி சீட் உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள ரூ.40 லட்சம் கொடுக்கிறேன் என தெரிவித்து இருந்தேன்.

மார்ச் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லாமல் வேறு நபர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் குமரகுரு திட்டமிட்டு நம்பவைத்து ஏமாற்றியது தெரியவந்தது. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதற்கு என்னை தாக்கினார். எனது ரூ.1.60 கோடி பணத்தை பெற்று தர வேண்டும். என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டால் குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் நமச்சிவாயமும் தான் பொறுப்பாவார்கள் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

விசிக தீர்மானம்: தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட கால நிர்ணயம்..!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில், கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஆளுர் ஷா நவாஸ், சிந்தனைச் செல்வன், பனையூர் மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி துணை பொதுச்செயலாளர்கள் ரஜினிகாந்த், வன்னியரசு, ஆதவ் அர்ஜுனா, எழில்கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசியக்கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் சமக்ரா சிக் ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படும் என மிரட்டல் அரசியல் செய்யும் பாஜக அரசுக்கு வன்மையான கண்டனம். நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் மூலம் தமிழக அரசின் அணுகுமுறை வழுவிச் செல்வதாக அச்சம் மேலிடுகிறது. சாதிய படுகொலையை கட்டுப்படுத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கும் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும். இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகவுன்சில் கூட்டத்தில், போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை இலங்கைஅரசு வெளியிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் போண்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்கள் எந்த துறையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அந்த பெண்ணை ஆபாசமாக இழிவுபடுத்தும் முறையில் பிரச்சாரம்…!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், எக்ஸ் தளத்தில் தளத்தில் இருந்து நானும், எனது மனைவியும் விலகுவதாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் பக்கத்தில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், வந்திதா பாண்டேவுக்கு ஆதரவாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், அவரது பதிவில், “பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கனிமொழி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்கிரமராஜா: காலாவதி சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றாவிட்டால் டெல்லி முற்றுகை..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சங்க பலகை, கொடியேற்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விக்கிரமராஜா பேசுகையில், தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயர்வு என்பது, பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைத்திட வேண்டும்.

மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளை மாற்ற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என சொல்லி ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் அகற்றவில்லை. எத்தனை ஆண்டுகளில் அகற்றப்படும் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை கையில் எடுப்போம் என ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தனியார் மயமாக்கும் அரசாணைகளை திரும்ப பெற தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

சென்னை எழும்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டு, தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் எழுப்பினர்.

மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர துப்புரவு பணி உட்பட இதர பணிகளை, தனியார்மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெறவேண்டும். அனைத்துப் பிரிவுதொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் அரசாணையை அமலாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அதற்கேற்ப பஞ்சப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போலி ஆவணத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன்பெற முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி கைது..!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்த பாஜக முன்னாள் மண்டல தலைவர் பிரகாஷ், அதே ஊரை சேர்ந்த ஜெயராமன் மனைவி புவனேஸ்வரியும் வேளாண் கடன் பெறுவதற்காக அந்தநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 5-ஆம்தேதி மனு கொடுத்தனர். அதில் அடங்கல் சான்றிதழில் வி.ஏ.ஓ கையொப்பத்தை தாமாகவே போட்டதுடன், அலுவலக முத்திரையையும் போலியாக தயாரித்து பயன்படுத்தியது தெரியவந்தது.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தினர் விஏஓ தரப்பில் விசாரித்த போது சான்றிதழ் வழங்கியது உண்மையல்ல என தெரிவித்தார். இதையடுத்து மனுவை நிராகரித்த கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பரமேஸ்வரன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிந்து பிரகாஷ், புவனேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.

காதலியை கரம்பிடிக்க போதையில் 5 முறை கிணற்றில் குதித்து ஆசாமி..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரை சேர்ந்த முனியப்பன் மகன் விஜய். கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டி பகுதியை சேர்ந்த திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவி. அந்த மாணவிக்கும், விஜய்க்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவியின் வீட்டிற்கு போதையில் நேற்று முன்தினம் சென்ற விஜய், திருமணம் செய்து கொள்ளலாம் வா எனக்கூறி மாணவியை அழைக்க, மாணவி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவியிடம் நீ வராவிட்டால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வேன் எனக்கூறிவிட்டு, பாலப்பட்டி அருகே விவசாய கிணற்றில் விஜய் குதித்துள்ளார். அவருக்கு நீந்த தெரியும் என்பதால் மேலே எழுந்து வந்தவர் மீண்டும் குதித்தார். இப்படியாக 4 முறை குதித்து மேலே எழுந்து வந்தவர் 5-வது முறையாக குதித்தபோது மேலே வர முடியவில்லை.

விஜய் கிணற்றில் குதித்தது, மாணவியின் உறவினர்கள், கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறை இடைப்பாடி தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி விஜய்யை உயிருடன் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என விஜய்யை காவல்துறை எச்சரித்து அனுப்பினர். அப்போது, மாணவி காவல்துறையினரிடம் தான் விஜய்யுடன் செல்வதாக கூற அவரது உறவினர்கள் மாணவிக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தது பதக்கம் பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..!

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு படை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட சீர்திருத்த சேவைகளில் சிறப்பாக பணியாற்றிய 1307 காவல்படை வீரர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்திய குடியரசு தலைவர் பதக்கம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகேசன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதக்கம் திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் பதக்கம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்களுக்கும், அண்ணா பதக்கம் நிலக்கோட்டை சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செல்வம் அவர்களுக்கும் 23.08.2024 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்று சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பதக்கம் பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.

 

39 வயது அண்ணாமலையை விடுங்கள்…! 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும்..!

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி குறித்த அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆற்றிவரும் எதிர்வினை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம், நூறு சதவீதம் என்னைப் பொறுத்தவரை சரி. அதிலிருந்து நான் ஒரு புள்ளி அளவுகூட பின்வாங்க மாட்டேன். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தினந்தோறும் என்னை திட்டலாம். என்னை தற்குறி என்று கூறலாம். படிப்பு குறித்து பேசி கொச்சைப்படுத்தலாம். நான் செய்யக் கூடிய வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். இதெல்லாம் அவர்கள் செய்யலாம்.

நான் அப்படியே கையைக் கட்டிக்கொண்டு, என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா, உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கிறது. எனக்கு 3 வருட அனுபவம்தான் இருக்கிறது, என்று சொல்வதற்காக நான் வரவில்லை. கை, காலைப் பிடித்து, வேலை செய்யாமல் உழைக்காமல் நான் வந்ததாக கூறுகின்றனர். விடிய விடிய படித்தது எனக்கு தெரியும். விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும். விடிய விடிய எங்க அப்பாவுடன் மண்வெட்டி பிடித்த கை. இருபது வருடங்கள் ஆனாலும், இன்னும் காப்புக் காய்ச்சிருக்கிறது பாருங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியும்.

மேலும் ஜெயக்குமார் அரசியல் அனுபவம் தங்களுக்கு இருப்பதாக கூறுகிறாரா? 39 வயது அண்ணாமலையை விடுங்கள். 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா என்று ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும். கையை, காலைப் பிடித்து இந்தப் பதவிக்கு வந்ததாக கூறுகின்றனர். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

கர்நாடகாவில் பாஜக அரசாக இருந்தாலும் உண்ணாவிரதம் நடக்கிறது. மத்தியப் பிரதேச அரசின் முதலமைச்சர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், வரவேற்க நான் செல்வது இல்லை. ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தமிழகத்தை முதன்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக? தமிழக மக்கள் அந்த அரசியலை விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் போன்று பாஜக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். எனவே, அதிமுகவினர் குய்யோ, முய்யோ என்று கத்துவதை விட்டுவிட வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பவும் பேசுவேன்.

53 வயது ராகுல் காந்தி இளைஞர் என்று சொல்லும் அளவுக்கு மோசமாக போய்விட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இளைஞரணி தலைவராக எத்தனை ஆண்டு காலம் இருந்தார்? உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவர் அவருக்கு வயது 50. எங்களுடைய கட்சியில் 35 வயதுக்கு மேல் ஒருநாள் இருந்தாலும் இளைஞரணி தலைவராக இருக்க விடமாட்டேன். அதை மூன்று வருடமாக கடைபிடிக்கின்றோம். தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்கவில்லை. நான் கையை, காலைப் பிடித்து வந்ததாக அதிமுகவினர் கூறினர். அதற்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை, உரிமை. என்னுடைய நாற்காலிக்கு அந்த மரியாதை இருக்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் பதவிக்கான இருக்கைக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அதற்காக நான் பதில் சொல்லியிருக்கிறேன்,” எனஅண்ணாமலை தெரிவித்தார்.