தமிழ்நாட்டில் காலாவதியான 27 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்று..!

தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76-வது மகா சபைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளும் காலாவதியானவையாகும்.

காலாவதியான சுங்கச்சாவடிகளில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 2036-ஆம் ஆண்டு வரை சுங்கக்கட்டணம் வசூல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது சம்பந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் லாரிகள் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால், வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

இல்லை என்றால் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த விஷயத்தில் இனி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் ‘முதலமைச்சர் கோப்பை 2024’ கோலாகலமாக தொடங்கி வைப்பு..!

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் ‘முதலமைச்சர் கோப்பை’ என்ற விளையாட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு முதல் 3 இடத்தை பிடித்தது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி செப்டம்பரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (Online Registration) 04.08.2024 முதல் முன்பதிவு செய்யப்பட்டு 11,56,566 நபர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிகள் 5 வகையான பிரிவுகளில் 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு..!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட கோரி மாணவர்கள் போராட்டத்தை அடுத்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்கள் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்து அதன்விளைவாக 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில், எட்டு பேர் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமடைந்தனர்.

இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணிப்பூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்..!

புகையிலை பொருட்கள் தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தீவிர ஒழிப்பு திட்டத்தின்படி போதையில்லா தமிழகத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து 33 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த நவம்பர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை, உள்ளாட்சி துறையினர் குழுவாக இணைந்து சுமார் 6,231 முறை சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 349 கடைகளில் சுமார் 3,781 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.86,05,000 அபராதம் விதிக்கப்பட்டு 349 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

கடந்த 26.8.2024 முதல் 1.9.2024 வரையிலான ஒரு வாரத்தில் 33 குழுக்கள் நடத்திய ஆய்வில், 9 கடைகளில் சுமார் 22 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. முதன்முறையாக தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும். 3 வது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை, வெளி மாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக புகார் ஏதுமிருப்பின் பொதுமக்கள் 94875 48177, 94114 94115 மற்றும் 10581 என்ற கட்டணமில்லா எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

R. B. Udhayakumar: மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள் மாணவர் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விடும்..!

மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விடும். அவரது பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை அசோக் நகரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு மத்தியில் தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள் கண் இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம்தான் காரணம் என்றும், கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றால் அவ்வாறு ஏன் வேறுபாட்டுடன் படைக்கிறார் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியும், மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியும் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது விஷ்ணுவுக்கும், ஆசிரியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்கள், இந்திய மாணவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பள்ளி மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நல்வழிகாட்டும் முறைகள் குறித்தும், அவர்களுடைய ஆற்றலை வலுப்படுத்தும் விதமாகதான் பேச வேண்டும். இவ்வாறு பேசுவதை விட்டுவிட்டு சர்ச்சையான பேச்சினை மகாவிஷ்ணு பேசியுள்ளார். இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். மகாவிஷ்ணு பேசிய பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு..!

சிறைத்துறை விதிகளை மீறி ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தி சித்ரவதை செய்ததாக வேலூர் சிறைத்துறை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட 14 பேர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தனர்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் உள்ளார். இவரை வேலூர் மத்திய சிறை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் வீட்டு வேலைக்கு பயன்படுத்திய போது காவல்துறைத் துணைத்தலைவர் வீட்டில் ரூ.4.5 லட்சம் மாயமானது.

கைதி சிவகுமார் தான் எடுத்து இருப்பார் என்ற யூகத்தின் அடிப்படையில் அவரை கடுமையாக தாக்கியதாகவும், தனிமை சிறையில் அடைத்து, சிறைத்துறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் சித்ரவதையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆயுள் தண்டனை கைதி சிவகுமார், தன்னை பார்க்க வந்த தாய் கலாவதியிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கலாவதி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் சிபிசிஐடி உத்தரவிட்டனர்.

அதன்படி சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு சிறைக்கையேட்டின் 447-வது விதியின் படி தண்டனை கைதிகள் யாரையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியே அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி மற்றும் வேலூர் சிறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் மீறியுள்ளனர்.

காவல்துறைத் துணைத்தலைவர் வீட்டில் மாயமான ரூ.4.5 லட்சத்தை ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் திருடியாக அவரை 95 நாட்கள் தனிமை சிறையில் அடைத்து வைத்து வேலூர் சிறை ஜெயிலர் அருள்குமரன், காவல்துறைத் துணைத்தலைவர் பாதுகாப்பு அதிகாரி ராஜூ என 8 ஆண் சிறை காவலர்கள், 2 பெண் சிறை காவலர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்தியதும் சிபிசிஐடி விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறை காவல்துறைத் துணைத்தலைவர் ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது பிஎன்எஸ் 146, 127(8), 118(2), 115(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து காவல்துறைத் துணைத்தலைவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஜெயிலர் உட்பட 14 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்குள் மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லம்: தமிழக அரசு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆறு மாதங்களுக்குள் மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லத்தை அரசு அமைக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் நடைமேடை, பேருந்து நிறுத்தங்களில் ஆதரவின்றி தங்கியுள்ளனர்.

இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி மாவட்டந்தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தனியார் தொண்டு நிறுவனங்களால் முதியோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆறு மாதங்களுக்குள் ஒரு முதியோர் இல்லத்தையாவது அரசு அமைக்க வேண்டும்’’ என தமிழக அரசிற்கு உத்தரவிட்டனர்.

மகளிர் சுய உதவி குழுகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி காசோலை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுகளுக்கு 2,735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் துவங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

கிண்டியில் ரேஸ் கிளப் 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியால் சீல்..!

சென்னை கிண்டியில் ரேஸ் கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஜெயக்குமார்: அட்டைக் கத்தி பாரதி கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது..!

வாய் வீச்சு, அட்டைக் கத்தி பாரதி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். பாரதி, முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு, தான் ஒரு வக்கீலுக்குப் படித்தவர் என்பதையும் மறந்து, நாலாந்தரப் பேர்வழியாக, தான் இன்னும் திமுக-வில் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது உணர்த்தும் விதமாக கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுக்கையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் நாட்டிற்கு சாதித்தது என்ன? முழு விவரங்களை வெளியிட வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளருக்கு முதலமைச்சரோ, தொழில் துறை அமைச்சரோ பதிலளிக்க திராணியில்லாமல், முந்திரிக்கொட்டை போல் திமுக-வில் தனது இருப்பை காட்டத் துடிக்கும் அட்டைக் கத்தி ஆர்.எஸ். பாரதி-யை அறிக்கை விடவைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

வாய் வீச்சு, அட்டைக் கத்தி பாரதி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். பாரதி, முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு, தான் ஒரு வக்கீலுக்குப் படித்தவர் என்பதையும் மறந்து, நாலாந்தரப் பேர்வழியாக, தான் இன்னும் திமுக-வில் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது உணர்த்தும் விதமாக கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது.

வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் முதலமைச்சர் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டியும், டைட்டானிக் கப்பல் பட ஹீரோ போல் இரு கைகளையும் நீட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி, சுய விளம்பரம் தேடுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதாவது 24.3.2022 முதல் 28.3.2022 வரை துபாய்; 23.5.2023 முதல் 31.5.2023 வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்; 29.12024 முதல் 7.2.2024 வரை ஸ்பெயின் சுற்றுப் பயணம் செய்தும் தற்போது 4-ஆவது முறையாக மேற்கொண்டிருக்கும் அமெரிக்கா சுற்றுப் பயணம், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் குறிப்பிட்டு, முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தால் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், வேலை வாய்ப்புகள் பற்றி விளக்குமாறும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறும் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியின்போது திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சர் உடல் நிலையை பரிசோதிப்பதற்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக பொதுமக்களிடத்தில் பரவலாக பேச்சுக்கள் வெளியாவதை சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவதாக ஆந்திரப் பிரதேசம், மூன்றாவதாக குஜராத், நான்காவதாக ராஜஸ்தான், ஐந்தாவது மாநிலமாக திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளன. தமிழகம் இப்பட்டியலில் இடம் பெற்றதாகவே தெரியவில்லை.

10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்தியாவின் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு தற்போது இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதை நேரடியாக ஏற்கவோ, மறுக்கவோ வேண்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், திமுக-வில் தான் இருக்கிறேன் என்ற போர்வையில், நேரடியாக பதில் அளிக்க வக்கற்ற பாரதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டுவதை பார்க்கவில்லையா என்று எங்கள் கழகப் பொதுச் செயலாளரைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களுக்கு கண்கள் இரண்டும் தெளிவாக இருப்பதால் தான், அமெரிக்காவிலும் மோட்டார் வைத்த சைக்கிளில் மிதிப்பது போன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிப்பதைப் பார்த்து விமர்சனங்கள் எழுந்துள்ளதை பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஆர்.எஸ். பாரதி அங்கம் வகிக்கும் கட்சியின் தற்போதைய தலைமைக்கு துதிபாடும் கூட்டத்தைப் போன்ற ‘கருத்துக் குருடர்கள் நாங்கள் அல்ல.

தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராகத் திகழும் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எகத்தாளமாக ‘குருடர் என்று சொன்னதன் மூலம் பார்வையற்ற சமுதாயத்தையே இழிவுபடுத்தியுள்ளார், பித்தம் தலைக்கேறிப் போயுள்ள மதி கெட்ட பாரதி’.

ஆர்.எஸ்.பாரதி முதலில் தனது கண் பார்வையை பரிசோதித்து, முதலமைச்சரின் நான்கு வெளிநாட்டுப் பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு பெற்றுள்ள உண்மையான முதலீட்டைப் பட்டியலிட உங்கள் பொம்மை முதலமைச்சரையோ அல்லது தொழில் துறை அமைச்சரையோ நீங்கள் கேட்டு, உண்மை நிலையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்துகிறேன். பொம்மை முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்.

நீங்கள், எங்களது கழகப் பொதுச் செயலாளரின் கண் பார்வையை மேற்கோள் காட்டி, மாற்றுத் திறனாளிகளை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது. பேசுவதையும் பேசிவிட்டு வாய்மூடி மவுனியாக இருந்து சமாளித்துவிடலாம் என்ற இருமாப்போடு இருந்தால் தக்க பாடம் புகட்டப்படும் என்று எச்சரிக்கிறேன்” என ஜெயக்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.