அதிமுக கொடியுடன் வந்த கார்…. பணத்தை இரட்டிப்பு செய்வதாக சொல்லி பணமோசடி…!

தேனி காவல்துறை வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போதுதான், ஜெயலலிதா படம், அதிமுக கொடியுடன் அந்த கார் வந்தது.. அந்த காரை நிறுத்தி, அதனுள் திறந்து பார்த்தால்? பணத்தை இரட்டிப்பு செய்து தருவதற்கு பெயர் டப்ளிங் என்பார்கள். ஆனாலும், பணத்தாசை பிடித்தவர்கள், மோசடி பேர்வழிகளை நம்பி தங்கள் பணத்தை தொலைத்து வருகிறார்கள். இப்படித்தான், தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில், பணத்தை இரட்டிப்பு தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி சொன்னது ஒரு மாந்திரிக கும்பல், இதை நம்பி தேனி பகுதியில் உள்ள சிலர், தங்கள் பணத்தை இந்த கும்பலிடம் தந்துள்ளனர். இந்நிலையில், இந்த தகவல் அதற்குள் காவல்துறையினருக்கும் தெரிந்துவிட்டது. தொடர் புகார்கள் வந்ததையடுத்து, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று, உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி தலைமையில் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜெயலலிதா போட்டோ மற்றும் அதிமுக கொடியுடன் ஒரு கார் வரவும், அதை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு மூட்டை இருந்திருக்கிறது, அந்த மூட்டை திறந்து பார்த்த காவல்துறை அதிர்ச்சி அடைந்துவிட்டனர். மூட்டை முழுவதுமே மனித உறுப்புகள் இருந்திருக்கிறது. நாக்கு, கல்லீரல், மூளை போன்றவை ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன், எலுமிச்சம்பழம், கற்பூரம், முட்டையும் இருந்திருக்கிறது. இதைப்பார்த்து பதறிய காவல்துறை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில்,  மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங், பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் அந்த காரில் வந்துள்ளனர்.

இவர்களையும் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதுதான், அனைவருக்கும் மூளையாக செயல்படும் ஜேம்ஸ் என்பவரது பெயர் விசாரணையின்போது, பெரிய மந்திரவாதி, உத்தமபாளையம் பாறைமேடு தெருவில் வசித்து வருகிறார். பணத்தை இரட்டிப்பு செய்வதாக சொல்லி பணமோசடியில் ஈடுபட்டுவந்ததால், ஜேம்ஸ் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்தான், ஜேம்ஸின் வலையில், 3 பேர் விழுந்துள்ளனர்.

நள்ளிரவில் பூஜை செய்தால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்று ஜேம்ஸ் சொன்னதை கேட்டு அவர்களும் நம்பி உள்ளனர். கேரள மாநிலம் வண்டிப் பெரியாறில் உள்ள ஒருவரிடம் ரூ.2.50 லட்சத்தை தந்துவிட்டு வாருங்கள். அவர் ஒரு சூட்கேஸ் தருவார். அதை வாங்கி வாருங்கள், ஆனால் திறந்து பார்க்கக்கூடாது, அப்போதுதான் நீங்கள் கோடீஸ்வரராகலாம் என்று ஜேம்ஸ் சொன்னாராம். அதன்படியே இவர்களும் கேரளா சென்று பணத்தை தந்து, அவர் தந்த சூட்கேஸினை வாங்கி வந்துள்ளனர்.

ஜேம்ஸ் சொன்னபடியே, அந்த சூட்கேஸை திறந்து பார்க்காமலும் இருந்துள்ளனர். வரும்வழியில்தான், காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்கள். காரில் கைப்பற்றப்பட்ட உறுப்புகளை பார்த்ததுமே, அந்த 3 பேருமே நடுநடுங்கி போனார்கள். அந்த உறுப்புகள் யாருடையது? மனித உறுப்புகளா? மிருகங்களின் உறுப்புகளா? என்பதை கண்டறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பி உள்ளனர்.

முறைகேடு எதிரொலி அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக அதிமுகவை சேர்ந்த வெற்றிவேல் உள்ளார். சங்க செயலாளராக இருந்த ஜெயபால், கடந்த ஏப்ரல் 30-ல் பணி ஓய்வு பெற்றார். அதற்கு 24 நாட்களுக்கு முன் ஏப்ரல் 6-ம் தேதி அவரது பணப்பலன்களில் ரூ.16 லட்சத்து 53 ஆயிரத்தை எடுத்து கொள்ள சங்கத் தலைவர் வெற்றிவேல் அனுமதி அளித்தார்.

இந்நிலையில் இந்த சங்கத்திற்கு செயலாளராக ரவி, கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா மூலம் நியமனம் செய்யப்பட்டார். அவரை சங்கத் தலைவர் வெற்றிவேல், ஏற்கமறுத்து அக்கவுண்டன்டாக உள்ள தனசேகரனுக்கு செயலாளர் பொறுப்பு வழங்கினார். இது தொடர்பாக நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைவர் மட்டுமே கையெழுத்திட்டு ஒரு தகவலை மன்னார்குடி துணை பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், செயலாளராக பணியாற்றிய ஜெயபால், பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே பண பலன்களை சங்க நிதியிலிருந்து எடுத்து கொள்ள அனுமதி வழங்கியது, சங்க பதிவேடுகளை செயலர் தனசேகரன் திருத்தியது, சங்கத்தில் இருந்து பதிவேடுகளை அப்புறப்படுத்தியது, நிர்வாக குழு கூட்டத்தில் செயலராக தனசேகரன் தேர்வு செய்யப்பட்டதாக பொய்யான தகவலை துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி வெற்றிவேலை தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இணைப்பதிவாளர் சித்ரா, நேற்றுமுன்தினம் உத்தரவிட்டு, துணைத்தலைவர் பாலகுரு பொறுப்பு தலைவராக செயல்படுவார் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தெரிவித்து உள்ளார்.

பாதயாத்திரையில்.. அண்ணாமலையிடம் அளித்த மனு.. கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ரோட்டில்..

தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில், தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை த ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல அண்ணாமலையின் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளார்.

அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி… காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர். பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும்.

ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகி 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அண்ணாமலை: “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது…. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது”

இந்தியாவில் பாஜக வளர்வதற்கு முன்பே இந்துத்துவா கொள்கைகளை சுமந்து, யாத்திரைகள் மூலம் இந்துக்களை ஒன்றிணைத்த மிகப்பெரிய கட்சி சிவசேனா. பல் தாக்கரே மறைவிற்கு பின்னர் பாஜக குடைச்சல் கொடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பல வெறுப்பு அரசியலை சம்மதித்து வைத்துள்ளது. இனி வடக்கே பாஜக பருப்பு வேகாது என்ற நிலை ஏற்பட தெற்கே கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரே நேரத்தில் மறைத்ததால் நாம் சென்று ஓட்டு வங்கியை வளர்த்து கொள்ளலாம் என்ற பேராசையில் தமிழகத்தில் வட்டமிட தொடங்கியது.

இந்நிலையில், வரும் நாடளும்மான்ற தேர்தலில் இரண்டு இலக்கங்களில் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் பாஜக நகர்வுகளை நகர்த்துகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி இருந்தாலும். இரு கட்சிகளுக்கிடையே உரசல்கள் அவ்வப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுக்கும். இந்நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. முடிவு வெறும் முடிவாகவே இருக்க யதார்த்தத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தபோது அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். இது பாஜக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் ஒருவர் மட்டுமே கூட்டணி கட்சியான பாஜகவின் யாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்க அனுப்பி வைத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே அதிமுக மாநாட்டுக்காக ரிக்ஷா பேரணியை செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை எங்களுக்கு “Just like” அவ்வளவு தான்! எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என கடுப்பாக பேசியிருக்கிறாா். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இப்படி இருக்கையில் கூட்டணி கட்சிக்குள் வார்த்தை போர் முற்றியிருப்பது இரு கட்சி தொண்டர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் படையல் வைத்து முன்னோரை வழிபட்டனர்…

ஆடிப்பெருக்கு புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பேரூர் படித்துறை யில் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு நேற்று காலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றது.

ஆனாலும் பக்தர்கள் பலர், தங்களின் குடும்பத்தில் உயிரிழந்த குழந்தைகள், திருமணம் ஆகாமல் இறந்த பெண்கள் ஆகியோருக்கு இலையில் படையல் வைத்து வழிபாடு செய்தனர். சிலர் ஆற்றங்கரையோரம் 7 கூழாங்கற்களை கொண்டு கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து காதோலை, கடுகுமணி, தாழைமடல், நாணல் இலை மற்றும் தின்பண்டங்கள் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கோசாலையில் இருக்கும் கன்றுக்குட்டிகளுக்கு அகத்திக்கீரை வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து நொய்யல் ஆற்றங்கரை மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதற்கிடையே புதிதாக திருமணமான இளம்பெண்கள் தாலிக்கயிறை மாற்றிக்கொண்டனர். அத்துடன் பலர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

100 நாள் வேலை திட்ட பெண்களிடம் வேலை செய்யாமல் பணிபுரிந்ததாக கணக்கு காட்ட ரூபாய் வசூல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிய, பெண்களுக்கு அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கான பணிகளை பிரித்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் பணிதள பொறுப்பாளராக அனுமதிக்கப்பட்ட ஒரு சில நபர்கள், கிராமப்புற பெண்களிடையே பேசி, ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாக கணக்கு காட்ட வேண்டும் எனில், தினமும் தலா ரூ.100 கொடுத்தால், பணிபுரிவது போல் கணக்கு காட்டி, அதற்கான பணத்தை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பணம் கொடுத்தவர்கள் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வேலைக்கு சென்றவாறே சம்பாதிக்கலாம் எனக்கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெண்களிடம் தலா ரூ.100 வசூலிப்பதை கிராமப்புற பெண்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் “அபேஸ்…”

மதுரை கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியை சேர்ந்த கூலிவேலை செய்யும் சுரேஷ்குமார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்துள்ளேன். இதனால் நாங்கள் சின்னாளப்பட்டி பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தோம். இதற்காக எனது மாமனாரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான அய்யாத்துரையை தொடர்பு கொண்டேன்.

அவர் நிலம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல தவணைகளாக ரூ.20 லட்சம் வரை வாங்கினார். ஆனால் அவர் நிலம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதிமுக கவுன்சிலரின் மாமூல் ‘தினமும் 100 ரூபாய் வெட்டு…’

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன் மாலை, இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சிலர் பாஸ்ட் புட் பிரியாணி கடை நடத்துகின்றனர். அந்த கடைக்கு 5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சென்று, ‘போக்குவரத்துக்கு இடையூறா இங்கே பிரியாணி கடை நடத்துறீங்க… எனக்கு தினமும் நூறு ரூபாய் தரணும்’ என்று கேட்கிறார். அதற்கு கடை நடத்துபவர், ‘அதான் அவ்வப்போது வந்து வாங்கிட்டு போறீங்களே போதாதா? தினமும் 100 ரூபால்லாம் தர முடியாது.

நாங்க கடைக்கே 2,500 ரூபா வாடகை கொடுக்க வேண்டியிருக்கு, உங்களுக்கு 3 ஆயிரம் கொடுக்கனும்னா எப்படி முடியும்?’ என்று பதில் அளிக்கிறார். இதற்கு, ‘எனக்கு பணம் தராட்டா இங்க கடை போட விடமாட்டேன்’ என மிரட்டுகிறார் கவுன்சிலர். அதற்கு கடை நடத்தும் இளைஞர், ‘நானும் இந்த ஊர்க்காரன்தான், வக்கீல்தான், நாங்க கடைபோடுவோம். அண்ணே உங்களுக்கு மரியாதை கொடுக்குறேன். நீங்க இப்படி பண்ணாதீங்க…’ என்கிறார். இப்படி கவுன்சிலருக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் தொடர்கிறது. கவுன்சிலரின் மாமூல் கலாட்டா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6-ம் நாள் பாத யாத்திரை, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிக்கு வந்தது. திருமயத்திற்கு காலை 9 மணிக்கு யாத்திரை வருவதாக இருந்தது. இதனால் கட்சி நிர்வாகிகள், கிராமப்புற பெண்களை 8 மணிக்கே வேன்களில் அழைத்து வந்தனர். பெண்களுக்கு யூனிபார்ம் சேலை வழங்கப்பட்ட நிலையில்,காரைக்குடியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அண்ணாமலை வழக்கம் போல 10.30 மணிக்கு வந்தார்.

அங்கு கடியாபட்டி விலக்கு ரோட்டில் இருந்து திருமயம் கோட்டை வழியாக திருமயம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று, பிரசார வாகனத்தில் இருந்தவாறு பேசினார். பின்னர் விராச்சிலை கிராமத்தில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் அண்ணாமலைக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வெயிலில் தாக்கத்தால் அங்கிருந்து காரில் கடியாப்பட்டியில் உள்ள உணவு விடுதியில் மதிய உணவு அருந்த சென்றார்.

பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை நடுநிலையாக நடத்த வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என தெரிவித்தார்.

தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூயின் தக்காளி யோசனை..

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர ராஜூ, தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளார். தக்காளியின் வரத்து குறைவு மற்றும் காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி விலையானது, தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தக்காளி விலை எகிற ஆரம்பித்தது.. கிலோ ரூ.120, 140 வரை உயர்ந்தது. விலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டது.. முதல் கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்பட்டது.

பிறகு, 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது.. இதனிடையே, நேற்றைய தினம், தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆரம்பமானது.. மேலும், அமுதம், காமதேனு அங்காடிகளிலும் தக்காளி விற்பனை ஆனது.. இதனால், ரேஷன் கடைகள், அங்காடிகளில் பொதுமக்கள் முண்டியத்தும், நீண்ட வரிசையில் காத்திருந்தும் தக்காளி வாங்கினர். எனினும், முதலில் வரும் 50 அல்லது 100 பேருக்கு மட்டுமே குறைந்த விலையி்ல் தக்காளி கிடைக்கும் நிலை உள்ளதால், பலபேர் ஏமாந்து திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதிகாலையிலேயே க்யூவில் நிற்க வேண்டியதாயிருப்பதால், தங்கள் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாமல், தாய்மார்கள் திணறுகிறார்கள்.. அதனால், கூடுதல் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செல்லூர் ராஜுசெய்தியாளர்களிடம் பேசுகையில், “ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறமையே கிடையாதுங்க.. தக்காளி விலை ஏறிப்போயிடுச்சே.. இவ்ளோ ஏற விடவே கூடாதே.. ரேஷன் கடையில் தக்காளி தர்றாங்களாமே.. தக்காளி, காய்கறிகளை எல்லாம், ரேஷன் கடையில் தரக்கூடாது.

நடமாடும் காய்கறிகள் போல வைத்து, தெருவுல கொண்டுபோய் விற்கணும்.. அப்பதானே மக்கள் வந்து வாங்குவாங்க.. எல்லாருக்கும் கிடைக்கும்.. குறைந்த விலையில் கிடைக்கும்.. ஸ்டாலினுக்கு அடிப்படையே தெரியலையே.. விலைவாசி பற்றியெல்லாம் கவலைப்படாமல், கமிஷன், கரப்ஷன் எப்படி வரும்னு தான் பார்க்கறாரு” என்றார் செல்லூர் ராஜூ என தெரிவித்துள்ளார்.