உஷாரய்யா…! உஷார்…! தொடரும் ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடி …. 7½ லட்சம் இழந்த பெண்..!

கோயம்புத்தூர் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்த ஸ்ரீமுருகன், இவரது மனைவி பிரியாலட்சுமி சமீபத்தில் இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதில் இருந்த லிங்க்-ஐ கிளிக் செய்து பிரியாலட்சுமி தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டார்.

அவர் ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது எனவும், அந்த கம்பெனி இணையதளத்திற்கு சென்று ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்து கொடுத்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். திரிஷா கூறியதை நம்பிய பிரியாலட்சுமி ஆன்லைன் மூலம் அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார்.

இதையடுத்து அவருக்கு கமிஷனாக ரூ.1,500 கிடைத்தது. இதையடுத்து மீண்டும் பிரியாலட்சுமியை தொடர்பு கொண்ட, திரிஷா தாங்கள் கூறும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பிரியாலட்சுமி ரூ.10 ஆயிரம் முதலீடாக செலுத்தினார். இதற்கு பிரியாலட்சுமிக்கு ரூ.13,407 கமிஷனாக கிடைத்தது. மற்றொரு பணிக்கு ரூ.11,706 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து பிரீமியம் முறையில் பணம் செலுத்தினால் இதை விட அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என்று பிரியாலட்சுமிக்கு அந்த மர்ம பெண் திரிஷா ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய பிரியாலட்சுமி, பல்வேறு கட்டங்களாக திரிஷா கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரம் பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் பிரியாலட்சுமி கமிஷன் தொகை கிடைக்கவில்லை. மேலும் திரிஷாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாலட்சுமி இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டியில் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் அம்ரித் முன்னிலை வகிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது கயல்விழி செல்வராஜ் பேசிய, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர்கள் 37 வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். பழங்குடியினரின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிநபர் உரிமைகள் பழங்குடியினர் நலத்துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளிகள், 48 விடுதிகள் செயல்படுகிறது.

இதில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏகலைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாதி சான்றிதழ் பிரச்சினைகளை களையவும், உண்மை தன்மையை சரிபார்க்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,190 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாட்கோ தலைவர் மதிவாணன், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவரும் பகல்கோடு மந்துக்குச் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜீக்கு, பாரம்பர்ய முறைப்படி வரவேற்பு அளித்தனர் அந்த மக்கள். அவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்தவர், அந்த இனப் பெண்களின் பூத்துக்குளி எனும் பாரம்பர்ய உடையை அணிந்து நடனம் ஆடினார். மேலும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய உணவையும் சாப்பிட்டார்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘மணிப்பூர் மகள்களை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் முத்துலட்சுமி, தமயந்தி, இந்திராகாந்தி, திங்களவள், சத்தியா, சவுமியா, மோகனாம்பாள், ஆகியோர் தலைமையில், மூத்த பெண் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்கொடுமைகளை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

மாநில அளவிலான சிலம்ப போட்டி கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

கோவையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பவித்ரா, தர்ஷினி, ஹர்ஷா அனுஸ்ரீ ஆகிய 3 பேர் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டனர். கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் சிலம்ப போட்டியில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். மிக இளையோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஒற்றைக்கம்பு, சுருள்வாள் வீச்சு போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்தார்.

இதேபோல இளையோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவி பவித்ரா ஒற்றைக்கம்பு, சுருள் வாள் வீச்சு போட்டியில் முதல், 2-ம் இடங்களை பிடித்தார். அதே பிரிவில் பிளஸ்-1 மாணவி காயத்ரி மான் கொம்பு வீச்சு, ஒற்றைக்கம்பு போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்த ஆட்சியர் அம்ரித் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.5.26 கோடி நூதன மோசடி..!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த தேவராஜன். கிழங்கு மில் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் உலிபுரம் சேர்ந்த தம்மம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சாந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷேர் மார்க்கெட் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தேவராஜனிடம் சாந்தகுமார் கூறி வந்தார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நான் பொறுப்பு என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், 2021-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை பல தவணைகளில் ரூ.65 லட்சத்து 78ஆயிரத்து 499 ரூபாயை சாந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஷேர் மார்க்கெட் தொழில் தொடர்பாக மும்பைக்கு பயிற்சிக்காக செல்வதாக கூறி ரூ.1 லட்சத்தை தேவராஜனிடம் வாங்கி சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. அதிர்ச்சியடைந்த தேவராஜன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். தொடர் விசாரணையில் 15 பேரிடம் சாந்தகுமார், 5 கோடியே 26 லட்சத்து 70ஆயிரத்து 899 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளமுருகன் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி, நேற்று சாந்தகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.

அண்ணாமலையை விமர்சித்தால்.. ஊழல் பட்டியல் ரிலீஸாகும்..!

தமிழகத்தில் கடந்த 2019 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் அந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெல்லவில்லை,2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து 4 எம்எல்ஏக்களை பாஜக வென்றது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோற்றோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். மேலும் வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு சட்டசபையில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வந்தது. இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்த வார்த்தையால் விமர்சித்தார். அப்போதும் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது இரு தரப்புக்கும் சண்டை ஏற்படுவதும் பின்னர் சமாதானமாக போவதுமாக இருந்தது. இந்நிலையில் அண்மைக்காலமாக அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அரசியல் கத்துக்குட்டி என விமர்சித்ததும் பதிலுக்கு அண்ணாமலை, அவரை விஞ்ஞானி அமைச்சர் என கிண்டல் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ள நிலையில் பாஜக மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும், தேசபக்தி நிறைந்த பொது மக்கள் இதயத்திலும் அதிக நன் மதிப்பை எங்கள் மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பெற்று உள்ளதை உலகம் அறியும்.

ஆனால் தங்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்டதலைவர்கள் திரு.செல்லூர் ராஜ், திரு ஜெயக்குமார் உள்பட சிலர் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை எங்கள் மனதை புண் படுத்தி உள்ளது. தங்களுடைய இயக்க தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மரியாதை வைத்து உள்ளனர்.

ஆனால் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் புரட்சி தலைவி ஜெயலலிதா போன்று தங்களை நினைத்து கொண்டு நான்கு, ஐந்து அணிகளாக அதிமுக பிளவு பட்டதை மறந்து எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. தற்போது ஆளும் கட்சியான திமுக தொடர் ஊழல், வாரிசு அரசியலால் மக்கள் செல்வாக்கை இழந்து 15% குறைவான வாக்கு வங்கியை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு பணம் கொடுத்து குண்டர்களை வைத்து மிரட்டி பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வருவதை தமிழக மக்கள் அறிவார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களுடைய” தோழமை இயக்கம் என்ற பரிவுடன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்து சட்டசபையில் 66 எம்எல்ஏக்களை இடம் பெற வைத்ததை தாங்கள் நன்றி மறந்து விட்டீர்கள். இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும்.

ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். பாஜக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர் பதவியை தாங்கள் இழந்ததை மறந்து விட வேண்டாம் என்பதை நினைவு படுத்துகிறோம்.

புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் மற்றும் இரட்டை இலை சின்னத்தின் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக அமைதி காக்கின்றோம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமில்லை. இனிவருகின்ற காலங்களில் உங்கள் இயக்க தலைவர்கள் எங்கள் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை அள்ளி வீசினால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்து உரைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி – குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்..!

கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் நரேந்திர மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்.எல்.ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி நிறுத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க கோரி மக்களவை செயலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மக்களவை செயலகம், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது.

இதையடுத்து, நேற்றைய தினமே மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்தார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார், 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.’ என்று மாற்றி இருந்தார். மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததை தொடர்ந்து, ஏற்கெனவே இருந்ததுபோல, ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது. இதனை இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர். இதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

குன்னூரில் பள்ளி மாணவர் மீது கொடூராக தாக்குதல்…!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூத்தூர்மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி உதயசந்திரன். இவரது மகன் குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் பெற்றோர் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்காமலே தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் தாமாகவே மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள கூறி இருக்கிறார். தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மாணவனின் தாயாரை அழைத்து மாற்று சான்றிதழை கடந்த ஜூன் 21-ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மாணவன் வேறு பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் வீட்டில் அடம் பிடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவன் ஜூன் 22-ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து தான் அதே பள்ளியில் தான் படிக்க விரும்புவதாகவும், என் தாயாரிடம் மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி உள்ளனர். மீண்டும் தன்னை அதே பள்ளியில் படிக்க வழி வகை செய்யுமாறும் மனு ஒன்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்திருக்கிறார்.

இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் மாணவனை அதே புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் என்னை மீறி மாவட்ட அலுவலரிடம் புகார் அளித்து மீண்டும் இதே பள்ளிக்கு வந்து விட்டாய் எப்படி நீ படிக்கிறாய் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாணவன் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ட்ராக் சூட் உடை அணிந்து சென்ற பொழுது முறையாக ஆடை அணியவில்லை என கூறி மாணவனை தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் கம்பால் சரமாரியாக தலை மற்றும் கை கால்களில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை உதயச்சந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மீது குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட காங்கிரஸ் நிர்வாகி துப்பாக்கியுடன் கைது..!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தொழிலதிபர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து காரில் வந்த அஸ்வத்தாமனை, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி காவல் துறையினர் நசரத்பேட்டையில் கைது செய்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துப்பாக்கி காட்டி தொழிலதிபரை மிரட்டிய அஸ்வத்தாமன், சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் அறிமுகம்…! ரூ.13.85 லட்சம் கையாடல்…!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அனுமன்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம், சிவகாசி ஆலங்குளம் சாலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி பேச்சியம்மாள் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அப்போது, சிவகாசி கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றுவதாகக் கூறிய பேச்சியம்மாள், வங்கியில் 380 கிராம் அடகு நகைகள் ஏலத்துக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நகைகளின் புகைப்படங்களையும் ரமேஷுக்கு அனுப்பியுள்ளார். இதை நம்பிய ரமேஷ் தனது நண்பர்களுடன், கடந்த 4-ம் தேதி காலை 10 மணிக்கு சிவகாசிக்கு வந்தார். அவரிடம் நகைகளை ஏலம் எடுப்பதற்கு ரூ.13.85 லட்சம் செலுத்த வேண்டும் என பேச்சியம்மாள் கூறினார். அதன்படி, ரூ.1.58 லட்சம் ரொக்கமாகவும், ரூ.11 லட்சத்தை பேச்சியம்மாள் கூறிய வங்கிக் கணக்கிலும் ரமேஷ் செலுத்தி உள்ளார். அதன் பின் நகைகளை எடுத்து வருவதாக வங்கிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ரமேஷ் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவல்துறை பேச்சியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று சிவகாசியில் பேச்சியம்மாளை கைது செய்த காவல்துறை, அவரிடமிருந்து ரூ.12 லட்சத்தை மீட்டனர்.