76 -வது சுதந்திர தின விழா முன்னிட்டு நாமக்கல்லில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை..!

நாட்டின் 76 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

ஆட்சியர் உமா தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளார். நேற்று காலையில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற காவல்துறை துப்பாக்கி ஏந்தியவாறு கம்பீரமாக நடந்து வந்தனர்.

உஷாரய்யா..! உஷார்..!! ஆன்லைன் மூலம் போலி பணி நியமன கடிதம் அனுப்பி ரூ.16¼ லட்சம் மோசடி..!

கோயம்புத்தூர் சாய்பாபாகோவில் அருேக கே.கே.புதூரை சேர்ந்த பி.இ. மெக்கானிக்கல் படித்து பிரித்திவ். இவர் கடந்த மே மாதம் முதல் வேலை தேடி வருகிறார். பிரித்திவ் செல்போனில் ஆன்லைனில் வேலை எதுவும் உள்ளதா? என்று பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தார். அதில் பிரபல முன்னணி நிறுவனங்களில் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. இதையடுத்து அவர் தனது விவரங்களை ஆன்லைனில் அனுப்பினார். விண்ணப்பித்த சில நாட்களில் அந்த ஆன்லைன் தளத்தில் இருந்து பிரித்திவின் மெயிலுக்கு ஒருவர் தகவல் அனுப்பினர்.

அதில் அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வேலை உள்ளது என தெரிவித்தார். இதனை நம்பிய பிரித்திவ் ஆன்லைன் வழியாக அவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் நேர்முகத்தேர்வு நடத்தினர். இதில் வெற்றி பெற்றதால் வேலைக்கு சேர்வதற்கான பணிநியமன கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவும், தபால் மூலமும் அனுப்பி உள்ளனா். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு ஆன்லைனில் சில நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து சில வேலைகள் உங்களுக்கு என்று கொடுக்கப்படும். அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். வேலைக்கு சேரும் முன்பு ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பயிற்சி, கார் நிறுவனத்தில் பணி என்பதால் உங்களுக்கு என்று தனியாக டூல்ஸ் வாங்க குறிப்பிட்ட தொகை உள்பட அனைத்துக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.

வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிய பிரித்திவ், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வாங்கி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக கடந்த 27-5-2023 முதல் 16-6-2023 வரை ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 277-ஐ அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பலமுறை மெயில் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரித்திவ் பணி நியமன கடித்தத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது தான் அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரித்திவ், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் கைது ..!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலருக்கு விண்ணப்பித்து இருந்தார்.

இது தொடர்பாக சமூக நல அலுவலர் கஸ்தூரியை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து கேட்டார். அப்போது கஸ்தூரி ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என்று சுப்பிரமணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர், ரூ.1,800 தருகிறேன் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவிய 1,800 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் கஸ்தூரியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

எஸ்வி சேகர்: “அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்”

2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜூலை மாதம் 28 -ம் தேதி  ‘என் மண் , என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைக் கடந்து ஒவ்வொரு தொகுதி வாரியாகச் சென்று மக்களை சந்தித்து அண்ணாமலை வருகிறார்.

இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை தினமும் 1 கி.மீ தூரம் கூட நடப்பதில்லை என்றும், அவருக்கான பிரத்யேக ஏ.சி பேருந்தில்தான் செல்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், “அண்ணாமலை இருக்கும்வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது. அதிமுகவின் ஒரு வாக்கு கூட பாஜகவிற்கு வராது.

நடைபயணத்தால் பாஜகவிற்கு நஷ்டம், அண்ணாமலைக்கு பெரிய லாபம்” எனக் கூறியுள்ளார். சாயம் வெளுக்குது.. வெறும் 5% மட்டும் நடந்த அண்ணாமலை.. எஸ்வி சேகர் மேலும், “தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். தலைவருக்கு பேருந்தில் நடைபயணம் செல்லவே நேரம் இல்லை. சிங்கம் என அவரே சொல்கிறார். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் கிழ சிங்கம் ஆனது போல தெரிகிறது. இந்த நடைபயணத்தால் ஒரு தாக்கமும் நடக்காது.

“அண்ணாமலை என்பது தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நான் 2 வாரமாக நாடகமே போடவில்லை. எனது டிராமா காமெடியை விட அண்ணாமலை நடைபயண காமெடி நன்றாக சிரிப்பு வருகிறது. அண்ணாமலை அதிமுக கூட்டணி வரக்கூடாது எனப் பேசி வருகிறார். அதிமுக இருந்தால் தான் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம். நட்பு என்று சொல்லிக்கொண்டே காறித் துப்பினால் எப்படி கூட்டணி சரியாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் கைது!!

தஞ்சாவூர் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன். இவர் குருவாடிப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெயர் மாற்றம் செய்ய கடந்த ஆக.3 -ம் தேதி இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி, இளங்கோவனை தொடர்பு கொண்டு பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசித்துள்ளார்.

இது குறித்த விஷயங்களை இளங்கோவனின் நிறுவன மேலாளர் அந்தோணி யாகப்பா பொறுப்பில் எடுத்துள்ளார். அப்போது மூன்று பட்டாவையும் பெயர் மாற்ற தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி யாகப்பா தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆலோசனையின்படி ரூ.10 ஆயிரம் ரசாயண பவுடர் தடவிய பணத்தை காவல்துறை கொடுத்து அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அந்தோணி யாகப்பா, கிராம நிர்வாக அலுவலரிடம் போனில் பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்தோணியாகப்பா, இ-சேவை மையத்துக்குள் சென்று ரூ.10 ஆயிரம் பணத்தை வீரலட்சுமியிடம் வழங்கியபோது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

பேராசிரியர் அன்பழகனை நேர்ல பார்க்குற மாதிரியே.. சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு

“பேரறிஞர் அண்ணா அவர்களால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும். இனமான பேராசிரியர்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெருமிதத்தோடு அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

பேராசிரியர் அன்பழகன் அவர்கள், பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு. பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1962 -ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 -ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்த 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு. சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக, தான் அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தினார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த 30.11.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கடந்த 19.12.2022 அன்று சென்னை. நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், அவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி. பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் சென்னை. நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாட்டின் வெறித்தனம்… 9-வயது சிறுமி காயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சிறுமி ஆயிஷாவை தன் கொம்புகளால் தூக்கி கீழே வீசி தரையில் போட்டு தொடர்ந்து தாக்கியது.

இந்நிலையில் அதை பார்த்த சிறுமியின் தாயார் கூச்சலிட்டு கதறியபடி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து அடித்து மாட்டை விரட்ட முயற்சித்தனர். நீண்ட நேரம் சிறுமியை விடாமல் மீண்டும், மீண்டும் முட்டியதால் சிறுமி பலத்த காயமடைந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் அந்த மாட்டினை விரட்டியடித்து சிறுமி ஆயிஷாவை காப்பாற்றினர். இதனை அடுத்து சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாடு சிறுமியை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காயத்ரி ரகுராம்… புதிய தோற்றத்தில் தனது படத்தை இணையத்தில் பகிர்வு..!

2017-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட, நடன இயக்குநர் ரகுராம் அவர்களின் இளைய மகளான காயத்ரி, விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். BJP தன்னை இணைந்து கொண்டு காயத்ரி ரகுராம் தீவிரமாக செயல்பட்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் உட்கட்சி பிரச்னையால் பாஜக-விலிருந்து அவரை இடைநீக்கம் செய்தார்.

இதையடுத்து தான் பாஜக-விலிருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி, அதையடுத்து அக்கட்சியையும், பிரமுகர்களையும் வெகுவாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது 10 ஆண்டுகள் நேர்த்தி கடனை செலுத்திய அவர், நெற்றியில் கிராபிக்ஸ் நாமம், கையில் மயிலிறகுடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோயை குணப்படுத்தும் அரிய கண்டுபிடிப்பு.. சாதித்த பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்..!

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கின்றன. அது மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் இப்போது உள்ள புற்று நோய் மருந்துகள் அழிக்கின்றன. ஆனால் நாங்கள் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது.

இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன. முதற்கட்டமாக இந்த வெள்ளி நானோ துகள்கள் எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்து உள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த வெள்ளி நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவிகள், சீருடைகள் வழங்குவதில் முறைகேடா…!?

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா புகார் மனுகொடுத்தார். அதில், தலித் விடுதலை இயக்கம் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காங்கயம் நகராட்சியில் 140 நபர்கள் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிவதற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் 80 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் தற்போது பணிபுரியும் 80 பணியாளர்களின் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பந்ததாரர் சார்பில் பெற்று கொண்டு அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் மருத்துவ உதவிகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்காமல் முறைகேடு செய்துள்ளனர். எனவே காங்கயம் நகராட்சி ஆணையர் இப்பிரச்னையில் தலையிட்டு காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் விஷயத்தில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டுபிடித்து அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.