வி.கே.சசிகலா: தமிழ் திரைப்படங்களும் இது போன்ற வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகிறதா.. ?!

தலை முதல் பாதம்வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை… இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன.. சினிமாவில் வரும் “சைக்கோ’ – போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும். திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும்.. அவனது தங்கையையும் இரவு10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.

படிப்பில்… விளையாட்டில்… ஒழுக்கத்தில்… திறமையில்… அப்பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுளான். சின்னத்துரை. இவரைப் போல இருங்க என ஆசிரியர்கள் பாராட்டியுள்ளார். இவனெல்லாம் நமக்கு மேலயா? பெருந்தெரு சாதிப் பய… ! எங்க பேக்க தூக்கிட்டு வா பான்பராக் வாங்கிட்டு வாபேனா , பேப்பர் வாங்கிட்டு வா… மிரட்டல் அடி உதை என பல நாட்களாக . டார்ச்சர் செய்து வந்துள்ளனர். அம்மா சத்துணவு பணியாளர். அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.

தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர். நமக்கு எதற்கு வம்பு… இனி நான் ஸ்கூலுக்கு போகல என அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான் சின்னத்துரை. அம்மா வும். தாத்தாவும் பள்ளிக்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள். எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா… இங்க தான நீ வாழனும் .. சின்னத்துரை யையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும் வெட்டி சாய்த்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதியார் பாடலை இளம் வயது முதல் கற்றுக்கொடுத்து வந்தபோதிலும் மாணவர்களின் மனதில் சாதி நஞ்சை விதைப்பவர்கள் இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும், சமீபத்தில் வெளிவந்த ஒரு சில தமிழ் திரைப்படங்களும் இது போன்ற வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிட்டதோ என்ற ஐயமும் எழுகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ செல்வங்கள் மத்தியில் எந்தவித ஏற்ற தாழ்வுகள், சாதிய பிரிவினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கும் உள்ளது.

அதை உறுதி செய்கின்ற பணியினை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்ற சாதிய மோதல்களை ஒடுக்க வேண்டிய நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். நாங்குநேரியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் தெரிவித்துள்ளார்.

குன்னூர் கோத்தகிரி சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் சாலையோர மரங்கள்..!

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி விட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்திக்கு இந்த நங்கு மாதங்கள் சொல்லவே வேண்டாம் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கொஞ்ச அதிகமாகவே வெளுத்து கட்டும். ஆகையால் மழை காலங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணத்தால் மாவட்டத்தில் உள்ள சாலையோர மரங்களை அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள சாலையோரம் மரங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால் ஆபத்தான நிலையில் உள்ள சாலையோர மரங்களை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் 44 புதிய திட்டப் பணி தொடங்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்மலை, பாலசமுத்திரம்புதூர், பாப்பினி, படியூர், தம்மரெட்டிபாளையம் மற்றும் வீரணம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் 42 புதிய திட்டப்பணிகளை, தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 88 அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.

நாங்குநேரி சாதி வெறி! காரணமே வேற.. பேஸ்புக்கில் அமைச்சருக்கு பாடமெடுத்த ஆசிரியர்

அரசு பள்ளி ஆசிரியையும், எழுத்தாளருமான உமா மகேஸ்வரி தனது பேஸ்புக்கில் , “மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு. போட்டிகள் வைத்தால் சரியாகாதுங்க சார். உங்கள் காணொலி மீண்டும் மீண்டும் அரசின் பெருமைகளைப் பேசுகிறது. ஆனால் சிறுமையிலும் சிறுமையான சமூகத்தை இன்று கல்வித் தளங்கள் உருவாக்கி வருகின்றன என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும்.

அதற்கு முதலில் பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பாருங்கள். சமூகநீதி கற்றுத்தரப்படுவதே இல்லை. சமூகவியல் ஆசிரியர்கள் வெறும் முப்பத்தைந்து மதிப்பெண்களுக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். எதெல்லாம் பள்ளிகள் பேச வேண்டுமோ அதெல்லாம் பேசுவதே இல்லை.

பள்ளிகளில் முதலில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள். புள்ளி விவரங்கள் மட்டுமே சேகரிக்கும் ஆசிரியர்களாகப் போய் விட்டார்கள். வகுப்பறையிலும் பள்ளியிலும் சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று பேசிய காலங்கள் இன்று இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்கும் உரையாடல்கள் பள்ளிகளில் இல்லை. திட்டங்களை செயல்படுத்தும் வேகமும் பெருமிதமும் தான் இங்கு வலிமையாகப் பணியாற்றுகின்றன.

தொடக்கப் பள்ளிகளிலிருந்து மாணவர்களிடம் சாதிகள் பிரிவினை வேண்டாம் என்று பேச வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இங்கு ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (SC Scholarship) வாங்கித் தருவதற்கு விண்ணப்பம் நிரப்பும் வேலையை மட்டுமே செய்கின்றனர். SC/ST/BC/MBC/OC இந்தக் கணக்கீடுகளைப் போட்டுப் போட்டு பள்ளிகளில் விவரங்கள் அனுப்பும் வேலை மட்டுமே பள்ளிகளில் நாள் தோறும் நடக்கிறது. வீட்டில் சாதி உணர்வு ஆழமாக விதைக்கப்பட்டு வளரும் மாணவர்கள் பள்ளிக்குள் வரும் போது அதே உணர்வுடன் தானே வருகிறான்.

அதைக் களைவதற்கான சூழலைப் பள்ளிகள் கொண்டிருக்கின்றனவா? பாடம், தேர்வு இவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக் கூறும் கல்வி முறையில் எது சரி எது தவறு என மாணவர்களுக்கு போதிப்பது பள்ளிகளின் கடமை இல்லையா? ஆசிரியர்களை வெறும் வேலையாட்களாக மாற்றி வரும் கல்வித் துறைக்கு முதலில் வழிகாட்டுங்கள். வரலாற்று ஆசிரியர்கள் அவர்களது பணியை சரியாக செய்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது.

வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பெருமை என்று வகுப்பறைகளில் பேசிய காலம் என்று ஒன்று இருந்தது. அது எங்கே போயிற்று? நாங்குநேரி கொடூரம் தெரியும்.. விழுப்புரத்தில் நடந்ததை பாருங்க! அரசு பள்ளி தலைமையாசிரியரின் சாதி வெறி நாட்டுப்பற்று மனிதநேயம் மனிதர்களை நேசித்தல் எல்லாமே பள்ளிகளில் கற்றுத்தரப்பட்ட நாட்களில் இந்த வன்முறைகள் நிகழவில்லை.

நீங்கள் கல்வி அமைச்சராக பதவியேற்ற பிறகு, போட்டி மனப்பான்மையை விதைக்கும் திட்டங்களையும் தேர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஆணைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்கள் இப்படி பிரிவினையோடு நடந்து கொள்கிறார்கள் என்றால் கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் பெற்ற கல்வியின் விளைவு என்ன? எனில் கல்வியே பெறவில்லை என்று தானே பொருள். அதோடு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வழிநடத்தி இருந்தால் இந்த சம்பவம் இத்தனை அதிகமாகப் போயிருக்காது.

ஏன் அந்த சூழல் பள்ளிகளில் இல்லை? பொத்தம் பொதுவாக எல்லோருக்கும் அறிவுரை கூறுவதில் பயனில்லை. எத்தனைப் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் பள்ளித் தலைமைகளை மிரட்டும் போக்கு நிலவுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மாணவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்கும் இடமாகத்தான் பல பள்ளிகள் இருக்கின்றன. ஒரு புறம் பள்ளி ஆசிரியர்களின் மத்தியிலும் இந்த சாதி உணர்வு பிரச்சனை இருக்கவே செய்கிறது.

முதலில் களத்தில் என்ன நிகழ்கிறது, பள்ளிகளின் இன்றியமையாத கடமை என்ன, ஆசிரியர்களின் தலையாய பணி என்ன என்பதை ஆய்வு செய்து பொறுப்பெடுத்து பணியாற்ற கல்வித்துறையை வழிநடத்துங்கள் . கல்வித் துறை புள்ளிவிவரத்துறை ஆனதும் இந்த வன்முறைக்கு ஒரு மிக முக்கியமான காரணம். ஆகவே தயை கூர்ந்து சிந்தியுங்கள். நீங்கள் ஒரு சின்னதுரையைப் படிக்க வைக்கப் போவதாக, உறுதி சொல்வதால் இந்த சூழல் மாறாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கல்வித் துறையை சரிசெய்து, கற்பித்தல் செயலை ஆசிரியர் மாணவர் உறவை பலப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள். மாற்றங்கள் விளையும். சின்னதுரைகளுக்கு நம்பிக்கை பிறக்கும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஊட்டியில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும். இந்நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார். இந்நிலையில் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 9-ந்தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா தங்கத்தாலியை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காவல்துறை, ஸ்வீட்டி பெட்ரீசியாவிடம் இருந்த தங்கத்தாலியை மீட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வெட்டிய வழக்கில் 6 பேரை கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

திருநெல்வேலி நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி அம்பிகாபதி முனியாண்டி தம்பதியரின் 17 வயது மகன் வள்ளியூரிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் ஒரு கும்பல் புகுந்து பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி காவல்துறை பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலியிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில் ஊட்டி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் நேற்று ஊட்டி பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதாக 20 கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 பால்குட ஊர்வலம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத கடைசி  நேற்று வெள்ளியையொட்டி தமிழகமெங்கும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், விநாயகர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து 1,008 பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

இதையடுத்து மூலவர் செல்லாண்டியம்மனுக்கு 1,008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பள்ளிகளில் விஷமாக பரவி நிற்கும் சாதி வன்மம்

நாங்குநேரியில் தலித் மாணவன்- தங்கை ஆதிக்க சாதி மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட கொடூர சம்பவம்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ஒரு தலித் மாணவன் தனக்கு சக மாணவர்களால் சாதி ரீதியாக இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் புகார் அளித்ததால், அந்த தலித் மாணவனையும் அவன் தங்கையையும் அந்த மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், அரிவாளால் வெட்டுபட்டு படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்மாணவன் மற்றும் அவனது தங்கையை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு இந்த நிகழ்வை பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

எவிடென்ஸ் கதிர் தனது முகநூல் பக்கத்தில்,

பள்ளிக்கூடங்கள் சாதி வன்ம கூடங்களாக மாறி வருகிற துயரம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரையை பார்த்தேன். பதினேழு வயது தலித் சிறுவன். இரண்டு கைகளும் அரிவாளால் வெட்டப்பட்டு எலும்புகள் நொறுக்கப்பட்டு பெரிய கட்டுடன் படுத்திருந்தான். அவனது கண்களில் அச்சத்தின் ஆழம் தென்பட்டது. மரணத்தின் விளிம்பில் இருந்து பிழைத்து வந்த அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

அவனது ரத்தம் அவனது வீட்டிலும் தெருவிலும் கதவிலும் பாத்திரங்களிலும் சகதியாய் படிந்து கிடக்கிறது. அவனை வெட்டியவர்களின் நடவடிக்கை கூலிப்படை ஆட்கள் போன்றே இருந்தது. ஆனால் வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். பதினேழு வயது, பதினாரு வயது உள்ளவர்கள். சாதி ஒருவனை மரணத்தின் விளிம்பில் தள்ளியிருக்கிறது. சிலரை அரிவாள் எடுக்க வைத்து கொலை பசியை ஏற்படுத்தியிருக்கிறது.

களத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்டோம். நாங்குநேரியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்பிகாபதிக்கு இரண்டு குழந்தைகள். பதினேழு வயது சின்னத்துரை, பதிமூன்று வயது சந்திராசெல்வி. வீட்டு வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். கடுமையான ஏழ்மை. ஆயினும் குழந்தைகள் இருவரும் நன்கு படிக்கக்கூடியவர்கள். அவரது நம்பிக்கையே குழந்தைகளும் அவர்கள் கற்கக்கூடிய கல்வியும் தான்.

மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். நன்கு படிக்கக்கூடிய மாணவன். அனைத்து ஆசிரியர்களும் அவன் மீது அபரிமிதமான நம்பிக்கையும் கரிசனையும் கொண்டுள்ளனர். படிப்பை தாண்டி அவனது நடவடிக்கை அத்தனை வாஞ்சையாக இருந்துள்ளது. திடீரென்று 10 நாட்களாக சின்னத்துரை பள்ளிக்கூடம் செல்லவில்லை. அவனது தாயார், ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டதற்கு, என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடு, இல்லையென்றால் சென்னைக்கு அனுப்பி வை, நான் அங்கு ஏதாவது வேலை செய்கிறேன் என்று கூறியிருக்கிறான்.

அதற்கு அவனது அம்மா அம்பிகாபதி ஒப்புக் கொள்ளவில்லை. கடந்த 09.08.2023 அன்று அவனது பள்ளிக்கூட ஆசிரியை, அம்பிகாபதிக்கு அலைபேசி மூலமாக அழைத்திருக்கிறார். ஏன் உங்கள் மகன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை, அவனுக்கு என்ன பிரச்சனை. எதுவாயினும் சரிசெய்யலாம் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் 09.08.2023 அன்று காலை 10.30 மணியளவில் சின்னத்துரையும் அவனது அம்மா அம்பிகாபதியும் பள்ளிக்கூடம் சென்றுள்ளனர். அங்கு வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை ஆகிய இருவரும் சின்னத்துரையிடம் விசாரிக்கையில், தன்னுடன் படிக்கக்கூடிய செல்வரமேஷ், சுப்பையா ஆகிய இருவரும் தன்னை சாதி ரீதியாகயும் ஆபாசமாகவும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். எனது பணத்தையும் பிடுங்கிக் கொள்கின்றனர். சிகரெட் வாங்கி வரச்செல்லி அடிக்கின்றனர். பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.

பரிட்சையில் நான் எழுதுகிற விடைத்தாள்களை வாங்கி காப்பி அடிக்கின்றனர் என்று கூறியிருக்கிறான். அதனைக் கேட்ட இரண்டு ஆசிரியைகளும் என்ன நடந்தது என்பதை எழுதி கொடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூற சின்னத்துரையும் எழுதி கொடுத்திருக்கிறான்.

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை முன்னரே அறிந்த சுப்பையாவும் செல்வரமேசும் அன்று பள்ளிக்கூடம் வரவில்லை. மாலை 6.00 மணியளவில் வன்கொடுமையில் ஈடுபடுகிற செல்வரமேஷின் பாட்டியும், சித்தப்பாவும் சின்னத்துரையின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவனது அம்மாவிடம் இருவரும் என்ன நடந்தது என்று கேட்க, உங்க பேரனும் சுப்பையாவும் என் மகனை சாதி ரீதியாக இழிவுபடுத்தி சித்திரவதை செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார். அதனை கேட்டுவிட்டு இருவரும் அமைதியாக அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.

இரவு 10.00 மணியிருக்கும். அம்பிகாபதிவும் சின்னத்துரையும் சந்திராசெல்வியும் சாப்பிடுவதற்காக உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் சுப்பையாவும் செல்வரமேசும் 11-ம் வகுப்பு படிக்கக்கூடிய சுரேஷ்வானு என்கிற சிறுவனும் வந்துள்ளனர். அவர்களிடத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள அரிவாள் இருந்துள்ளது. பறத் தேவிடியா பயலே எங்களுக்கு எதிராக புகார் கொடுப்பியா என்று கூறி அரிவாளால் சின்னத்துரையின் கழுத்திலும் தலையிலும் வெட்ட முயற்சி செய்ய தனது கைகளை கொண்டு சின்னத்துரை தடுத்திருக்கிறான்.

இதனால் இரண்டு கைகளின் எலும்புகளும் அரிவாளால் வெட்டப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையிலும் கால் தொடையிலும் அரிவாள் வெட்டு. அண்ணன் வெட்டப்படுவதை அறிந்த சந்திராசெல்வி தடுக்க முயற்சி செய்ய அந்த 13 வயது குழந்தையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்த ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு தான் இந்த மூவரும் வெட்டியிருக்கின்றனர்.

அதனைப் பார்த்த பாத்திமா என்கிற பெண்ணும் அம்பிகாபதியும் வெட்டுப்பட்ட சின்னத்துரையும் சந்திராசெல்வியும் பலமாக கதற அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிவர அந்த 3 பேர் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறது. வீடு முழுவதும் இரத்த குவியலாகவும் சகதியாகவும் கிடக்கிறது. வெட்டப்பட்ட இரண்டு பேரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை கடந்து, அந்த 3 பேரும் அங்கு வந்து அரிவாளால் வெட்டுவதற்கு உதவி செய்த செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய 3 பேர் என்று 6 பேரினை காவல்துறை நேற்று 10.08.2023 அன்று கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர். இந்த 6 பேரில் இரண்டு பேருக்கு 16 வயது, மற்ற நான்கு பேருக்கு 17 வயது. அனைவரும் சிறுவர்கள். அனைவரும் ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் நேற்று நாங்குநேரி சென்றிருந்தபோது, சுப்பையா, செல்வரமேஷ், சுரேஷ்வானு ஆகிய 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அவர்கள் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று ஒருவர் கூட காவல்நிலையத்தில் இல்லை.

இந்த வன்கொடுமை கும்பல் முன்னதாகவே உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு இரண்டு சக்கர வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு அங்கு வந்து அரிவாளால் வெட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து தென்காசி பகுதிக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வருகிறது. அவர்களது நோக்கம் அப்பட்டமாக சின்னத்துரையை கொல்ல வேண்டும் என்கிற கொலை வெறியில் தான் வந்துள்ளனர். அவர்களது அரிவாள் சின்னத்துரையின் தலைப் பகுதிலும் கழுத்து பகுதியிலும் தான் குறி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னத்துரை அந்த பதட்டத்திலும் உயிரை காப்பாற்றும் பொருட்டு கழுத்து பகுதியிலும் தலைப் பகுதியும் அரிவாளால் வெட்டப்படாமல் கைகளால் தடுத்திருக்கிறான்.

சுப்பையா, செல்வரமேஷ் ஆகிய இருவரின் நடவடிக்கை குறித்து விசாரித்தோம். பெண் ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்வது, வகுப்பில் ஊளையிடுவது, சக மாணவர்களை தாக்குவது, மிரட்டுவது என்று பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு முறை அவர்களுக்கு டிசி கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. ஆயினும் அவர்களது குடும்பத்தினர்கள், நாங்கள் இனிமேல் ஒழுங்காக எங்க பசங்களை கண்டித்து வளர்க்கிறோம் என்று உறுதிமொழி கொடுத்தனால் பள்ளி நிர்வாகம் மன்னித்து விட்டிருக்கிறது.

ஆனால், சின்னத்துரையிடம் அவர்கள் நடந்து கொண்ட கொடூரமான நடத்தை அப்பள்ளிக்கூட ஆசிரியர்களிடத்தில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதனால் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்து தான் சின்னத்துரையை கொல்ல வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் சாதி நோய் முற்றிப்போய் இத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பள்ளிக்கூடத்தில் சில ஆசிரியர்களுக்கு மிரட்டுகிற தொனியில் அலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த கொடூரமான வன்கொடுமையை கண்டு சின்னத்துரையின் உறவினரும் தாத்தா முறையான கிருஷ்ணன் என்பவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்விட்டார்.

இந்த கொலை வெறி பிடித்த சிறுவர்களால் அப்பள்ளிக்கூடம் அவமானப்பட்டு நிற்கிறது. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பாதிக்கப்பட்ட சின்னத்துரையை சந்தித்திருக்கிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாகவும் இருக்கிறார் என்று தெரிய வருகிறது. தலித் குடியிருப்பு பகுதிக்குள் வந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து வெளியேறி இருக்கின்ற இந்த போக்கு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெவ்வேறு கட்டிடங்களில் முதல் தளத்தில் சின்னத்துரையும் மற்றொரு கட்டிடத்தின் 7-வது தளத்தில் சந்திராசெல்வியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செல்வரமேஷின் பெரியப்பா தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். சுப்பையாவின் தாத்தா ம.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். இவர்களது அரசியல் குறுக்கீடு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடத்தில் கூறினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவிதமான அரசியல் குறுக்கீடும் இல்லாமல் நீதி கிடைக்க உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி இன்று அரிவாளாக மாறியிருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதி களமாகவே காட்சியளிக்கின்றன. அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமை கூடங்களாக உருமாறி வருவது கவலையளிக்கிறது.

இத்தகைய வன்முறையில் ஈடுபடுகிற குழந்தைகளை குற்றவாளி என்று சொல்லக்கூடாது, சட்டத்திற்கு முரண்பட்டவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று மனித உரிமை தளங்களில் அறிவுறுத்தப்படுவதும் உண்டு. ஆனால் இதுபோன்ற சாதி நோய் முத்திப்போய் இருக்கக்கூடிய இவர்களுக்கு கவுன்சிலிங் தாண்டி சட்டத்தின் மூலமாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

தன் மீது நடந்த கொடுமையை ஆசிரியரிடம் கூறியதற்காக இத்தகைய கொலை வெறியுடன் அரிவாள் தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இந்த சாதி வெறி பிடித்த சிறுவர்களின் நடத்தையை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சின்னத்துரைக்கும் சந்திராசெல்விக்கும் இது சமத்துவமான சமூக நீதி சார்ந்த சமூகம் என்பதை உணர வைப்பதற்கு கண்டிப்பாக இரண்டு தலைமுறையாவது தேவைப்படும்.

சமூக நீதி என்கிற கருத்தியலை முன் வைத்துக் கொண்டே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடம் தென்படுகிற சாதி தெனாவட்டை திமிரினை கண்டிக்காமல் இது இந்த மண் அந்த மண் என்று உருட்டிக் கொண்டிருந்தால் சமூக நீதிக்கு அதை விட பெரிய துரோகம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.

இதை அங்கு இருக்கக்கூடிய குறிப்பாக சமூகநீதியை பேசக்கூடிய இயக்கங்கள் சின்ன பசங்க தகராறு என்று விவாதிப்பதாக அறிய வருகிறேன். எவ்வளவு கேவலமான மனநிலை. சின்னத்துரை நீதிக்காகவும் சந்திராசெல்வி நீதிக்காகவும் யாரெல்லாம் களத்தில் இருக்கிறார்களோ அவர்களே சமூக நீதி போராளிகள். மற்றபடி பெயருக்காக சமூகநீதி பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு முகவர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், பாலிசிதாரர்களின் கடனுக்கான வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும், பீமா சுகம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பாலிசி முதிர்வு தொகைக்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு நேற்று முதல் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் ஊட்டி, கூடலூர், குன்னூரில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.