ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி

சென்னை சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் தாலுகாவை சேர்ந்த டேனியல் மனோஜ் பிரிட்டோ. இவர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலவாக்கம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதற்காக நேர்காணல், மருத்துவ பரிசோதனை என டெல்லி, வாரணாசி ஆகிய இடங்களுக்கு அழைத்துசென்று போலியான பணிநியமன ஆணை, அடையாள அட்டைகளை வழங்கினார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் ரூ.24 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி இருந்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை  வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீட் தேர்வு தோல்வி.. மாணவன் தற்கொலை.. மகன் இறந்த சோகத்தில் தந்தை எடுத்த விபரீதம்

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு முதலில் ப்ளஸ் 2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என மாறிவிட்டது. இந்த நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

மேலும், தமிழக அரசு சார்பில் நீட் விலக்கு மசோதாவும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோச்சிங் சென்டர்களில் சென்று படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதனால் வசதி இல்லாத மாணவர்களால் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல முடியாததால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.மேலும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, “கடந்த ஒரு வருடமாக எந்த மாணவரும் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை” என பேசியிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல காலம் பொறக்குது…

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டு இருக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புர சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ். திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 14.08.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989-ம் ஆண்டு முதன்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு. நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர், என்று கூறப்பட்டு உள்ளது.

எஸ்.வி.சேகர் ஆவேசம்: மாரி செல்வராஜும் ரஞ்சித்தும் ரூ.10 லட்சம் தருவாங்களா..?

தலை முதல் பாதம்வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை… இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன.. சினிமாவில் வரும் “சைக்கோ’ – போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும். திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும்.. அவனது தங்கையையும் இரவு10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.

படிப்பில்… விளையாட்டில்… ஒழுக்கத்தில்… திறமையில்… அப்பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுளான். சின்னத்துரை. இவரைப் போல இருங்க என ஆசிரியர்கள் பாராட்டியுள்ளார். இவனெல்லாம் நமக்கு மேலயா? பெருந்தெரு சாதிப் பய… ! எங்க பேக்க தூக்கிட்டு வா பான்பராக் வாங்கிட்டு வாபேனா , பேப்பர் வாங்கிட்டு வா… மிரட்டல் அடி உதை என பல நாட்களாக. டார்ச்சர் செய்து வந்துள்ளனர். அம்மா சத்துணவு பணியாளர். அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.

தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர். நமக்கு எதற்கு வம்பு… இனி நான் ஸ்கூலுக்கு போகல என அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான் சின்னத்துரை. அம்மா வும். தாத்தாவும் பள்ளிக்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள். எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா… இங்க தான நீ வாழனும் .. சின்னத்துரை யையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும் வெட்டி சாய்த்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால் நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவரது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளனர். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறோம். ஆனால் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க போகும் போது என்ன ஜாதி என கேட்கிறார்கள். சின்ன வயதிலேயே அந்த குழந்தைக்கு ஜாதி என்றால் என்ன என தெரிய தொடங்குகிறது. இதைவிட காரணம் சினிமா.

சினிமாவில் அதிகமாக ஜாதி படங்களை எடுத்ததால்தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையாதான். கொம்பன் என்ற படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர்தான். அதன் பிறகு இயக்குநர் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குநர்கள் ஜாதி படத்தை எடுப்பதை தொடர்கிறார்கள். தனது ஜாதியை உயர்த்துவது தவறில்லை, ஆனால் அடுத்தவரின் ஜாதியை தாழ்த்திக் காட்டுவதுதான் தப்பு. இன்று ஜாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு ரூ 10 லட்சம், 20 லட்சம் கொடுப்பார்களா என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சிக்காக 20 லட்சம் செலவு… வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2016 -ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாஜகவை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தற்போது திமுக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை நீட் தேர்வு பயிற்சிக்காக தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், வசதி இருக்கும் தன்னால் அந்த செலவை செய்ய முடிந்தது.

அதேவேளையில் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் மாணவர்களின் வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா? எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடுவீர்கள் என்று அம்மாசியப்பன் கேட்க, இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அந்த பெற்றோரிடமிருந்து மைக்கை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருபோதும் தான் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால்… சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் வலிவுறுத்தல்

கோயம்புத்தூர் ஆனைமலை அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் ஆனைமலை, கோட்டூர்,  மணக்கடவு, அம்பராம்பாளையம் வழியாக கேரளாவை சென்றடைகிறது. இதில் ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனைமலை ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.  இந்நிலையில் ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக உப்பாறும், ஆழியாரும் ஒன்று சேரும் இடத்தில் தினசரி 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது.

இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த தண்ணிரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையமும் பயன்பாட்டில் இல்லை. இதனால் கழிவுநீர் நீர் நேரிடையாகவே ஆற்றில் கலக்கிறது. எனவே அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் ரூ.7.50 லட்சம் திறக்கப்பட குடிநீர் சுத்திகரிப்பு மையம் 10 நாட்களில் பழுதால் முடங்கியது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி சிங்காரப்பேட்டை. பெங்களூரு – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிங்காரப்பேட்டையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், சிங்காரப்பேட்டை, குருகப்பட்டி, கென்னடி நகர், மேட்டுத் தெரு மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்களின் தேவைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின், திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கட்டிடத்துடன் கடந்த 2018-19-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பயன்பெற வேண்டிய நிலையில், சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட 10 நாட்களில் பழுதால் முடங்கி உள்ளது. இதனை, ஒப்பந்தம் எடுத்தவர்கள் சீரமைத்தனர். ஆனால் அடுத்த இரு நாட்களில் மீண்டும் பழுதாகிவிட்டது. ஆனால் தற்போது வரை சீரமைக்காமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூட்டியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியினரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வருகை தந்த உடுமலைப்பேட்டை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலைப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த காவல்துறை அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த தம்பதிக்கு காவல்துறை அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

உலக சாதனைக்காக கும்மியாட்டம்

திருப்பூர் உலக சாதனைக்காக உடுமலைப்பேட்டையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மியாட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்கள், பாரம்பரிய ஆர்வலர்களால் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெற்று வருகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தந்து நோய் நொடி இல்லாத நீண்ட வாழ்வை அளிக்கக்கூடிய ஆடல் பாடலுடன் கூடிய பழமை வாய்ந்த இந்த கும்மியாட்ட கலை மேற்கு மண்டல மாவட்ட மக்களால் பரவலாக பாடப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் மெல்ல மெல்ல மக்களிடம் இருந்து மறையத்தொடங்கியது.

இந்நிலையில் அழிந்து வரும் கும்மியாட்டக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பவளக்கொடி கும்மியாட்ட கலை பயிற்சியை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். உலக சாதனை நிகழ்வு அந்த வகையில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்ற நிகழ்வாக 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று இரவு உடுமலைப்பேட்டை அடுத்த மலையாண்டிகவுண்டனூர் கிராமத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

எஸ்.பி. பொன்ராமு ஆய்வு உலக சாதனை நிகழ்வு, 50-வது பொன்விழா அரங்கேற்றம், கும்மியாட்ட நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி நிறுவனர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து உலக சாதனை அதிகாரிகள் முன்னிலையில் கும்மியாட்டம் தொடங்கியது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு நாட்டுப்புறப்பாடல், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்களை பாடியவாறு நான்கு மணி நேரம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ஆட்டத்தை மெய்சிலிர்க்கும் வகையில் அரங்கேற்றினார்கள். இந்த ஆட்டத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் மகிழ்ந்தனர்.

பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.8.14 கோடி மோசடி..!

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 பேர் சேர்ந்து ‘ரியல் ட்ரீம்ஸ் குழுமம்’ என்ற பெயரில் 2013-ம் ஆண்டு நிதி நிறுவனம் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களிடம் நிதி வைப்பு சேமிப்பு திட்டங்களை நடத்துவதாகவும், 5 ஆண்டுகள் மாதந்தோறும் ரூ.500 அல்லது ரூ.1,000 கட்டினால், 5 ஆண்டுகள் முடிவில் இரட்டிப்புத் தொகை கிடைக்கும் என கூறி, 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ.8.14 கோடி வசூல் செய்துள்ளனர்.

அதன்பின், 5 ஆண்டுகள் முடிந்து இரட்டிப்பு தொகையை கேட்டபோது, அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த எம்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேர், பண மோசடி செய்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களுடைய முதலீட்டு பணம் ரூ.8.14 கோடியை மீட்டுத்தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, பண மோசடியில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், நாகப்பட்டினம் வெளிப்பாளையம் போலீஸார் ஆகஸ்ட் 8-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, ரியல் ட்ரீம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புதுச்சேரியைச் சேர்ந்த முகமது அலி, இயக்குநர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.ஆறுமுகம். ஆர்.கோவிந்தராஜ், தமிழ்வாணன் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கா.பிரபாகரன், வி.பழனிவேல், பி.கலியபெருமாள், சி.கனகராஜ், ஜி.ராஜாமூர்த்தி ஆகிய 9 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.