சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை

விழுப்புரம் மாவட்டம், மயிலத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தனர். அதன்பின்னர், அவர்கள் அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது.

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அலுவலக நேரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நடத்திய சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்தனர்.

தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பெர்ப்பெற்றி டிடெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசும்போது, ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் தெருவிளக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 மாதங்களாகியும் எந்த ஒரு வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தெருவிளக்குகள் அமைக்கும் பணி அப்போது ஒரு மாதத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் மூன்று மாதத்திற்குள் அனைத்து வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு முதல் பெண் நீதிபதி

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜசேகர் பதவி உயர்வு பெற்று சென்னை உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் டான்பிட் நீதி மன்ற நீதிபதி செந்தில்குமாருக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்திற்கு புதிய நீதிபதியாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஜி.விஜயா நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு 1880-ம் ஆண்டுகளில் இருந்து இதுவரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பெண் நீதிபதி ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை. தற்போது அந்த பெருமையை கோவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப் பட்டு உள்ள ஜி.விஜயா பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடைபாதை சீரமைப்பு பணியை தொடங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி 11-வது வார்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயுடன் கூடிய நடைபாதை நகராட்சி மூலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த நடைபாதை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபாதையை சீரமைப்பதற்காக ஜல்லி, மண் போன்ற கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன.தொடர்ந்து நடைபாதை சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பணிக்காக நடைபாதையில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

அந்த வழியாக நடந்து செல்லும் போது தவறி, கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. உடனடியாக கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சீரமைப்பு பணியை தொடங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட மனு..!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு ஆட்சியரிடம் புகார் புனு கொடுத்தனர். அந்த மனுவில், வண்ணாம்பாறை ஆஞ்சநேயர் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே தனியார் நூற்பாலைக்கு சொந்தமான சாயப்பட்டறை இயங்கி வருகிறது.

அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த கழிவுநீர் குடிநீரிலும் கலக்கிறது. அதன் காரணமாக குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தோம். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விட்டு, இனி சாயப்பட்டறை இயங்காது என தெரிவித்து சென்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து சாயப்பட்டறை இயங்கி வருகிறது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாய தொழிற்சாலையின் உரிமையாளருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அந்த சாயத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

மணப்பெண்ணின் பேச்சை கேட்டு முகத்தை லேசாக டிரிம் செய்து கொண்ட மணமகன்… திருமணத்தை நிறுத்திய தந்தை..!

கோயம்புத்தூரை அடுத்த சூலூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மகனுக்கு பெண் பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது மகனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்தார். அதன்பிறகு இருவீட்டாரும் பேசி சம்பந்தம் செய்து திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே புதுமணப்பெண்ணும், புதுமாப்பிள்ளையும் செல்போனில் அடிக்கடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே தொழில் அதிபர் தனது மகனிடம், திருமணம் நடைபெற இருப்பதால் முகத்தில் தாடியை சவரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய நிலையில், மணமகளை செல்போனில் தொடர்பு கொண்டு முகச்சவரம் செய்ய சலூனுக்கு செல்ல உள்ளதாக கூறி உள்ளார். அதை கேட்ட மணமகள், உங்களுக்கு தாடி தான் அழகாக உள்ளது. எனவே முகச்சவரம் செய்ய வேண்டாம். லேசாக டிரிம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

அதை ஏற்றுக் கொண்ட மணமகன், தனது தந்தை கூறியபடி முகச்சவரம் செய்யாமல், மனைவியாக வர உள்ள மணப்பெண் கூறியபடி சலூனுக்கு சென்று தாடியை லேசாக டிரிம் மட்டும் செய்து விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அதை பார்த்த தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்து, தனது மகனிடம் ஏன் நான் கூறியபடி முகச்சவரம் செய்ய வில்லை என்று கேட்டு உள்ளார். அவருக்கு உரிய பதில் அளிக்காமல் புதுமாப்பிள்ளையான மகன் தடுமாறிய நிலையில் தொழில் அதிபர் விடாமல் கேட்டதால், வருங்கால மனைவி கூறியபடி கேட்டு தாடியை டிரிம் செய்ததாக கூறினார்.

மகன் சொன்னதை கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தொழில் அதிபர், பெற்று வளர்த்து ஆளாக்கிய என் பேச்சை கேட்காமல் நாளைக்கு வரப்போகும் மனைவியின் பேச்சை கேட்டு நடக்கிறாய். எனது வார்த்தைகளை மதிக்க தவறி விட்டாய் என்று கூறி கண்டித்து உள்ளார். இதனால் நிலைகுலைந்து போன மகன், தனது தந்தையை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அதை ஏற்க தொழில் அதிபரின் மனம் மறுத்து விட்டது. மேலும் ஆவேசம் அடைந்த தொழில் அதிபர், தனது மகனை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டார்.

இதனால் புதுமாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டின் வாசலில் படுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமணம் நிறுத்தம் அப்போது மணமகன் தனக்கு நேர்ந்த நிலை பற்றி மணமகளிடம் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண், நிலைமையை சரி செய்ய முயன்றார். இதற்காக அவர் தனது தந்தையிடம் நடந்ததை கூறி, மணமகனின் தந்தையான தொழில் அதிபரிடம் பேசி சமாதானம் செய்யுமாறு கூறி உள்ளார்.

மகளின் நிலையை நினைத்து கலங்கிய தந்தை, மணமகனின் தந்தையான தொழில் அதிபரை நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் கூறிய எந்த ஒரு சமாதானத்தையும் ஏற்க தொழில் அதிபர் மறுத்து விட்டதாக தெரிகிறது. நிலைமை கைமீறிப் போனதால் மணமகளின் தந்தை அங்கிருந்து சோகத்துடன் வெளியேறி உள்ளார். உறவினர்கள் சோகம் இதற்கிடையே மணமகனின் தந்தையான தொழில் அதிபர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், எனது மகனின் திருமணம் நின்று விட்டது. எனவே திருமண மண்டபத் துக்கு யாரும் வர வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பார்த்த மணமகள் வீட்டினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்… தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு…!

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி கீர்த்தி என்ற மனைவியும், லியோரா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கீர்த்தி சென்னை மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் பணிபுரியும் அதே பள்ளியிலேயே அவரது மகள் லியோரா ஸ்ரீ 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில், நேற்று கீர்த்தி வழக்கம்போல் தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

இந்நிலையில், கீர்த்தி கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் எதிரே சென்றார். அப்போது வாகனம் சாலையில் உள்ள குழியில் ஏறி இறங்கியது. இதனால், நிலை தடுமாறிய லியோரா ஸ்ரீ வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி லியோரா ஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதனால், லியோரா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், இதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு, லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த சாலையில் இதுபோன்ற தண்ணீர் லாரிகள் அதிவேகமாக வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யும்படியும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தண்ணீர் லாரி பள்ளி மாணவியின் மீது ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

அதிமுகவின் பொன்விழா மாநாடு…அண்டா அண்டாவாக மதுரை மண்ணில் கொட்டப்பட்ட அவலம்…!

மதுரை விமான நிலையம் அருகே அதிமுகவின் பொன்விழா மாநாடு, எழுச்சி மாநாடு நடைபெற்றது. தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டம் தீட்டி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக உழைத்து மாநாட்டை ஏற்பாடு செய்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரையே திமிலோகப்பட்டது.

மதுரையில் நேற்று அதிமுக மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, ஹெலிகாப்டர் மூலம் 1 டன் எடையிலான பூக்கள் அங்கு தூவப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களுக்கு, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 3 வேளை சிறப்பான உணவு வழங்கப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக செல்லூர் ராஜூ மாநாட்டில் கொடுக்கப்படும் உணவுகள், வகை வகையாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். மக்கள் வியந்து போகும், அளவிற்கு சாப்பாடு சுவையாக இருக்கும் என்றார்.

இந்த உணவு தயாரிக்கும் பணிகள் சனிக்கிழமை இரவு முதலே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. மாநாடு நடைபெற்ற மைதானத்தில் இரு புறத்திலும் உணவுகள் தயாரிக்கப்பட்டன. அங்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் சுவையாக இல்லாததாலும், உணவு வேகாததாலும், தொண்டர்கள் இந்த உணவை சாப்பிடாமல் சென்றதால் டன் கணக்கில் உணவு அந்த திடலில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டில் கொடுக்கப்பட்ட உணவு உப்பு சப்பில்லாத சாம்பார் சாதமாகவும், பச்சை வாசனை வீசும் புளியோதரையாகவும் இருந்தது. இதனால் பசியோடு வந்த அதிமுக தொண்டர்கள் உண்ண முடியாமல் உணவுகளை கீழே கொட்டிவிட்டு சென்றனர். ஹெலிஹாப்டரில் பூவெல்லாம் கொட்டியது எல்லாம் நன்றாக தான் இருந்தது. ஆனால் உங்களை நம்பி வந்த தொண்டர்களுக்கு தரமான உணவை கொடுக்காமல் ஏமாற்றி விட்டீர்களே என்று அங்கிருந்த தொண்டர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர்.

அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் மாலையிலே ஊர் திரும்பியதால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புளியோதரை அண்டா அண்டாவாக மிச்சமானது. இதனால் மாநாட்டு திடலில் அவை டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது மலர் தூவ ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தவர்கள் உணவில் கவனம் வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடு…. தி.மு.க. ஆட்சியை சம்காரம் பண்ண போகிற வீடு

மதுரையில் 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க மாநாடு நடைபெற்றது. மதுரை அ.தி.மு.க. மதுரை மாநாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிகையில், மாபெரும் சபையில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என எம்.ஜி.ஆர். பாடினார். ஒன்றரை கோடி தொண்டர்களை உயிராக நினைத்தவர் ஜெயலலிதா. இவர்களின் ஒட்டுமொத்த உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார்.

இந்த இடம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடு. இந்த படைவீடு மாவட்டத்தின் சார்பில் அவருக்கு வைரவேல் கொடுத்தோம். அந்த வேல் எதற்கு கொடுத்தோம். இதன் மூலம் தி.மு.க. ஆட்சியை சம்காரம் பண்ண போகிறவராக அவதாரம் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இந்த மீனாட்சி பட்டினத்துக்கு பல பெருமை உண்டு. 1973-ல் எம்.ஜி.ஆர். திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதம்.

ஆனால் மகாத்மா காந்தி வரும்போது 6 மணி நேரம் தான் காலதாமதம். 2010-ம் ஆண்டு மதுரையில் ஜெயலலிதா தலைமையில் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை 10 ஆண்டு காலம் வனவாசம் செய்ய வைத்தது. இன்றைக்கு 2023-ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை நிகழ்த்தி உள்ளார்.

ஏற்கனவே பொம்மை முதலமைச்சர் தூக்கமில்லை என்றார். இந்த மாநாடு பெரிய வெற்றி பெற்றுள்ளது. இனி அவருக்கு தூக்கமே வராது. 2024-ல் நீங்கள் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது தான் தொண்டனுடைய ஒரே லட்சியம். அதைசெய்து காண்பிப்போம். விரைவில் உங்கள் தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியை கொடுப்பீர்கள். அதற்கு இந்த மீனாட்சி பட்டணம் சாட்சி. இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.