மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் 108-ல் கர்ப்பிணிக்கு ‘ஆண் குழந்தை’

ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி தாலுகா பரமசாத்து கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், தொழிலாளி இவருடைய மனைவி ராசாத்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 வரவழைத்து ராசாத்தியை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல்பாடி அருகே சென்றபோது பிரசவவலி அதிகரித்தது.

அதனால் ஓட்டுநர் ராஜேஷ்குமார் 108 யை ஓரமாக நிறுத்தினார். அதைத்தொடர்ந்து ராசாத்திக்கு, மருத்துவ உதவியாளர் செண்பகம் பிரசவம் பார்க்க ராசாத்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் தாயும், குழந்தையும் மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கர்ப்பிணிப் பெண் கணவன் வீட்டு முன்பு குடும்பத்துடன் போராட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா, செவிலியராக பணியாற்றி வருகிறார். பவித்ரா அதே பகுதியைச் சேர்ந்த பேருந்து பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர் முருகேசன் மகன் மோகன்ராஜூம் காதலித்து கடந்த மே 22-ந் தேதி காஞ்சீபுரம் கோவிலில் திருமணம் செய்த பின்னர் இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் பவித்ரா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் மோகன்ராஜ், தங்கைக்கு குழந்தை பிறந்தது.

ஆகையால் தங்கையின் குழந்தையை பார்க்க ஓமலூர் வந்துள்ளார். அதன்பிறகு மனைவி பவித்ராவை பார்க்க செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைய பவித்ரா, மோகன்ராஜை தொடர்பு கொண்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.உடனே பவித்ரா, வேலகவுண்டனூரில் உள்ள தன்னுடைய கணவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு மோகன்ராஜிடம் தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு 100 பவுன், ரூ.10 லட்சம் கொண்டு வந்தால்தான் மோகன்ராஜூடன் சேர்ந்து குடும்பம் நடத்த முடியும் என கணவர் தரப்பினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் அவதூறாக பேசி பவித்ராவை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பவித்ரா ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறை விசாரணை நடத்தினர். மோகன்ராஜ், அவருடைய தந்தை முருகன் உள்பட 7 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தன்னுடன் சேர்ந்து வாழுமாறு பவித்ரா, மோகன்ராஜ் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். கர்ப்பிணிப் பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் உமராபாத் காவல்துறைக்கு புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் காவல்துறை விசாரணை நடத்தினர்.

அப்போது மருத்துவ படிப்பு முடிக்காமல் மருத்துவகம் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை காவல்துறை கைது செய்தனர். மேலும் மருத்துவகத்தை பூட்டி சீல் வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஞ்ஞானி வீரமுத்துவேல் தந்தைக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

சந்திரயான்-3 திட்டத்தை இயக்கிய திட்ட இயக்குனரான விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார். சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து அதன் திட்ட இயக்குனர் விழுப்புரம் வீரமுத்துவேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதேபோல், விழுப்புரத்திலுள்ள அவரது தந்தையான ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பழனிவேலையும் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்று காலை விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள், வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் வீட்டிற்கு சென்று அவரை வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சி.பழனி, விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலுக்கு பொன்னாடை அணிவித்து பழங்கள், புத்தகம் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை..!

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள அக்கரைப்பட்டி கிழக்கு தெரு பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், சாலை, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அக்கரைப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மக்கள், அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசின்னாரிபாளையம் ஊராட்சி அய்யாக்குட்டி வலசு, வீணம்பாளையம் ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கிட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லாத கடனாக ரூ.15 ஆயிரத்தை கூட்டுறவு வங்கி மூலம் வழங்க வேண்டும்.

அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை கொடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

மருத்துவ கல்லூரி தனியார் நிறுவன தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 150 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ50,000 லஞ்சம் வாங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு 2 ஆண்டு சிறை..!

மதுரையை சேர்ந்த ஜெயக்குமார் கடந்த 2009 முதல் 2011 வரை தூத்துக்குடி ரூரல் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது புதுக்கோட்டை தேரிரோட்டைச் சேர்ந்த, வெளிநாட்டில் வசித்து வந்த கிருபாகரன் சாம் என்பவருக்கு, புதுக்கோட்டையில் உள்ள நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கிருபாகரன் சாமிடம் ரூ 3. லட்சம் லஞ்சமாக கேட்டு, ரூ.50,000 16.12.2011 அன்று வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் விசாரித்து ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு எதிரொலி …! 16 ஆழ்துளை கிணறுகள், 34 மின் இணைப்புகள் துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 5 -ம் வகுப்பு மாணவி லியோரா ஸ்ரீ மீது தாயின் கண்ணெதிரே தண்ணீர் லாரி ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

 

இந்நிலையில் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி லியோரா ஸ்ரீ பலியானதை தொடர்ந்து விபத்து நடந்த இடம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகள் நிற்கும் இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியர், மாணவியின் தாயார், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் மேடவாக்கம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே பணிகள் முடிவடைந்துள்ள இடங்களின் நடுவில் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்திடுமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவுறுத்தினார். மேலும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி நன்மங்கலம் ஏரி, கிணறுகளில் முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதை தடுக்க முறையற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறும் ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

அதன்படி அப்பகுதியில் உள்ள முறையற்ற 16 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 34 மின் இணைப்புகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மேற்பார்வையில் துண்டிக்கப்பட்டது. அத்துடன் தண்ணீர் லாரி மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைப்படுத்தப்படும் எனவும் ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார்.