அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு… அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல்… விடுதலை சிறுத்தைகள் கட்சி மறியல் போராட்டம்

கடலூர் மாவட்டம், கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபகுதியில் சாலையை சரியான முறையில் அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாலையை அகலப்படுத்தாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணமான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்” திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி கால்நடை பராமரிப்பு துறை சார்பாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எம்.நடராஜன் தலைமையில், பசுமை தமிழகம் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை, சீமை அகத்தி,கொடுக்கா புளி, புங்கன், பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளான வகுரம்பட்டி, அணியாபுரம், வளையபட்டி, பாலப்பட்டி, அலங்காநத்தம், செவிந்திப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தக வளாகங்களிலும் மற்றும் மேய்ச்சல் தரைநிலங்களிலும் நடவுசெய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் நித்யா, பிரபாவதி, மாணிக்கவாசகம், ராஜாமணி, தங்கராஜ் மாதேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு; ‘இந்தியா’ கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்கு

திண்டுக்கல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயில் ரவுண்டானா பகுதியில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலுக்கு முயன்றதால் காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி ராஜமாணிக்கம், காங்கிரஸ் நிர்வாகி நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மாயவன் உள்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஆளுநரை வரவேற்பதற்காக உரிய அனுமதி இல்லாமல் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பேருந்து நிலைய பகுதியில் திரண்டனர்.

அப்போது அவர்களை காவல்துறை பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது, அவர்கள் காவல் துறையினரை தள்ளிவிட்டு சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினர், காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட 124 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செண்டை மேளம் முழங்க… கதகளி நடனமாடி… ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட்டம்

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகையை, கேரளாவில் வாழும் தமிழர்களும் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்கள் கேரளா மாநிலத்தின் நடைபெற்று வருகிறது. அதேபோல தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கே.எஸ்.ஆர். கல்லூரி செயல்பட்டு வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 29-ம் தேதி மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதால் கே.எஸ்.ஆர். கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை கல்லூரி வளாகத்தில் கேரளா மாவேலி மன்னன் வேடமணிந்து வந்தனர்.

மேலும் கேரளா பாரம்பரிய கலாச்சாரங்களை சித்தரிக்கும் தெய்யம் விளக்கு கட்டு செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான இசை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் வந்தனர். பிறகு கல்லூரி கலையரங்கத்தில் அத்தப்பூ கோலம் போட்டு அதைச் சுற்றி நடனங்கள் ஆடி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் ஓணம் விழாவில் கே.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் அனைத்து முதல்வா்கள், இயக்குநர்கள், கல்வி வளா்ச்சிக் குழு தலைவா், பேராசிரியா்கள் மேலும் பலர் கலந்துகொண்டனா்.

கரும காரிய கொட்டகை சுவர் இடிந்து விழுந்தது… தரமின்றி அமைப்பதாக கிராம மக்கள் புகார்

கடலூர், புதுப்பேட்டை கரும காரிய கொட்டகை பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மேல் அருங்குணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கருமகாரிய கட்டிடம் கட்ட ஒன்றியக்குழு பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் பணி தொடங்கப்பட்டது. இதில் தரைத்தளம் வரை சுவர் எழுப்பப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இக்கட்டிடத்தின் ஒரு புற அடித்தள சுவர் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்து வந்து தரமின்றி பணி நடைபெறுவதாக கூறி பணியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உரிய ஆய்வு செய்து கட்டிட பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதுவரை கட்டிட பணி நடைபெறக்கூடாது எனவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறிது நேரம் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே எய்ட்ஸ், காச நோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான் நடைபெற்றது.

இதற்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ரெட் ரன் மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை செலவுக்கு அவசர மாக பணம் தேவை என்றும் கூறி நம்ப வைத்து பணமோசடி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவ ரின் நண்பர் லண்டனில் வசித்து வருகிறார். அவரின் புகைப்படத்தை செல்போனில் முகப்பு படமாக வைத்த எண்ணில் இருந்து முதியவருக்கு இரவு 10 மணி அளவில் குறுஞ்செய்தி வந்தது.

அதில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடனே ரூ.1½ லட்சம் அனுப்பி வைத்தால், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் பணத்தை தந்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த முதியவர், உடனே தனது நண்பரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவர், தனக்கு குறுஞ்செய்தி வந்த செல்போன் வாட்ஸ்அப்பில் தனது நண்பரின் முகப்புபடம் இருந்ததால் அதை நம்பி அந்த எண்ணுக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பி உள்ளார். மறுநாள் அவரது நண்பரிடம் பேசிய போது தான் தன்னிடம் யாரோ பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதுபோன்ற நண்பரின் மருத்துவ சிகிச்சை பணம் தேவை என்று குறுஞ்செய்தி வந்தால் உடனே சம்மந்தப்பட்ட நபரிடம் பேசி உறுதி செய்து கொண்டே பிறகு பணம் அனுப்ப வேண்டும். அறிமுகம் இல்லாத நபர் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவல்களை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்…!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வெல்லம்பட்டி கிராமம் கருப்பனம்பட்டி பகுதியில் வசிக்கும் ரமேஷ் மகன் ரஞ்சித் குமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா தொண்டாமுத்தூரில் வசிக்கும் ஏழுமலை மகள் கெஜலட்சுமி என்ற பெண்ணும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.மேலும், இந்த சுயமரியாதை திருமணத்தை, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் கு.கி.தனபால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தென்னரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலுசாமி, திமுகவைச் சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகரப் பொருளாளர் ரகுமான், மோகன்ராஜ் வழக்கறிஞர் உதயநிதி ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் குறித்து சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளர், வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், தந்தை பெரியாரின் கொள்கை வழியில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாண்டி எம்பிஏ பட்டதாரி வாலிபர், பெரியாரின் வழியை ஏற்று, சுயமரியாதை திருமணம் செய்ததை பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர். கோரிக்கையை பெற்றுக் கொள்ள மறுத்து, கரூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர், பேபி காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். மேலும் அங்கிருந்த காவலர்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். இன்று கரூர் நகர காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.சாதி மறுப்பு சுயமரியாத திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றவரிகளிடம் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொள்ளமால் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்: கடல் என்றைக்கு வற்றுவது, ராகுல்காந்தி எப்போது பிரதமர் ஆவது?

மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு, ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான்-3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடந்தது.தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சந்திரயான்-3 வெற்றிக்கு கேக் வெட்டினார்.

பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தமிழக மக்களுக்கு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை தந்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கி சாதனை படைத்து இருக்கிறது. அதற்கு தமிழர் வீரமுத்துவேல் முக்கிய காரணமாக திகழ்கிறார்.

மேலும் கருவாடு மீன் ஆகாது. காகித பூ மணக்காது. அதேபோல் நீட் தேர்வினை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது ராகுல்காந்தி பிரதமராக வந்தால்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்கிறார். இவரது பேச்சை கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.

உதயநிதியின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கு கடைசியில் குடல் வற்றி செத்து போனதாம். அதுபோல கடல் என்றைக்கு வற்றுவது, மீன் என்றைக்கு பிடிப்பது, அது என்றைக்கு கருவாடு ஆவது, அந்த கருவாடு கொக்குக்கு என்றைக்கு கிடைப்பது? அதுபோல தான் ராகுல்காந்தி எப்போது பிரதமராக வருவது, நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வது என்பது தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.