முருகானந்தம் தாக்கப்பட்டதற்கு TTV தினகரன் கண்டனம்

அமுமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு குரு. முருகானந்தம் அவர்கள் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் // முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுல் நிதானமாக விளையாடினர்.  ஆனால்  இங்கிலாந்து  அணியின் கிறிஸ் வோக்ஸ் 7 ஓவர் வீசும்போது  இந்திய அணி 28 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து இருந்த  அவுட் ஆகி வெளியேறினர்.

இதன்பிறகு கே.எல் ராகுல் 17 ரன்களில் ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன்பிறகு புஜாரா 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவுக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார்.  உணவு இடைவேளையில் கோலி 18 ரன்களுடன், ஜடேஜா 2 ரன்களுடன் இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

உணவு இடைவெளி பிறகு ஜடேஜா 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் கடைசியில் அதிரடியாக  விளையாடி 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்திய அணி இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் களம் இறங்கினர். இங்கிலாந்து அணி 3.2 ஓவரில் 5 ரன்களில் ரோரி பர்ன்ஸ் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஹசீப் ஹமீத் ஆட்டமிழந்தார்.  இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் , கேப்டன் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை  வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 52 ரன்களில் கேப்டன் ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து 53 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மலான் 26 ரன்கள் மற்றும், கிரேக் ஓவர்டன் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு மணிமண்டபம் // தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், “சமூக நீதியின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதிரீதியான இட ஒதுக்கீடு என எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதனை சமூக நீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது. சமூக நீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அந்தத் தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது. வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டுவந்தது நீதிக்கட்சிதான்.

மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும், அதன் மூலம் அனைவருக்கும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் அதற்கு இடர்ப்பாடுகள் வந்தபோது பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டம் இந்தியத் துணைக்கண்டத்தையே கவனிக்க வைத்தது. காமராஜர், அன்றைக்கு பிரதமராக இருந்த நேருவிடம் வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

அப்படி சமூக நீதியை அடையப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றத்தைப் பெற்றுத் தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு கால சரித்திரச் சான்றை மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்துக்கான தொடர்ச்சியான வரிசையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற 20% தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 21 பேர்.

சமூக நீதிப் போராளிகளான அவர்களின் உயிர் தியாகத்துக்கும் போராட்டத்துக்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989-ம் ஆண்டு அமைந்த கருணாநிதி அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை வழங்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கான பாதையை வகுத்துத் தந்தது திமுக அரசு. சமூக நீதிக் கொள்கையின் தொடர்ச்சியாக கருணாநிதி வழியில் செயல்படக்கூடிய திமுக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும், என்பதே திமுக அரசின் உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பினை நினைவுகூர்ந்து, 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். இது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் அளித்த வாக்குறுதி. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. ‘நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவன். மிகவுன் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடமுண்டு. நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையும் பணயம் வைத்துப் போராடுவேன்’ என்று சட்டப்பேரவையில் கருணாநிதி சொன்ன உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்  அவர்களின் 49 -வது நினைவு தினத்தையொட்டி மலர் தூவி அஞ்சலி

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்  அவர்களின் 49 -வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ படத்துக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சிரஞ்சீவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகழாரம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி திரையுலகினராலும், ரசிகர்களாலும் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இன்று சென்னை வந்திருந்த சிரஞ்சீவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில்  “தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்சிகள் தாண்டி அவர் எடுத்திருக்கும் சில பயனுள்ள முயற்சிகள் மூலம் சிறந்த அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருப்பதற்கும், மக்களின் தலைவராக, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன், கொரோனா காலகட்டத்தில் சிறப்பான ஆட்சி தந்து வருவதற்காகவும் வாழ்த்துகள் கூறினேன்”. என தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் இந்திய வீரர் வினோத்குமாரின் பதக்கம் பறிப்பு கரணம்..?

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 6-வது நாளான ஆண்கள் F52 வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது இடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் வினோத்குமார் உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்தது. இதனால், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பக் குழுவினர் மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடு மதிப்பீட்டில் தகுதியற்றவர் என்று அறிவித்ததால் வினோத்குமார் வெண்கலம் திரும்பப் பெறப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்வு TTV தினகரன் கண்டனம்

பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் 4 மினி டைடல் பார்க்

தமிழக சட்டசபையில் தொழில்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், இந்திய திறன் அறிக்கையின்படி அதிக வேலைவாய்ப்புள்ள மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகம் அளிக்கும் நகரங்களில் முதல் 10 நகரங்களில் சென்னை உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் பூங்காக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நில வங்கிகள் உள்ளன. தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி அந்த மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதன் மூலம் நிலக்கையிருப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சிப்காட் நிறுவனத்தால் புதிய நில வங்கிகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்குவதற்காக அந்தந்த நாட்டுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிலாநத்தம், அல்லிகுளம், வேலாயுதபுரம், நெல்லை கங்கைகொண்டான், திருவண்ணாமலை மேல்மா, ராணிப்பேட்டை பனப்பாக்கம், கிருஷ்ணகிரி சூளகிரி, குருபரப்பள்ளி, திருவள்ளூர் செங்காத்தாக்குளம், காஞ்சீபுரம் வல்லப்பாக்கம், மதுரமங்கலம், சிவகங்கை இலுப்பைக்குடி, தேனி பூமாலைக்குண்டு, நாகை வண்டுவாஞ்சேரி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி (விரிவாக்கம்) ஆகிய 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா, தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருள் தொழில்பூங்கா, திண்டிவனம் மற்றும் தேனியில் உணவுப்பூங்கா, மாநல்லூரில் மின்வாகனப்பூங்கா ஆகியவை அங்குள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உருவாக்கப்படும். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் உத்தேசித்துள்ளது. சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 50 ஆயிரம் சதுரஅடி கட்டுமானத்துடன் வர்த்தக வசதி மையத்தை இம்மாதத்தில் அமைத்து தொடக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களை டைடல் நிறுவனம் அமைக்க உள்ளது. மற்ற நகரங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை இந்த ஆண்டு வெளிச்சந்தையில் அறிமுகம் செய்ய டான்செம் நிறுவனம் உத்தேசித்துள்ளது என தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற 8-வது நாள் விளையாட்டில் இந்திய தரப்பில் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் சிங்ராஜ் அடானா 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.மகிழ்ச்சியில்  சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி

இதேபோல ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கதையும், ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய 2 தங்கம் , 5 வெள்ளி 3 வெண்கலம் என ஆகமொத்தம் 10 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் இந்திய 30-வது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு நேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த மகிழ்ச்சியை சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறியதுடன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஆப்கானிஸ்தான் புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் // பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பின் தலைமைச் செயலதிகாரி டேவிட் பீஸ்லியை இஸ்லாமாபாதில் சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக நாடுகள் தலிபான்களுடன் ஆக்கபூா்வமான நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே அந்த நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கான நிவாரண உதவிகளை அளிக்க முடியும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகும், அந்த நாட்டுடன் சா்வதேச நாடுகள் உறவைப் பேண வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுவதற்கு சா்வதேச நாடுகள் அனுமதிக்கக் கூடாது.

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை நீடித்திருக்க வேண்டுமென்றால், புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகள் குறித்து சா்வதேச சமுதாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள 30 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்துள்ளது. இந்த நிலையில், அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மீண்டும் வெளியேறுவதற்கான சூழலை சா்வதேச நாடுகள் ஏற்படுத்திவிடக் கூடாது என ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.