இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதோ …!

யூடியூபில் மக்களிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய நபரை இன்ப்ளூயன்சர் என்று அழைக்கப்படும் சீனு மாலிக் ஏழைகளுக்கு உதவுவதை ஆண்டு முழுவதும் குறிக்கோளாக கொண்டு ஒவ்வொரு நாளும் கடைக்கோடியில் உள்ள ஏதோவொரு மனிதருக்கு உதவுவதை தனது வாழ்நாள் லட்சியமாக கடைப்பிடித்து வருகிறார். நாள் 221/365-ல் அவர் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ஆடம்பரமான மஞ்சள் நிற போர்ஷ் காரை பார்த்த மாற்றுத்திறனாளி ஒருவர் அதன்முன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், அதற்குள் அந்த காரின் உரிமையாளர் வந்து ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேள்வியெழுப்பு கிறார். இதனைப் பார்த்து பயந்த மாற்றுத்திறனாளி புகைப்படம் எடுத்ததற்காக காரின் உரிமையாளர் தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் ஓடுகிறார்.

அவரை துரத்திச் சென்ற காரின் உரிமையாளர் மாற்றுத்திறனாளியின் மொபைல் போனை பறித்து அதில் உள்ள படங்களை பார்க்கிறார். எடுத்த படங்களை அழித்துவிட்டு தன்னையும் தாக்குவார் என்ற பயம் அவரின் முகத்தில் நிறைந்திருந்தது. ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக மாற்றுத்திறனாளியை கூட்டிச் சென்று காரின் அருகே, உள்ளே என பல கோணங்களில் உட்கார வைத்து உரிமையாளரே புகைப்படம் எடுத்து அவரிடம் கொடுக்கிறார்.

அதன் பின்னர் அந்த ஏழை மாற்றுத்திறனாளியின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக காரில் உட்காரவைத்து ஜாலி ரவுண்ட் செல்கிறார் அந்த உரிமையாளர். அப்போது, எல்லையில்லா ஆனந்தத்தை அந்த மாற்றுத்திறனாளி சின்ன குழந்தைப் போல கைதட்டல் மூலம் வெளிப்படுத்துவதை பார்த்த உரிமையாளரின் கண்கள் அவரையும் அறியாமல் பனித்து விடுகிறது. இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுள்ளார். இந்த சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பார்த்த இணையவாசிகள் அவரை இதயப்பூர்வமாக பாராட்டி வருகின்றனர்.