மகாராஷ்டிராவில் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை திரும்பபெறவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன், என்றார்.

இந்த பேச்சு குறித்து நானா படோலே பேசுகையில், தங்களது ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டசபை கூட்டத்திலேயே தங்கர் சமூதாயத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2014-ல் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஆனால் அவர் ஆட்சியில் 5 ஆண்டுகள் இருந்துவிட்டு தங்கர் சமூகத்தினரை முதுகில் குத்தினார்.

அதேபோல மராத்தா சமூகத்தினருக்கும் துரோகம் செய்து உள்ளார். மராத்தா இடஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் அதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதாவால் கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 55 ஆயிரம் பேர் பதவி இழக்கும் அபாயத்தில் உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் ஒரு ‘பொய் எந்திரம்’. அவரின் நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டால், அவர்கள் பட்னாவிசை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைத்து விடுவார்கள் என நானா படோலே தெரிவித்தார்.