சஞ்சய் ராவத்: மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல…! ஏதோ பெரிய சதி இருக்கிறது..!

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது.. மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல.. என உத்தவ் தாக்கரே சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகா விகாஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இக்கூட்டணி 57 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதிலும், 95 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார்.

அப்போது, “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் பார்க்கும் பார்வையில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இங்கு என்ன தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 120 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு மகாயுதி என்ன செய்தார்கள்? மகாராஷ்டிராவில் 75 இடங்களைக் கூட எம்விஏ பெறாதது எப்படி? தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேலும் பேசுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.