அங்கப்பிரதிட்சணம் செய்யச் சொல்லுங்கள்…! அண்ணாமலையை காயத்திரி ரகுராம் கடுமையாக விமர்சனம்..!

திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, ”லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது முதல் கிடையாது, கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களில் இதுபோல் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இவ்வாறாக பிடிக்கும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. சிக்கிய பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்குச் சொல்லிக் கொள்ளலாம். அதனால் இந்தக் கைதோ, ஊழல் தடுப்புத் துறையின் நடவடிக்கையோ நியாயமானதே. அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் ஒரு தனி மனிதர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையுமே குறை சொல்ல முடியாது. தமிழக காவல்துறையில் யாரேனும் ஒருவர் தவறு செய்தால் காவல்துறையே மோசம் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். நேற்று அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை தொழில்முறை பார்வையோடு அணுக வேண்டும். இதற்காக மொத்த அமலாக்கத் துறையுமே இப்படித்தான் என்று சாயம் பூச முடியாது.

ஆனால், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026-ல் பாஜக விலக்கும்” என தெரிவித்தார்.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய கருத்திற்கு காயத்திரி ரகுராம் தனக்கு எக்ஸ் தளத்தில் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.

காயத்திரி ரகுராம் தனக்கு எக்ஸ் தளத்தில் அங்கப்பிரதிட்சணம் செய்யச் சொல்லுங்கள். திமுக files – திமுகவில் யாரேனும் தவறு செய்தால், அரசியலில் இல்லாத குடும்பத்தினர் அனைவரையும், ஒட்டுமொத்த தமிழக அரசையும், ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறையும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தையும் குற்றம் சாட்டி மச்சூரிட்டி குறித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.