விஜய் பாணியில் ஸ்டாலின் அட்டாக்: புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக அழியணும்னு நினைக்கிறாங்க..!

யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர் என விஜய் பாணியில் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள் என திமுக குறித்து கடும் விமர்சனங்களை விஜய் முன்வைத்டூ இருந்தார்.

மேலும் விஜய் பேசுகையில், பிளவுவாத அரசியல், ஊழல் மலிந்த அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்க்க போகிறோம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்படுவோம் என விஜய் பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தான் தங்களது அரசியல் எதிரி இவ்வாறு ஆளுங்கட்சியான திமுகவை தாக்கி விஜய் பேசியிருந்தார்.

விஜய் மாநாட்டில் பேசியது குறித்து அண்மையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை என நாசுக்காக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான்.

தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.