மத்திய அரசு நிதி தராவிட்டால் என்ன நான் தருகிறேன் என்று கடலூரை சேர்ந்த LKG மாணவி நன்முகை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்து வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களில் நிதி என்பது ஒதுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பள்ளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது.
தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் மூலம் மும்மொழி திட்டத்தின் வழியாக தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்க நினைக்கிறது. இதற்கு இடம் அளிக்கமாட்டோம் என்று தமிழக அரசு கூறி வருகிறது. அதேபோல் 3-வது மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை மாணவ-மாணவிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கடலுார் மாவட்டத்தில் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில், அப்பா எனும் புதிய செயலியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‛‛மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டுகிற கொள்கை தான் புதிய கல்வி கொள்கை. இதனை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறோம்.
இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும். அவர்கள் பத்தாயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2 ஆயிரம் கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால் என்னவாகும்? இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தான் மத்திய அரசு நிதி தராவிட்டால் என்னால் நான் தருகிறேன் என்று கடலூரை சேர்ந்த LKG மாணவி நன்முகை ரூ.10 ஆயிரம் வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக மாணவி நன்முகை பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் மாணவி நன்முகை, ‛‛மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம். நான் LKG படிக்கிறேன். இன்று நீங்கள் கடலூரில் பேசியபோது மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நமக்கு தரவில்லை என்று கூறினீர்கள்.
தமிழ்மொழியை காக்க பாடுபடுவேன் என்றும் கூறினீர்கள். எனது பாலு தாத்தா, சாந்தி பாட்டி, இருவரும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறேன். கடலூரில் இருந்து நன்முகை. வணக்கம் அய்யா” எனத் தெரிவித்தார்.