பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மேற்வங்காளத்தில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிகட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுபோல, அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நிறைவடைகிறது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதற்கான தடுப்பூசி சான்றிதழ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தமிழகம், கேரளா, மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்திள்ளது.